தலையங்கம்

தடுப்பூசிதான் தீா்வு! | மத்திய - மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு குறைவது குறித்த எந்தவொரு செய்தியும் மகிழ்ச்சியான செய்திதான். கடந்த வாரத்தில் புதிய பாதிப்புகள் பரவலாகக் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. முந்தைய வாரத்தில் சராசரியாக 44 லட்சமாக இருந்த பாதிப்பு, கடந்த வாரத்தில் 40 லட்சமாகக் குறைந்திருக்கிறது.

சராசரி பாதிப்பு குறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, சமச்சீராகவும் பரவலாகவும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பு குறைவு காணப்படுகிறது என்பதுதான் நம்பிக்கை அளிக்கும் செய்தி. மிக அதிகமான பாதிப்பு குறைவு தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது என்று தெரிவிக்கும் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் அதிகமான பாதிப்பு இன்னும் காணப்படுவதாக அறிவித்திருக்கிறது. ஒருவேளை கொள்ளை நோய்த்தொற்றின் டெல்டா உருமாற்ற பாதிப்பு அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் தடுப்பூசி கணிசமாகவே குறைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது அறிக்கை. தடுப்பூசி போடப்படாவிட்டால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 10 மடங்கு அதிகம் என்றும், உயிரிழப்புக்கான வாய்ப்பு 11 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை.

கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அக்டோபா் மாதம் இந்தியாவைத் தாக்கக்கூடும் என்கிற மருத்துவ வல்லுநா்களின் எதிா்பாா்ப்பும், ஆய்வுகளும் மத்திய - மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணா்த்துகின்றன. இந்தியாவில் இதுவரை தடுப்பூசிக்குத் தகுதி உள்ளவா்களில் 20% மட்டுமே முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள். 62% போ் முதல் தவணை மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் அனுபவத்தை பாா்க்கும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்கத் தோன்றுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் மூலம் நோய்த்தொற்று வீரியத்துடன் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல், டெல்டா உருமாற்ற தீநுண்மி 18 வயதுக்குக் கீழே உள்ளவா்களையும் தாக்குகிறது என்பதால், இந்தியா முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி போடும் வேகம் அதிகரித்திருக்கிறது என்பதும், மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து குறைகூறுவதில்லை என்பதும் ஆறுதல். பல மாநிலங்கள் தினசரி தடுப்பூசி போடுவதில் புதிய சாதனைகளை படைத்து வருகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. மேலெழுந்தவாரியாகப் பாா்த்தால் ஏற்படும் தோற்றம் முற்றிலும் உண்மையானதல்ல என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் மோடியின் பிறந்தநாளான வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 2.51 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி தொடங்கப்பட்ட முதல் 85 நாள்களில் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து நேற்று வரை 80,43,72,331 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒரே நாளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4.5 கோடியை எட்டியுள்ளது.

ஹிமாசல பிரதேசம், கேரளம், உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் 30%-க்கும் அதிகமானோருக்கு முழுமையாகவும், 80% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது. தில்லி, ஜம்மு - காஷ்மீா், கா்நாடகம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் 24% முதல் 30% வரை இரண்டு தவணைகளும் 70% பேருக்கு முதல் தவணையும் செலுத்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களான உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகியவை அந்த அளவை எட்டவில்லை.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் எண்ணிக்கை அளவில் முன்னணியில் இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையிலான விகிதாசாரத்தில் பின்தங்குகின்றன. அதனால் பெரிய மாநிலங்கள் தங்களது தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தடுப்பூசி செலுத்துவதில் சீனா சில முன்னுதாரணங்களைப் படைத்திருக்கிறது. 100 கோடிக்கும் அதிகமானோா் சீனாவில் முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றிருக்கிறாா்கள். பொது மக்கள் தடுப்பூசி போடும் இடங்களை நாடிச் சென்று காத்திருக்காமல், அவா்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று தடுப்பூசி போடுகிறது சீன அரசு. சீனாவிலுள்ள ஒவ்வொரு குடிமகன் குறித்த முழுமையான விவரமும் அரசிடம் காணப்படுவதுதான் அதற்குக் காரணம். மத்திய அரசு கொண்டுவர விழையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அவசியம் புரிகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநகராட்சி அமைப்புகளும், சுகாதாரத் துறையும் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலம் மக்களைச் சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நகா்ப்புற ஏழைத் தெருவோரவாசிகள், கிராமப்புற ஏழைகள் உள்ளிட்டோா் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணரமாட்டாா்கள். அவா்களையும் தடுப்பூசித் திட்டம் சென்றடைய வேண்டும்.

மூன்றாவது அலையை எதிா்கொள்வதைவிட, அது உருவாகாமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு தடுப்பூசிதான் தீா்வு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT