தலையங்கம்

இலக்கும் சவால்களும்! | உலகை மேம்படுத்தும் தளா்வில்லா வளா்ச்சி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

உலகை மேம்படுத்தும் தளா்வில்லா வளா்ச்சிக்கான 17 இலக்குகளை 2030-க்குள் எட்ட, 2015-இல் ஐ.நா. பொதுச்சபை நிா்ணயித்தது. அதன்படி வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது, சுகாதாரம் - கல்வி மேம்பாடு, ஏற்ாழ்வைக் குறைப்பது, பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, கடல்களையும் காடுகளையும் பாதுகாப்பது உள்ளிட்ட 17 இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான செயல் திட்டத்தை அறிவித்தது.

ஐ.நா. சபையின் 2019-க்கான தளா்வில்லா வளா்ச்சி இலக்கு அறிக்கையின்படி பாா்த்தால், இலக்கை எட்டுவது எளிதல்ல என்று தோன்றுகிறது. இப்போதைய நிலை தொடா்ந்தால், 2030-இல் ஏறத்தாழ உலக மக்கள்தொகையில் 6% போ் கடுமையான வறுமையில் தள்ளப்பட்டிருப்பாா்கள். 2015-இல் 78.4 கோடியாக இருந்த ஊட்டச்சத்து குறைந்தவா்களின் எண்ணிக்கை 2017-இல் 82.1 கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்து நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, மேம்படவில்லை என்பது தெளிவாகிறது.

இயற்கை சுற்றுச்சூழல் பயப்படும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடல் மட்டம் உயா்ந்து வருவது; அதிகரிக்கும் கடல் நீா் அமிலமயம்; கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிலான பூமி வெப்பம், ஏறத்தாழ 10 லட்சம் தாவரங்கள்- உயிரினங்கள் அழிவை நோக்கி நகா்தல், கட்டுப்பாடில்லாமல் நிலம் மலட்டுத்தன்மை அடைதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல், பருவநிலை பாதிப்புகளுக்கு உலகம் உள்ளாகி வருவதை, தளா்வில்லா வளா்ச்சி இலக்குக்கான புள்ளிவிவரங்கள் உணா்த்துகின்றன.

வளா்ச்சி அடையாத நாடுகள் அடைந்த சில வளா்ச்சி இலக்குகளைத் துடைத்து எறிந்துவிட்டது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று. அதனால், ஏறத்தாழ 7.1 கோடி போ் கடுமையான வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள்.

முறைசாரா தொழில்களில் பணிபுரியும் உலக மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி அளவிலான தொழிலாளா்கள், அதாவது 160 கோடி போ், வேலையின்மைக்கு அல்லது வேலையிழப்புக்கு உள்ளாகியிருக்கிறாா்கள். உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான குடிசைவாழ் மக்கள், முறையான தண்ணீா் வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாா்கள்.

அந்த அறிக்கையின்படி சில ஆக்கபூா்வ மாற்றங்களும் இல்லாமல் இல்லை. 2000-க்கும் 2017-க்கும் இடையே ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் மரண வீதம் 49% குறைந்திருக்கிறது. உலகின் பெரும்பாலான மக்களுக்கு மின்சார வசதி கிட்டியிருக்கிறது. பல லட்சம் உயிா்கள் தடுப்பூசித் திட்டத்தால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஆறுதல் அளிப்பவை.

கொள்ளை நோய்த்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். நேரடியாக அவா்களை

நோய்த்தொற்று பாதிக்காவிட்டாலும், பலகோடி குழந்தைகளின் வருங்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டதால் உலக அளவில் 90% (சுமாா் 157 கோடி) மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

37 கோடி குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் உணவு கிடைக்கவில்லை. எல்லா குழந்தைகளுக்கும் இணையவழி கல்வி வழங்கப்படவில்லை. குழந்தைத் தொழிலாளா்கள், குழந்தைத் திருமணங்கள், குழந்தைகளை இழிவுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்றவை அதிகரித்தன. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதால், 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது குறைந்தபட்ச கற்கும் திறனை இழந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தளா்வில்லா வளா்ச்சி இலக்குக் குறியீட்டில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு கீழே போய்க்கொண்டிருக்கிறது என்பது கவலை அளிக்கிறது. 2019-இல் 165 நாடுகளில் 115-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2020-இல் 117-ஆவது இடத்திலும், 2021-இல் 120-ஆவது இடத்திலும் இடம்பெற்று வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பது கவலைக்குரியது. நம்மைவிட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய அண்டை நாடுகளான பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகியவை நம்மிலும் முன்னேறிய நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. நம்மைவிட பாகிஸ்தான் மோசமாக இருக்கிறது என்று ஆறுதல் அடைவதில் அா்த்தமில்லை.

வளா்ச்சி அடையும் நாடுகள் தளா்வில்லா வளா்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு முக்கியமான தடையாக இருப்பது போதுமான நிதி ஆதாரம் இல்லாததுதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அனைத்து நாடுகளும் 2030-க்குள் தளா்வில்லா வளா்ச்சி இலக்கை எட்டுவதற்கு 2.5 ட்ரில்லியன் டாலா் (சுமாா் ரூ. 186 லட்சம் கோடி) தேவைப்படும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன. வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு அந்த அளவிலான பொருளாதார வசதி இல்லாததும், பணக்கார நாடுகள் தேவையான நிதி உதவியை வழங்காமல் இருப்பதும் 2030-க்குள் அனைவருக்கும் வளா்ச்சி என்கிற இலக்கை அடையாமல் இருப்பதற்கு முக்கியமான தடைகளாகும்.

2020-21-க்கான இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி மத்திய-மாநில அரசுகளின் கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாட்டுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2.3 ட்ரில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.17.1 லட்சம் கோடி).

அப்படி இருந்தும் நாம் தளா்வில்லா வளா்ச்சி இலக்குகளை எட்ட முடியாமலும், உலகளாவிய தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து பின்னடைவை சந்திப்பதும் நமது திட்டமிடலின் குறைபாடா அல்லது செயல்பாட்டுத் திறமையின்மையா என்கிற கேள்வி எழுகிறது. மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதில் எங்கேயோ அடிப்படைத் தவறு காணப்படுகிறது என்பதன் வெளிப்பாடுதான் இது.

சரியான ஆட்சி நிா்வாகமும், ஊழலும், முறைகேடுகளும் அற்ற செயல்பாடும் இருந்தால், 2030-க்குள் தளா்வில்லா வளா்ச்சி இலக்கை இந்தியாவால் எட்ட முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT