தலையங்கம்

உயர்ந்து வரும் பணவீக்கம்! | பொருளாதார மந்தநிலை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றும், அதை எதிர்கொள்ள கையாண்ட நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு உக்ரைன் - ரஷிய போர், நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
 இதுபோன்ற பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திப்பது புதிதொன்றுமல்ல. முதலாவது உலகப் போருக்குப் பிறகு 1918-இல் தொடங்கிய மந்தநிலை, 1920, 1921 ஆண்டுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 1918 ஸ்பேனிஷ் காய்ச்சல் என்கிற கொள்ளை நோய்த்தொற்றும் சேர்ந்துகொண்டபோது ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் தடம்புரண்டதில் வியப்பில்லை.
 கடந்த 70 ஆண்டுகளில் உலகம் இதற்கு முன்பு நான்கு பொருளாதார மந்தநிலைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1975, 1982, 1991, 2009-ஆம் ஆண்டுகளில் இதேபோல விலைவாசியும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாத மந்தநிலை காணப்பட்டது. இப்போது 2022-இல் கச்சா எண்ணெய் விலையில் தொடங்கி, எல்லா அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்திருக்கின்றன. மேலும் அதிகரிக்கக்கூடிய நிலைமை பரவலாகக் காணப்படுகிறது.
 அமெரிக்கா உள்பட வல்லரசு நாடுகள் அனைத்துமே கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உயர்ந்து வரும் பணவீக்கம் என்கிற அசுரனின் தாக்குதல்தான் முக்கியக் காரணம். அமெரிக்க அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஒரு தலைமுறையில் எதிர்கொள்ளாத அளவில் பணவீக்கம் 8.6% அதிகரித்திருக்கின்றது. குடியிருப்புகள், உணவுப் பொருள்கள், விமானக் கட்டணம், புதிய - பழைய வாகனங்கள் என்று அனைத்துப் பிரிவிலும் அதிகரித்த விலைவாசியை அமெரிக்கக் குடிமகன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.
 பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை கடந்த மே மாதம் முதல் உயர்த்தத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்று வல்லுநர்கள் கருதினாலும், இப்போது இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால், நிலைமை மிகவும் விபரீதத்துக்கு இட்டுச் செல்லும் என்கிற கட்டாயத்தால்தான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
 உலகளாவிய அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையும், விலைவாசி ஏற்றமும், பணவீக்கமும் இந்தியாவையும் பாதிக்காமல் இல்லை. ஏனைய வல்லரசு நாடுகளையும் வளர்ச்சி அடையும் நாடுகளையும் ஒப்பிடும்போது மிகச் சாதுரியமாக நிலைமை கையாளப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, ரஷியாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தமும், ரூபாய் - ரூபிள் வர்த்தகச் செலாவணியும் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து விடாமல் காப்பாற்ற உதவியிருக்கின்றன.
 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகித்தை அடுத்தடுத்த வாரங்களில் 0.50% மற்றும் 0.40% என மொத்தம் 0.90% உயர்த்தியுள்ளது. வங்கிக் கடன் பெற்றவர்கள், தவணைத் தொகை அதிகரிப்பால் பாதிக்கக்கூடும்.
 கடந்த புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், 75 புள்ளிகள் அல்லது 0.75% வட்டி விகிதத்தை உயர்த்தி இந்தியாவுடன் இணைந்து கொண்டது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய பிராந்தியத்திலும் பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கிவிட்டன; அல்லது தொடங்கக் காத்திருக்கின்றன.
 பணவீக்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டம், இத்தகைய ஒருங்கிணைந்த மற்றும் ஆக்ரோஷமான கொள்கை முடிவுகள் வெற்றியைத் தருமா என்பது கேள்வி அல்ல; ஆனால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே கவலை. வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடருமா என்பது சந்தேகம். அமெரிக்க மத்திய வங்கியின் அளவுக்கதிகமான வட்டி விகித உயர்வுகள், "ரிஸஷன்' என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறியாகத் தெரிகிறது.
 அமெரிக்க மத்திய வங்கி அதன் கொள்கை விகிதம் 2022-க்குள் 3.5%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது, இது மார்ச் மாத மதிப்பீட்டை விட 1.5% அதிகமாகும். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய கொள்கை விகிதங்களைத் தெளிவுபடுத்தவில்லை. கடந்த மாதம் வட்டி விகிதங்களை சரியான நேரத்தில் உயர்த்தியது. வட்டி விகித உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான கூர்மையானஆயுதமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பொருளாதார மந்தநிலை காலத்தில் மக்களுக்கு பாரமாகவும் இருந்துவிடக்கூடாது.
 பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல சவால்களுக்கு இடையேயும் இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படவில்லை என்கிற அளவில் நாம் ஆறுதல் அடையலாம். கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் சற்று பின்தங்கினாலும்கூட, 2021-22-இல் அதிவிரைவில் வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. சாதகமான பருவமழையும் அதிகரித்த ஏற்றுமதியும் உதவுமானால், தற்போதைய பணவீக்கப் பிரச்னையை பின்னுக்குத் தள்ளி கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT