தலையங்கம்

இரந்து வாழ்வோர்..! | பிச்சைக்காரர்கள் தடுப்புச் சட்டம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. இந்த வழக்கு, விசித்திரமும் அல்ல, வழக்கு தொடுத்தவர்கள் விசித்திரமானவர்களும் அல்லர். இது மேட்டுக்குடியினர் பொதுவாகவே அங்கலாய்க்கும் தெருவோர, நாற்சந்தி பிச்சைக்காரர்கள் குறித்த வழக்கு. அதனால்தானோ என்னவோ, ஊடகங்களில் போதிய கவனம் பெறவில்லை.
தலைநகர் தில்லியிலுள்ள நாற்சந்திகளில் காணப்படும் பிச்சைக்காரர்களை அகற்ற வேண்டும் என்று கூறி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் விளக்கம் கேட்டு "நோட்டீஸ்' அனுப்பியிருக்கிறது. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும், அவர்களுக்கு கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடுவது குறித்தும் அரசுகளின் நடவடிக்கைகளை தெரிவிக்கக் கோரியிருக்கிறது.
2018-இல் இதேபோல ஒரு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. தலைநகரத்தில் பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை நிராகரித்தது மட்டுமல்லாமல், பிச்சை எடுப்பவர்களைக் குற்றமிழைத்தவர்களாக்கும் எந்தவொரு முயற்சியும் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அமையும் என்றும் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பிச்சை எடுப்பதை தடை செய்ய எந்தவொரு மத்திய அரசு சட்டமும் இல்லை. ஆனால், 20 மாநிலங்களிலும், இரண்டு ஒன்றியப் பிரதேசங்களிலும் பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய சட்டமொன்றின் அடிப்படையில் 1959-இல் "பம்பாய் பிச்சைக்காரர்கள் தடுப்புச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிச்சை எடுப்பவர்களை மூன்று முதல் பத்து ஆண்டுகளுக்கு பிச்சைக்காரர்கள் இல்லத்தில் காவலில் (பார்வையில்) வைக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
வாழ வழியில்லாத ஏழைகள், நாடோடிகள், தெருக்கூத்து கலைஞர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தங்களுக்கென இருப்பிட ஆதாரமோ, தன்விவர ஆவணமோ இல்லாத யாரை வேண்டுமானாலும் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்யலாம். மாதாந்திர வழக்கு எண்ணிக்கையைக் காட்டுவதற்கு காவலர்கள் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.
மும்பை பிச்சைக்காரர்கள் தடுப்புச் சட்டம் 1959-இன் அடிப்படையில்தான், 20 மாநிலங்களும், இரண்டு ஒன்றியப் பிரதேசங்களும் பிச்சைக்காரர்களுக்கு எதிரான தங்களது சட்டத்தைக் கட்டமைத்தன. தில்லி உயர்நீதிமன்றம் அந்தச் சட்டத்தின் பல பிரிவுகளை வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும், சுயமரியாதை உரிமைக்கும் புறம்பானவை என்று ரத்து செய்து உத்தரவிட்டது. அந்தப் பின்னணியில்தான் இப்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அமைந்திருக்கிறது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதைவிடப் பல மடங்கு அதிகமானோர் இரந்து வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை. வாழ்வாதாரத்துக்கான எந்தவொரு வழியும் இல்லாத நிலையில்தான் அவர்களில் பலரும் இரந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அவர்களில் கணிசமானோர் தங்கள் பிள்ளைகளாலும், உறவினர்களாலும் கைவிடப்பட்ட முதியோர் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர்களின் மறுவாழ்வுக்கான வழிமுறைகள் உருவாக்கப்படாத வரை இந்தப் பிரச்னையை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. அவர்களுக்காக அமைக்கப்படும் இல்லங்களும், பயிற்சிக் கூடங்களும் அரசின் மானியத்தைப் பெறுவதில்தான் குறியாக இருக்கின்றனவே தவிர, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதிலோ, அவர்களுக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்து அவர்களை கெளரவமாகப் பாதுகாப்பதிலோ அக்கறை காட்டுவதில்லை.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இரந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அச்சமளிக்கும் விதத்தில் அதிகரித்திருக்கிறது. வாழ்வாதாரம் இல்லாமல் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமல்லாமல், மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் அதை ஒரு தொழிலாக நடத்தும் கொடுமையும் எல்லா பெருநகரங்களிலும் உருவாகி இருக்கிறது.
இந்த மாஃபியாக்கள் அடிமை வியாபாரிகளைப்போல வாழ்வாதாரம் அற்றவர்களை மிரட்டி அடிபணிய வைத்துத் தொழில் நடத்துகிறார்கள். ஆண்டுதோறும் 40,000-க்கும் அதிகமான குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் ஊனமுள்ளவர்களாகவும், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும், போதை மருந்துக்கு வசப்பட்டவர்களாகவும் மாற்றப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மாஃபியாக்களின் பிடியிலிருந்து லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டாக வேண்டும். அவர்களின் பிடியில் சிக்காதவர்களும்கூட மனிதாபிமானத்துடன் அணுகப்பட்டு மறுவாழ்வுக்கு வழிகோலப்பட வேண்டும். வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வி அறிவின்மை, மாற்றுத்திறனாளிகளாக இருப்பது போன்றவைதான் இரந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்பதை உணர்ந்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, "பிக்ஷை’(இரந்து வாழ்தல்) என்பது உயரிய வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தணர்கள் அன்றாடம் இரந்துண்டு வாழ வேண்டும் என்பது விதியாகவே விதிக்கப்பட்டது. புத்த பிக்குகளுக்கும் அதேபோலத்தான். இஸ்லாமிலும் "ஜகாத்' அங்கீகரிக்கப்பட்டது.
கடைக்கோடி குடிமகன் வரை அனைவருக்கும் வாழ்வாதாரம் உறுதிப்படும்வரை ஏழ்மையை குற்றமாக சித்திரிக்கும் எந்தவொரு சட்டமும் தார்மிக ரீதியாகவும், நடைமுறையிலும் தவறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT