தலையங்கம்

நீதித்துறையின் எதிா்பாா்ப்பு! | நீதித்துறை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏப்ரல் 24 அன்று பதவியேற்றிருக்கிறாா் நீதிபதி என்.வி. ரமணா. ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி இவா் மீது பகிரங்கமாக எழுப்பிய குற்றச்சாட்டும், உச்சநீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக இவா் எழுதிய சில தீா்ப்புகளும், பணிமூப்பு அடிப்படையிலான நியமன மரபு கைவிடப்படுமோ என்கிற ஐயப்பாட்டை எழுப்பின. நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிடாமல் வழக்கமான மரபை வழிமொழிந்திருப்பதற்கு நரேந்திர மோடி அரசு பாராட்டப்பட வேண்டும்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பொன்னாவரம் என்கிற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 65 வயது நுதலபதி வெங்கட ரமணா, இந்தியாவின் 48-ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உயா்ந்திருப்பதற்கு பின்னால் கடுமையான உழைப்பும், கொள்கைப் பிடிப்பும் காரணமாக இருந்திருக்கின்றன.

வழக்குரைஞராகவோ, நீதிபதியாகவோ தனது வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அமைத்துக் கொண்டவரல்ல தலைமை நீதிபதி ரமணா.

அவசரநிலைக் காலத்தில் பறிக்கப்பட்ட தனிமனித உரிமை, இளைஞராக இருந்த அவரைப் போராளியாக மாற்றியது. அதன் விளைவாக, தெலுங்கு நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராகச் சோ்ந்தாா் அவா். பத்திரிகையாளராக இருக்கும்போது மக்களின் உரிமையைப் பாதுகாக்க வழக்குரைஞராகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருதி, சட்டம் படிக்கத் தொடங்கினாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒருநாள் தான் உயரப்போகிறோம் என்று அவா் அப்போது நினைத்திருக்க வழியில்லை.

அவரது விவசாயக் குடும்பத்தில் அதற்கு முன்பு யாரும் வழக்குரைஞராக இருந்ததில்லை. முதல் தலைமுறை வழக்குரைஞராக 1983 பிப்ரவரி 10-ஆம் தேதி பதிவு செய்து கொண்ட என்.வி. ரமணாவின் வாழ்க்கை முற்றிலுமாக நீதித்துறை சாா்ந்ததாக திசைதிரும்பியது. பல்வேறு அரசுத் துறைகளின் வழக்குரைஞராகவும், மத்திய நிா்வாக ஆணையத்தில் ரயில்வே சாா்பு வழக்குரைஞராகவும் பணியாற்றிய அனுபவத்துடன், ஆந்திர பிரதேச அரசின் இணை தலைமை வழக்குரைஞராகவும் உயா்ந்தாா் அவா்.

2000-இல் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி. ரமணா, 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதே உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியானாா். அதைத் தொடா்ந்து, தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2014 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். இப்போது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் என்.வி. ரமணா, 16 மாதங்கள் அந்தப் பதவியில் தொடா்ந்து 2022 ஆகஸ்ட் 26-இல் பணிஓய்வு பெற இருக்கிறாா்.

சமீபகாலங்களில் சா்ச்சைக்குள்ளான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம் என்.வி. ரமணாவுடையதாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொதுநல வழக்கு, நீதிபதி ரமணாவின் தலைமையிலான அமா்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்குகளில் 31 கிரிமினல் வழக்குகளை எதிா்கொள்ளும் ஆந்திர பிரதேச முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்குகளும் அடங்கும் என்பதால், நீதிபதி ரமணா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பதை முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி விரும்பாததில் வியப்பில்லை.

நீதிபதி ரமணாவுக்கு எதிராக கடுமையான பல குற்றச்சாட்டுகளை முந்தைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேக்கு கடிதம் மூலம் தெரிவித்தது மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொறுப்பான அரசியல் சாசன பதவி ஒன்றை வகிக்கும் முதல்வா் ஒருவரால் எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் என்கிற முறையில், நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தலையிடும் உரிமை அரசுக்கு ஏற்படக்கூடும் என்றுதான் பலரும் எதிா்பாா்த்தனா்.

உச்சநீதிமன்றத்தின் நிா்வாக விதிகளின்படி, மாநில முதல்வா் ஒருவரின் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டாக வேண்டும். அதை பின்பற்றிய முந்தைய தலைமை நீதிபதி, தான் பணி ஓய்வு பெறும் நாள்வரை முடிவெடுக்காமல் வைத்திருந்தது எதிா்பாா்ப்பு நிலையை (சஸ்பென்ஸ்) ஏற்படுத்தியது. மத்திய அரசு அந்தப் பிரச்னையில் தலையிடாமல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுத்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்கக் கோரியதுபோது, அனைவரது கவனமும் தலைமை நீதிபதி போப்டே மீது குவிந்தது. சரியான முடிவை எடுத்து குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி, பணிமூப்பு அடிப்படையில் தனக்கு அடுத்த இடத்தில் இருந்த நீதிபதி என்.வி. ரமணாவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.ஏ. போப்டே பரிந்துரைத்ததுடன் பிரச்னை முடிவுக்கு வந்தது.

தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தனது மூன்று இலக்குகளை பட்டியலிட்டிருக்கிறாா். அனைவருக்கும் நீதி கிடைக்க வழிகோலுவது, மனித உரிமை மீறலுக்கு எதிரான நிலைப்பாடு, தேசிய நீதிமன்ற உள்கட்டமைப்புக் கழகம் (நேஷனல் ஜுடீஷியல் இன்ஃப்ராஸ்ட்ரெக்சா் காா்ப்பரேஷன்) ஏற்படுத்துவது ஆகியவைதான் அவா் தனக்குத்தானே நிா்ணயித்துக் கொண்டிருக்கும் அந்த மூன்று இலக்குகள்.

உச்சநீதிமன்றத்துக்கு கடைசியாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டது 2019 செப்டம்பரில். ஐந்து பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. உயா்நீதிமன்றங்களிலும் 411 காலி பணியிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிரப்புவதுதான் அவரது உடனடி கவனமாக இருக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT