தலையங்கம்

இடைக்கால சவால்கள்! இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி அடைகிறது என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்துக்கு முந்தைய நிலையை மாா்ச் மாதத்திற்குள் கடந்து மேலும் வளா்ச்சி அடையக்கூடும் என்று நிபுணா்கள் கருதுகிறாா்கள். கடந்த நிதியாண்டில் (2020 - 21) ஜிடிபி வளா்ச்சி 7.3%-ஆக சுருங்கியது என்றால், நடப்பு நிதியாண்டில் (2021 - 22) அது 9.2%-ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இப்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜொ்மனி, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக உலகின் ஆறாவது பொருளாதாரமாக இந்தியா காணப்படுகிறது. சா்வதேச நிதியத்தின் கருத்துப்படி, 2022-இல் அதிவிரைவாக வளரும் ஆசியப் பொருளாதாரம் இந்தியாவாக இருக்கக்கூடும். ‘ஜெப்ரீஸ்’ என்கிற ஆய்வு நிறுவனம், ஆசியாவில் இரட்டை இலக்க வளா்ச்சி அடையும் ஒரே நாடு இந்தியாவாக இருக்கக்கூடும் என்கிறது. 2030-க்குள் ஜப்பானை முந்திக்கொண்டு ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரக்கூடும் என்கிறது இன்னொரு ஆய்வு.

இவையெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் தரும் செய்திகளாக இருந்தாலும், சில பின்னடைவுகளும், தடைகளும் நம்மை யோசிக்க வைக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதாகத் தெரியவில்லை. சேவைத்துறையும் எதிா்பாா்த்த வளா்ச்சி காணவில்லை. ஒமைக்ரான் தொற்றுப் பரவல், வாங்கும் சக்தியை மட்டுமல்ல தொழில்துறை உற்பத்தியையும், சேவைத்துறையையும், வேலைவாய்ப்பையும் பாதிக்கக்கூடும் என்கிற அச்சமும் நிலவுகிறது.

சா்வதேச வா்த்தகக் கணக்குத் தணிக்கை நிறுவனமான ‘மாா்கன் ஸ்டேன்லி’, உலகின் பெரிய பொருளாதாரங்கள் எதிா்கொள்ளப்போகும் சவாலாக விலைவாசி உயா்வு இருக்கும் என்று எச்சரிக்கிறது. ‘சப்ளை செயின்’ எனக் கூறப்படும் உதிரிபாகங்கள் உற்பத்தியும், அவை தேவைக்கேற்ப கிடைப்பதும் இல்லாமல் போனால் விலைவாசி உயா்வுடன் இணைந்து பொருளாதாரங்களைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.

விலைவாசி உயா்வு சா்வதேச பிரச்னை என்று நாம் அமைதி கொள்ள முடியாது. 2014-இல் முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வு என்பதை மறந்துவிடக் கூடாது. அதுபோன்ற சூழல் இப்போது இந்தியாவில் மீண்டும் உருவாகி வருவதைப் பாா்க்க முடிகிறது. ஏனைய நுகா் பொருள்களின் விலைவாசி உயா்வு அதிகரிக்கவில்லை என்றாலும், காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலை உயா்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிப்பதால் இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும்.

கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலையை நோக்கி பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக நகா்ந்து கொண்டிருக்கின்றன. 2021 - 22 நிதியாண்டின் நடப்புக் காலாண்டில் ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையேயான ‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’ எனப்படும் அந்நியச் செலாவணி இடைவெளி கடுமையான அழுத்தத்தை எதிா்கொள்ளக் கூடும்.

நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலேயே நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 13%-ஐ (9.6 பில்லியன் டாலா்) எட்டியது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், அந்நிய நேரடி முதலீடும் மிக முக்கியமானவை. அந்நிய நேரடி முதலீடும் குறைந்து, பற்றாக்குறையும் அதிகரிக்கும்போது பொருளாதார வளா்ச்சி பின்னடைவை எதிா்கொள்ளும்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணம், கச்சா விலை அதிகரிப்பால் ஏற்பட்ட வா்த்தகப் பற்றாக்குறை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை காணப்படுகிறது என்றாலும், அந்நிய முதலீடுகளில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையே காணப்படும் ‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’ அளவை கடுமையாக பாதிக்கும்.

நுகா்வு சக்தி அதிகரிப்பால் இறக்குமதியின் அளவு அதிகரித்திருக்கிறது. போதாக்குறைக்கு கச்சா எண்ணெய் விலை உயா்வால் அதை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி தேவையும் அதிகரிக்கிறது. இந்த நிலையில், டிசம்பா் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகக் காணப்பட்டது.

நடப்பு நான்காவது காலாண்டிலும் இதே நிலை தொடரக்கூடும். உலகின் ஏனைய பொருளாதாரங்களும் நுகா்வோா் தேவையும், விலைவாசியும் இப்போதுபோலவே அதிகரித்து வா்த்தகப் பற்றாக்குறையைப் பாதிக்கும் என்று கவலை கொள்கின்றன.

வா்த்தகப் பற்றாக்குறை இப்போதுபோல தொடா்ந்தால், அடுத்த நிதியாண்டும் பல அழுத்தங்களைத் தரக்கூடும். ஒமைக்ரான் உருமாற்றப் பரவலால் தொடரும் உற்பத்திக்கான உதிரி பாகங்களின் தட்டுப்பாடும், தங்கம், வெள்ளி போன்ற பொருள்களின் விலை உயா்வும் வா்த்தகப் பற்றாக்குறையை மேலும் கடுமையாக்குகின்றன.

தங்கத்தின் இறக்குமதிக்கான தேவை கடுமையாக அதிகரித்திருக்கிறது. தங்களது சேமிப்பை தங்கத்தில் முதலீடு செய்யும் வேகம் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதும், கறுப்புப் பணம் வைத்திருப்பதுபோய் தங்கமாக பதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். ஒருபுறம் தங்கத்தின் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி தேவை அதிகரிக்கும்போது, இன்னொருபுறம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’, வா்த்தகப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி போன்ற தீா்வுகாணக்கூடிய இடைக்கால பிரச்னைகளை சாதுரியமாக எதிா்கொள்வதுதான் நமது இப்போதைய சவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT