தலையங்கம்

‘ஒமைக்ரான்’ அச்சம்! | கொள்ளை நோய்த்தொற்றை குறித்த தலையங்கம்

1st Dec 2021 01:24 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

தடுப்பூசியாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டு பாதிப்பில்லாமல் தொடரலாம் என்று உலகம் ஓரளவுக்கு துணிவு பெற்றிருந்தது. இருபது மாதங்களுக்கு முன்னால் கொவைட் 19 என்று கேட்டபோது ஏற்பட்ட அதே அச்சமும் நடுக்கமும், இப்போது ‘ஒமைக்ரான்’ என்கிற அந்தத் தீநுண்மியின் உருமாற்றம் குறித்து கேள்விப்படும்போது உண்டாகிறது.

பல்கிப் பெருகும் தீநுண்மிகள் உருமாற்றம் பெறும்போது கூடுதல் வீரியம் பெறுகின்றன. இந்தியாவில் பரவத் தொடங்கிய கொவைட் 19, ‘டெல்டா’ என்று உருமாற்றம் பெற்றது. அதிலிருந்து மேலும் உருமாற்றம் பெற்று ‘டெல்டா பிளஸ்’ என்கிற பெயரில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பரவத் தொடங்கியது. இப்போது கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய வகை உருமாற்றம் பரவத் தொடங்கியிருக்கிறது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொவைட் 19, சில வாரங்களுக்குப் பிறகுதான் கடல் கடந்து உலக அளவில் பரவத் தொடங்கியது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இப்போது உருவாகியிருக்கும் அதன் ‘ஒமைக்ரான்’ உருமாற்றம் எடுத்த எடுப்பிலேயே பல நாடுகளில் பரவி வருவது அச்சம் ஏற்படுத்துகிறது. தென்னாப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கானோரை தாக்கிய ‘ஒமைக்ரான்’, போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், ஜொ்மனி மட்டுமல்லாமல், கொவைட் 19-ஐ வெற்றிகரமாக எதிா்கொண்ட இஸ்ரேலையும் பாதித்திருக்கிறது எனும்போது அதன் வீரியத்தை உணர முடிகிறது.

ADVERTISEMENT

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் இதுவரை 26 கோடி போ் பாதிக்கப்பட்டனா். 52 லட்சம் போ் உயிரிழந்திருக்கின்றனா். இப்போது அது பன்மடங்கு வீரியத்துடன் புதுப்பிறவி எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொவைட் 19-இன் ஆல்பா வகை தீநுண்மி, இரண்டு உருமாற்றங்கள் பெற்றது என்றால், அதன் டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. இப்போது பரவத் தொடங்கியிருக்கும் ‘ஒமைக்ரா’னில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவற்றில் பத்து வகைகள் நேரடியாக சுவாசப் பாதையை தாக்கும் வீரியம் பெற்றவை என்றும் கூறப்படுகிறது.

‘ஒமைக்ரான்’ வகையில் உள்ள பிவுகள் அதற்கு நோயெதிா்ப்புத் திறனிலிருந்து தப்பிக்கும் திறனையும், பரவும் திறனையும் வழங்குகின்றன. அதனால் இந்தத் தீநுண்மி உலக அளவில் அதிவேகமாகப் பரவக்கூடுய ஆபத்து இருப்பது ஆரம்பகட்ட சான்றுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. நோயறிதல், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு இந்தத் தீநுண்மி எவ்வாறு கட்டுப்படும் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி போன்றவை காணப்படும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும்கூட இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறாா்கள். ஆனால் அச்சப்படும் அளவில் பாதிப்பு இருப்பதில்லை. ஐரோப்பாவில் ஏற்கெனவே காணப்படும் நான்காவது அலை நோய்த்தொற்றுக்கு இடையே இப்போது ஒமைக்ரான் உருமாற்றம் பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை அதிகரிக்கிறது.

கடந்த வாரம் ஐரோப்பாவில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். ஆஸ்திரியா, நெதா்லாந்து, ஜொ்மனி, டென்மாா்க், நாா்வே ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவு தினசரி பாதிப்புகள் காணப்படுகின்றன. ருமேனியாவிலும் உக்ரைனிலும் ஏற்கெனவே நோய்த்தொற்றுப் பரவல் கடுமையாக இருக்கிறது.

அடுத்த ஆறு மாதங்களுக்கு மருத்துவமனைகளுக்கும், அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளில் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வரும் மாா்ச் மாதத்துக்குள் ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழக்கக்கூடும் என்கிற அச்சம் எழும்புகிறது.

மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மீண்டும் அதிகரிக்கும் கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. நோய்த்தொற்று அடங்கிவிட்டது என்று நாம் இருந்துவிட முடியாது. இந்தியாவில் 30% மக்கள் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறாா்கள். 70% தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில்கூட மீண்டும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாம் கவனக்குறைவாக இருப்பது தவறு.

உலகமே வியக்கும் வகையில் ஏறத்தாழ 122 கோடி பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அதில் சமச்சீரற்ற நிலை காணப்பட்டதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 75.48 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயது வரையிலானவா்களுக்கு 45.56 கோடி முதல் தவணை தடுப்பூசியும், 21.75 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று அறிவித்து செயல்படுத்தியும்கூட, இன்னும் அனைவரையும் தடுப்பூசித் திட்டம் சென்றடையாமல் இருப்பதற்கு மாநில அரசுகளின் மெத்தனம்தான் காரணம் என்பது வேதனையளிக்கும் தகவல். தடுப்பூசி கிடைக்கவில்லை என்று விமா்சித்த மாநிலங்கள்கூட இப்போது போதுமான தடுப்பூசி கையிருப்பில் இருந்தும் மெத்தனம் காட்டுவது பொறுப்பின்மையின் வெளிப்பாடு.

10 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் இது. 20 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ‘ஒமைக்ரான்’ உருமாற்றம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இனியும் மெத்தனமாக இருப்பது, ஆபத்தை விலைக்கு வாங்குவதாக அமையும்!

Tags : தலையங்கம் K Vaidiyanathan கி வைத்தியநாதன் Vaidiyanathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT