தலையங்கம்

பாஜகவின் புதிய இலக்கு!| ஹைதராபாதில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 ஹைதராபாதில் இரண்டு நாள்கள் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் சில முக்கியமான முடிவுகளையும் செயல் திட்டங்களையும் அறிவித்திருக்கிறது. மத்திய ஆளுங்கட்சி என்பதுடன், இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் இருப்பதால், பாஜகவின் முடிவுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருந்த கட்சி என்பது போய், வட மாநிலங்களின் கட்சி என்று வளர்ந்து இப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வரை ஆளுங்கட்சியாக உயர்ந்திருக்கிறது பாஜக. 1977-லும், 1989-லும் ஆட்சிகள் அமைந்ததன் பின்னணியில் ஜனசங்கமும், அதன் மறுபிறவியான பாஜகவும் இருந்தன.
அதுவரை பாஜகவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையை 1998-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஏற்படுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி முறியடித்தது. கொள்கை ரீதியாக பாஜகவுடன் சேரவே முடியாத திமுக, ஐக்கிய ஜனதா தளம், காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவைகூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது, தேசியக் கட்சியாக பாஜக தன்னை வளர்த்துக் கொள்ள உதவியது.
2014-இல் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, முந்தைய வாஜ்பாய் அரசிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. ஆனாலும்கூட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலக்கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு கட்டத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டவை என்பதால், பாஜக தவிர்க்கவும், அசைக்கவும் முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
நரேந்திர மோடி - அமித் ஷா தலைமையில் பாஜக இணைத்துக்கொண்ட புதிய நட்புகளைவிட, இழந்த பழைய கூட்டாளிகள்தான் அதிகம். அதே நேரத்தில், கூட்டாளிகளின் இழப்பால் பாஜக அதிக மாநிலங்களில் வளர்ந்தது என்பதும், பாஜகவுடன் உறவைத் துண்டித்துக் கொண்ட கட்சிகள் செல்வாக்கை இழந்தன என்பதும் கடந்த எட்டாண்டு கால வரலாறு தெரிவிக்கும் உண்மை.
இந்தப் பின்னணியில்தான், ஹைதராபாதில் கூடிய பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களையும், செயல் திட்டங்களையும் நாம் பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சரும், முன்னாள் கட்சித் தலைவருமான அமித் ஷாவால் கட்சியின் வருங்கால இலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கர்நாடகம் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களில், பாஜகவை வலுப்படுத்தி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வளர்ப்பது என்பதுதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்திருக்கும் சூளுரை. குடும்ப அரசியல், ஜாதி அரசியல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஜகவின் வளர்ச்சி அமைய வேண்டும் என்பது அவரது கருத்து. அடுத்த 40 ஆண்டுகள் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாகவும் பாஜகதான் இருக்கும் என்றும் அமித் ஷா அந்த செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கர்நாடகம் தவிர, தெலங்கானா, ஆந்திரம், தமிழகம், கேரளத்தில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பே இல்லாத நிலையில், ஆட்சியைப் பிடிப்பது எப்படி சாத்தியம் என்கிற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மேற்கு வங்க பாஜகவின் நிலைமையை சற்று எண்ணிப் பார்த்தால், அமித் ஷாவின் எதிர்பார்ப்பை நிராகரித்துவிட முடியாது. இடதுசாரிகளும், காங்கிரஸும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இப்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதான அரசியல் எதிரியாக பாஜக உயர்ந்திருக்கிறது.
மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் வலுவிழந்திருக்கும் நிலையில், வலுவான தேசியக் கட்சியின் தேவையை தென்னிந்திய மாநிலங்கள் உணர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமித் ஷா போடும் கணக்கு வெற்றி பெற்றால் வியப்பே இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் "நட்புறவுப் பயணம்' (ஸ்நேக யாத்ரா) அறிவுறுத்தல் இன்னொரு முக்கியமான செய்தி. முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மையினர் மத்தியில் பாஜக குறித்த தவறான கருத்துகளை அகற்றும் வகையில் தொண்டர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். பாஜக ஆட்சியில் எந்தவொரு மக்கள் நலத் திட்டத்திலும் சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படவோ, புறக்கணிக்கப்படவோ இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில், அவர்களைத் தேடிச் சென்று விளக்க வேண்டும் என்பதுதான் அவரது "நட்புறவுப் பயண' அறிவுரை.
உத்தர பிரதேசத்திலும், பல வடமாநிலங்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில்கூட பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பது எந்த அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதே அணுகுமுறையை, அடித்தளம் இல்லாத தென்னிந்திய மாநிலங்களிலும் கடைப்பிடிப்பது பாஜக தலைமையின் நோக்கமாக இருக்கலாம்.
எந்தவொரு அரசியல் கட்சியும் தன்னை வளர்த்துக் கொள்ளவும், அதன் மூலம் கொள்கைகளைப் பரப்பவும் முனைப்புக் காட்டுவது இயல்பு. தென்னிந்தியாவில் வலுவிழந்த காங்கிரஸ் ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை பாஜக நிரப்ப நினைத்தால் அதில் தவறு காண முடியாது. தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்பது தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்கும், வருங்காலத்துக்கும் நல்லதல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT