தலையங்கம்

மாலுமிகளைக் காப்பாற்றுங்கள்! | கினி நாட்டினால் சிறைப்பிடிக்கப்பட்ட 26 இந்திய மாலுமிகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை' என்கிற திரைப்படப் பாடல் வரிக்கு உதாரணமாக அமைந்திருக்கிறது, 26 இந்திய மாலுமிகளின் நிலைமை. மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்க நாடான ஈக்வடாரியல் கினியில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் அவர்களது வருங்காலம் என்ன என்பது தெரியாமல், இந்தியாவிலுள்ள அவர்களின் குடும்பத்தினர் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.
 16 இந்திய மாலுமிகள் உள்பட 26 மாலுமிகள், நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.டி. ஹிரோயிக் இடன் என்கிற சரக்குக் கப்பலில் பணியாற்றுகிறார்கள். ஆகஸ்ட் 9-ஆம் தேதி கினி நாட்டுக் கடற்படை அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்து, தன் வசத்தில் (கஸ்டடி) எடுத்துக் கொண்டது. கப்பலைப் பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், அதில் பணிபுரியும் மாலுமிகளும் கைது செய்யப்பட்டனர்.
 மாலுமிகள் சிலர் கப்பலிலும், சிலர் கரையிலுள்ள ஹோட்டலிலும் காவலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தி, மூன்று வாரங்களுக்குப் பின்னர்தான் தெரியவந்தது. நைஜீரியாவிலும், கினியிலும் தனது தூதரகங்கள் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயன்றும்கூட எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
 சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 16 மாலுமிகளில் மூன்றுபேர் தமிழர்கள். தூத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் பிரின்டன், சென்னையைச் சேர்ந்த ராஜன் தீபன்பாபு, ஆம்பூரைச் சேர்ந்த சுகுமார் ஹர்ஷா ஆகிய மூவரும் தமிழர்கள். கேரளத்தைச் சேர்ந்த மூன்று மாலுமிகளும் இருக்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த மாலுமி ஒருவரும் இருப்பதால், அந்நாட்டு அரசின் சார்பிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 ஹிரோயிக் இடன் என்கிற நார்வேயைச் சேர்ந்த அந்த சரக்குக் கப்பல், நைஜீரியாவிலுள்ள போனி துறைமுகத்தில் கச்சா எண்ணெய்யைக் களவாடச் சென்றது என்பதுதான் குற்றச்சாட்டு. நைஜீரிய கடல் எல்லைக்குள் அந்தக் கப்பல் நுழைந்தது என்னவோ உண்மை. அப்போது, நைஜீரிய கடற்படையின் ரோந்துப் படகு அதைச் சுற்றி வளைத்தது. அதைப் பார்த்ததும், ஹிரோயிக் இடன் கப்பல், நைஜீரிய கடல் எல்லையிலிருந்து விரைந்து வெளி யேறியது.
 நைஜீரிய அதிகாரிகளின் தகவலைத் தொடர்ந்து, ஈக்வடாரியல் கினி கடற்படை அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்தியது. நைஜீரிய கடற்படையின் ரோந்துப் படகை, கடற்கொள்ளையர்களின் படகு என்று கருதி பயந்து விரைந்து சென்றதாக "ஹிரோயிக் இடன்'
 கப்பலின் தலைமை மாலுமி தெரிவித்த விளக்கத்தை நைஜீரியாவும், கினியும் ஏற்பதாக இல்லை.
 கினி நாட்டு கடல் எல்லைக்குள், அவர்களது கொடியை ஏற்றாமல், முன் அனுமதி பெறாமல் நுழைந்தது முதல் வழக்கு. அதற்கான அபராதமாக 25 லட்சம் டாலர் செலுத்த முற்பட்டது கப்பல் நிறுவனம். ஆயினும், நைஜீரியா விடுவதாக இல்லை. மாலுமிகளை கினியின் மலபோ துறைமுகத்திலிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
 மாலுமிகள் நைஜீரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தாங்கள் எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக மாலுமிகளுக்காக செயல்படும் "செய்லர்ஸ் சொசைட்டி' தெரிவிக்கிறது. அவர்கள் கப்பலிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த விசாரணை ஜனவரி மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
 நார்வேயின் பிரபல கப்பல் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற கப்பலில் வேலை பார்க்கும் பணியாளர்களைக் கைது செய்து மூன்று மாதங்கள் வரை அவர்களின் குடும்பத்தினரிடம்கூடத் தெரிவிக்காமல் இருந்ததும், அவர்களின் தாய்நாட்டு அரசுக்குக்கூடத் தெரிவிக்காமல் இருந்ததும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகள். கப்பல் சட்டவிரோதமாக செயல்பட்டது என்றால், அதன் தலைமை மாலுமியைக் கைது செய்யலாம் அல்லது கப்பலைப் பிடித்து வைக்கலாம், நடவடிக்கை எடுக்கலாம். அதில் பணியாற்றும் தொழிலாளர்களைக் காவலில் வைப்பது என்பது மனித உரிமை மீறல் என்று நைஜீரிய அரசுக்குத் தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
 இதுபோன்ற நிகழ்வுகளில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டிய "இன்டர்நேஷனல் மேரிடைம் ஆர்கனைசேஷன்', ஹிரோயிக் இடன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளுக்கு உதவாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. கப்பலில் பணியாற்றும் 26 மாலுமிகளையும் விடுவிக்கக் கோரி, ஐ.நா. சபையின் கடல் சட்டம் (லா ஆஃப் த ஸீ) பிரிவு 292-இன் கீழ் சர்வதேச ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 மாதக்கணக்கில் கடலில் தங்களது வாழ்வைக் கழிக்கும் சரக்குக் கப்பல் மாலுமிகளின் துன்பங்கள் சொல்லி மாளாது. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், குடும்பங்களிலிருந்து பிரிந்து அவர்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் அலைகடலில் பயணிக்கும் பரிதாபம் குறித்தும் வெளி உலகத்துக்குத் தெரிகிறது. ஓரிரு ஆண்டுக்கு ஒருமுறைதான் தங்கள் மனைவி, மக்களையும் பெற்றோர் உறவினர்களையும் பார்க்க முடியும் என்கிற வேதனை போதாதென்று, இதுபோன்ற சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை அவர்களுடையது.
 இந்தியாவில் மட்டும் நான்கு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சரக்குக் கப்பல்களில் பணிபுரிகிறார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கும், வருங்காலத்துக்கும் சர்வதேச அளவில் இதுவரை எந்தவித உத்தரவாதமும் முன்னெடுக்கப்படவில்லை. ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித அனுகூலங்களும் சரக்குக் கப்பல் தொழிலாளர்களுக்குக் கிடையாது. குறைந்தபட்சம், அவர்களது பாதுகாப்பையாவது உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT