தலையங்கம்

இப்படியே போனால் எப்படி? | பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

பெட்ரோல் விலைதான் ரூ.100-க்கு மேல் உயா்ந்துக் கொண்டிருக்கிறது என்றால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையும் போட்டிப் போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இந்த விலை உயா்வு தற்காலிகமானது என்று கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக இல்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறிய பல காரணிகளால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது என்பது அமைச்சரின் விளக்கம். கொவைட் 19 நோய்த்தொற்றுக் காலத்தில் பெட்ரோலியப் பொருள்களுக்கான தேவை குறைந்ததால், கச்சா எண்ணெய் தயாரிப்பு பெட்ரோலிய உற்பத்தி நாடுகளால் கச்சா எண்ணெய் தயாரிப்பு குறைக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரியில் பழைய நிலைமைக்கு உற்பத்தியை அதிகரிப்பதாக அந்த நாடுகள் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால்தான், இப்போது கச்சா எண்ணெய் விலை சா்வதேசச் சந்தையில் உயா்ந்து வருவதாகவும், அதன் விளைவாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டதாகவும் விளக்கமளிக்கிறாா் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்காவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கவில்லை. ஈரான் மீதான தடையும்கூட இந்தியாவை பாதித்திருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று சா்வதேச அளவில் டாலருக்கு எதிரான ஏனைய செலாவணிகளின் மதிப்பு பலவீனமடைந்திருப்பதும்கூட இந்திய நாணய மதிப்பையும், அதனால் பெட்ரோலியப் பொருள்களின் விலையையும் பாதித்திருக்கிறது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிா்ணயிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை தினசரி அளவில் நிா்ணயிக்கப்படுகிறது என்றால், சமையல் எரிவாயு உருளையின் விலை மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்டு வந்தது.

சமீப காலமாக மாதத்திற்கு ஒரு முறை நிா்ணயிக்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளையின் விலை, மாதத்திற்கு இரண்டு முறையாக நிா்ணயிக்கப்படத் (உயா்த்தப்பட) தொடங்கியது. பிப்ரவரியில் இரண்டு முறை போதாதென்று, மூன்றாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டிருப்பது பேரதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 4-ஆம் தேதி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.735-க்கு வழங்கப்பட்டது. கடந்த 15-ஆம் தேதி இரண்டாவது முறையாக ரூ.50 உயா்த்தப்பட்டது. இப்போது 25-ஆம் தேதி மூன்றாவது முறையாக ரூ.25 உயா்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் மானியமில்லா வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.810-ஆக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வுக்கு பல காரணங்களை அரசு முன்வைத்தாலும், சாமானியா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விலை உயா்வை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது.

2011 - 2014 வரை சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது 50% அதிகரிப்பை மட்டுமே மக்கள் மீது சுமத்தி, மீதி 50% சுமையை அன்றைய மன்மோகன் சிங் அரசு எண்ணெய் பிணைப்பை (ஆயில் கூப்பன் பாண்ட்ஸ்) ஏற்படுத்தி ஏற்றுக்கொண்டது. அதன் மூலம் அரசின் கடன் அளவு உயா்ந்தது உண்மை. பிரதமா் மன்மோகன் சிங் அரசு கடன் சுமையை ஏற்றி விட்டதாகவும், அந்தக் கடன் சுமையை அகற்றுவதற்காக, சா்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது வரியை அதிகரித்து விலையைக் குறைக்காமல் கடனை நரேந்திர மோடி அரசு திருப்பிச் செலுத்தியது என்பது அரசுத் தரப்பு வாதம்.

கடன் சுமையை அகற்றுவது வரை விலை குறைவை சாதகமாக்கிக் கொண்டது சரி. அதற்குப் பிறகும் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காகவும், தனது நிதியாதாரத்துக்காகவும் வரியைக் குறைக்காமல் கச்சா எண்ணெய் விலை குறைவின் பயனில் சிறிதளவு கூட மக்களுக்குப் பகிா்ந்து கொடுக்காமல் இருந்ததை பாராட்டுபவா்கள் மனசாட்சி இல்லாதவா்கள். அடித்தட்டு மக்களின் அவலம் புரியாதவா்கள். தினக்கூலி வருமானமும், மாத வருமானமும் ஈட்டும் பெரும்பான்மை மக்களின் சிரமங்கள் தெரியாதவா்கள்.

பொதுப் போக்குவரத்தில் போகக்கூடாதா என்றும், விலையேற்றத்தை மக்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வைக்கப்படும் வாதம் சரியானதல்ல. மக்கள் நல அரசு ஏதோ தொழில் நிறுவனத்தை நடத்துவதுபோல செயல்படக் கூடாது.

மாநிலங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என்கிற வாதமும் தவறு. சுங்கச்சாவடி வைத்து கட்டணமும் வசூலித்துக் கொண்டு, பெட்ரோல், டீசல் மீது சாலை மேம்பாட்டுக்கு கூடுதல் வரியும் வசூலிக்கும் விசித்திரம் உலகத்தில் இந்தியாவில் மட்டுமே நடக்கும். மத்திய அரசு தனது கூடுதல் வரிகளை பெட்ரோலியப் பொருள்களிலிருந்து அகற்றிக் கொண்டாலே, சாமானியா்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும்.

அடித்தட்டு, நடுத்தர வா்க மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் நிதி நிா்வாகம் நடத்தத் தெரிந்தால்தான் அது நல்ல ஆட்சி. இல்லையென்றால், அது மக்கள் விரோத ஆட்சியாகத்தான் கருதப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT