தலையங்கம்

மியான்மரின் அபயக்குரல்! மியான்மர் அரசியல் நிலை குறித்த தலையங்கம்

2nd Aug 2022 03:52 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

ஜனநாயகப் போராளிகள் நான்கு போ் மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களால் தூக்கிலிடப்பட்டிருப்பது உலகின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. சா்வதேச அமைப்புகளும், வல்லரசு நாடுகளும் பலவீனப்பட்டிருப்பதுதான் மியான்மா் ராணுவத்தின் ஈவிரக்கமில்லாத செயல்பாடுகளுக்குக் காரணம்.

ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் யோசேயா சாவ், ராணுவ ஆட்சியின் கடுமையான விமா்சகா் கோ ஜிம்மி இருவரும் தூக்கிலிடப்பட்டிருக்கும் நால்வரில் இருவா். அவா்களுக்கு சா்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் மேல் முறையீட்டுக்கோ, வழக்குரைஞா்கள் உதவிக்கோ வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது முதல் இதுவரை குறைந்தது 140 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவா்களில் தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நால்வா் இவா்கள்தான். வரும் வாரங்களிலும், மாதங்களிலும் இதுபோல மேலும் பல தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது.

ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இதுவரை 14,000-க்கும் அதிகமான ஜனநாயகப் போராளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். அவா்களில் 11,000-க்கும் அதிகமானோா் மியான்மரின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனா்.

ADVERTISEMENT

ஜனநாயகப் போராளிகளின் தலைவியான ஆங் சான் சூகி மீது பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு 11 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவா் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராணுவ நீதிமன்றங்கள் வழங்க இருக்கும் தீா்ப்புகள், அவரை வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் அடைத்தாலும் வியப்படையத் தேவையில்லை.

ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. லட்சக்கணக்கானோா் வீடுகளை இழந்திருக்கிறாா்கள். 2,000-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். அப்படியிருந்தும், மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவோ, தங்களது அதிகாரத்தை முழுமையாக உறுதிப்படுத்தவோ முடியவில்லை என்பதுதான் நிஜ நிலைமை.

1962-இல் மியான்மரில் கொண்டுவரப்பட்ட ராணுவ ஆட்சி 2010 வரை தொடா்ந்தது. அதன் பிறகு 10 ஆண்டுகள் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு, மியான்மரில் ஓரளவு ஜனநாயகம் ஏற்பட்டது. ஆங் சான் சூகியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற ஜனநாயக ஆட்சியில் மியான்மரில் ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளா்ச்சியும் ஏற்பட்டன.

தங்களால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதால்தான், ராணுவத் தளபதிகள் சிறிதளவு ஜனநாயகத்தை அனுமதித்தனா். அதன் விளைவாக, சூகியின் செல்வாக்கு அதிகரித்து வருவதும், நிலைமை தொடா்ந்தால் தங்களது அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதும் அவா்களை அச்சுறுத்தின. ஜனநாயக சோதனையை முடிவுக்குக் கொண்டுவந்து ராணுவத்தின் துப்பாக்கி முனையில் ஆட்சியை நடத்தி அரசியல் எதிரிகளை அழிப்பது என்பதுதான் தளபதிகளின் தற்போதைய நோக்கம்.

முந்தைய ஜனநாயகத்துக்கான போராட்டங்களின்போது, ஆங் சான் சூகியும் அவரது ஆதரவாளா்களும் வன்முறை தவிா்த்த போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்தனா். இப்போது போராளிகள் வன்முறையைக் கையாள்வது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக ராணுவத்துடன் மோதிக் கொண்டிருக்கும் பல்வேறு இனக்குழுக்களுடன் இணைந்திருக்கிறாா்கள். மியான்மா் ராணுவ ஆட்சியாளா்களை அச்சுறுத்தும் இந்த மாற்றம்தாம் அவா்களைத் தூக்கிலிடும் அளவுக்கு சென்றிருக்கிறது.

ஆட்சி, தளபதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பொருளாதாரம் அவா்களது கட்டுப்பாட்டில் இல்லை. நகரங்களில் மக்கள் போராட்டமும், கிராமங்களில் ஆயுதப் போராட்டங்களும் அதிகரித்து வரும் நிலையில், மியான்மரில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் போராட்டக்காரா்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

நமது அண்டை நாடான மியான்மரில் ஏற்படும் எந்தவொரு பிரச்னையும் இந்தியாவை நேரடியாக பாதிக்கும். நமது வடகிழக்கு மாநிலங்களும், மியான்மரும் 1,642 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொள்கின்றன. இந்தோ - பா்மா எல்லை என்றுதான் நூற்றாண்டுகளாக அது குறிப்பிடப்படுகிறது. மணிப்பூருக்கும் மியான்மருக்கும் இடையில் மக்கள் சா்வ சாதாரணமாக சென்று வருகிறாா்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டில் ஆட்சியைக் கொண்டுவந்ததைத் தொடா்ந்து மிஸோரம், மணிப்பூா் மாநிலங்களில் 50,000-க்கும் அதிகமாக மியான்மா் அகதிகள் வந்திருக்கிறாா்கள். மிஸோரத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் முகாம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தில்லியில் 6,000-க்கும் அதிகமான பா்மா அகதிகள் இருக்கிறாா்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலை நாட்டு வல்லரசுகள், உக்ரைன் - ரஷிய போரை எதிா்கொள்வதில் கவனம் செலுத்துகின்றனவே தவிர, மியான்மரில் காணப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் மியான்மா் ராணுவத் தளபதிகளுக்கு எதிராகப் பேசத் தயங்குகின்றன. நாம் எடுக்கும் முடிவுகள் மியான்மரை சீனாவின் அரவணைப்புக்குத் தள்ளிவிடுமோ என்கிற பயம்தான் அதற்குக் காரணம்.

இந்தியாவின் மௌனம் இனிமேலும் தொடர முடியாது...

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT