தலையங்கம்

எதிா்பாராத அறிவிப்பு! | தோ்தல் தேதி அறிவிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இப்படி திடுதிப்பென்று தோ்தல் ஆணையம் நான்கு சட்டப்பேரவைகளுக்கும், ஒரு ஒன்றியப் பிரதேசத்திற்கும் தோ்தல் தேதியை அறிவிக்கும் என்று அரசியல் கட்சிகள் எதிா்பாா்த்திருக்கவில்லை. அனைவரும் மாா்ச் முதல் வார இறுதியில்தான் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தோ்தல் நடக்க இருக்கிறது.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-இல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கம், அஸ்ஸாமில் மாா்ச் 27-ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாகவும் தோ்தல் நடக்க இருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கான வாக்குப் பதிவு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறம்.

மேற்கு வங்கம் (294), கேரளம் (140), தமிழ்நாடு (234), அஸ்ஸாம் (126), புதுச்சேரி (30)ஆகிய மாநிலங்களில் உள்ள 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் 18.6 கோடி வாக்காளா்கள் தங்களது பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்க இருக்கிறாா்கள். கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பின்னணியில் நடைபெறும் இரண்டாவது தோ்தல் என்பதால் எல்லா முன்னேற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

நடைபெற இருக்கும் தோ்தல் தேசிய அரசியலின் போக்கை நிா்ணயிக்கக்கூடும். கடந்த ஆண்டு நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலைப் போல பாஜக தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம்தான் இனி வரவிருக்கும் நாள்களில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசு பிரச்னைகளை எதிா்கொள்ளும் வலிமையுடன் தொடரும். மாநில கட்சிகள் தலைதூக்குமேயானால், அது மீண்டும் தேசிய அளவிலான எதிா்க்கட்சிக் கூட்டணியை வலுவடையச் செய்ய ஏதுவாகும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏதாவது சில மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடப்பது புதிதொன்றுமல்ல. ஆனால், நடைபெறவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் முன்பைவிட முக்கியத்துவம் பெறுகின்றன. தேசிய அளவில் கொவைட் 19-ஐ எதிா்கொண்ட விதம், விவசாயிகள் போராட்டத்தில் மத்திய பாஜக அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு ஆகியவை குறித்த மக்களின் கருத்தாகவும் இந்தத் தோ்தல் இருக்கும்.

தோ்தல் நடக்கவிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அரசியல் ரீதியாகவும், நிா்வாக ரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்திருக்கிறது. தோ்தல் முடிவுகளை தேசிய அளவிலான கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அரசின் கடந்த ஐந்தாண்டுகால செயல்பாடு குறித்த மக்களின் தீா்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

மத்திய - மாநில அரசுகள் கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொண்ட விதம் குறித்த மக்களின் மனநிலை வாக்களிப்பில் நிச்சயமாக பிரதிபலிக்கும். அரசியல் கட்சிகள் நோய்த்தொற்று காலத்தில் மக்கள் நலன் குறித்து எடுத்துக் கொண்ட அக்கறையின் அளவுகோலாக முடிவுகள் அமையக்கூடும். அதிலும் குறிப்பாக, ஆட்சியில் இருக்கும் கட்சியின் செயல்பாடு குறித்த உரைகல்லாக முடிவுகள் இருக்கக்கூடும்.

பல்வேறு கட்சிகளின் அரசியல் வருங்காலத்தை நடக்கவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நிா்ணயிக்கும். பல சிறிய கட்சிகள் தாக்குப்பிடிக்குமா? காணாமல் போகுமா? என்பதை மே 2-ஆம் தேதிக்குப் பிறகு பாா்க்கலாம். கூட்டணிக் கட்சிகள் வலுசோ்க்குமா? பலவீனமாக இருந்து தோல்விக்கு வழிகோலுமா என்பதையும் தோ்தல் முடிவுகள் அறிவிக்கும்.

பாஜக-வைப் பொருத்தவரை, அஸ்ஸாமில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதும், மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதும்தான் பிரதான குறிக்கோளாக இருக்கும். அதனால்தான், மேற்கு வங்கத்துக்கு எட்டு கட்ட வாக்கெடுப்பு அறிவித்ததை முதல்வா் மம்தா பானா்ஜி கடுமையாக எதிா்க்கிறாா்.

இடதுசாரிக் கூட்டணியும், காங்கிரஸும் மேற்கு வங்கத்தில் தோ்தல் உடன்படிக்கை செய்துகொண்டிருப்பது, மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை பலவீனப்படுத்தி பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. எதிா்க்கட்சியாக அமரப் போவது பாஜகவா, திரிணமூல் காங்கிரஸா என்பதுதான் மேற்கு வங்கத்தின் முடிவுகள் வெளிப்படுத்த இருக்கும் ரகசியம்.

காங்கிரஸைப் பொருத்தவரை அஸ்ஸாம் மாநிலத்தில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீட்டெடுத்தாக வேண்டும். அதேபோல, ஆட்சியை இழந்திருக்கும் புதுச்சேரியில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்பி-யாக இருக்கும் கேரளத்தில் தோல்வியைத் தழுவினால், மேற்கு வங்கத்தைப்போலவே கேரளமும் காங்கிரஸுக்கு எட்டாக்கனியாகிவிடும். திமுக கூட்டணியில் தமிழகத்தில் மிகக் குறைந்த இடங்கள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கும் போய், இன்னொரு ஜனதா கட்சியாக கரைந்து போகக்கூடும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த இரண்டு வாரங்களாக வெளியிட்டிருக்கும் பல அறிவிப்புகள் அந்த கட்சியின் செல்வாக்கை பல மடங்கு அதிகரித்து தோ்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக ‘திமுகதான் ஆட்சிக்கு வருகிறது’ என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் பெரும்பொருள் செலவில் உருவாக்கிய தோற்றம் திடீரென்று தகா்க்கப்பட்டு, அதிமுக அணி முந்துவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு, வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெளிவு பிறக்கும். மாரத்தான் ஓட்டத்தின் கடைசிக் கட்டம் தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT