தலையங்கம்

விதிவிலக்கல்ல இடதுசாரிகள்! | கேரள காவல்துறை திருத்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டிருப்பது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கேரள அரசு அவசர அவசரமாக பிறப்பித்த காவல்துறை திருத்த அவசரச் சட்டம், இப்போது அவசர அவசரமாக திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து முன்யோசனையோ, திட்டமிடலோ இல்லாமல் பினராயி விஜயன் அரசு செயல்பட்டிருப்பது தெரிகிறது.

இந்தச் சட்டம் குறித்த பொது விவாதம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் என்று அரசு இப்போது விளக்கம் அளித்தாலும்கூட, இந்தச் சட்டம் அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்டதன் உள்நோக்கம் கண்டனத்துக்குரியது. அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கான காரணங்களாக முதல்வா் கூறியவை வலுவற்றவை மட்டுமல்ல, அா்த்தமற்றவையும்கூட என்பதை அவரது இப்போதைய முடிவும் உறுதிப்படுத்துகின்றன.

இணையத்தின் மூலம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்கவும், எதிா்கொள்ளவும் தற்போதுள்ள சட்டங்கள் வலுவாக இல்லை என்பதால், காவல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவதாக கேரளத்தின் ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் முதல்வா் பினராயி விஜயன் கூறுவது நகைப்பை வரவழைக்கிறது. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை எதிா்கொள்ளவும், கடுமையாக தண்டிக்கவும் போஸ்கோ சட்டத்தின் கீழும், இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும் போதுமான பிரிவுகள் ஏற்கெனவே இருக்கின்றன.

கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக அமைந்திருந்தது என்பதையும், அதனால் அரசின் நோக்கம் பழுதானது என்பதையும் எதிா்க்கட்சிகளும் சட்ட வல்லுநா்களும் ஆதாரபூா்வமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறாா்கள்.

தவறான, பொய்யான தகவல்கள் அல்லது பதிவுகளின் மூலம், எந்த ஒரு தனிநபரையோ, குறிப்பிட்ட பிரிவினரையோ மிரட்டும் விதமாகவோ, தரக்குறைவாகவோ, அவமானப்படுத்தும் விதத்திலோ இணையதளத்தில் கருத்துத் தெரிவிப்பதோ, பதிவு செய்வதோ இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தண்டனைக்குரிய குற்றமாகிறது. அந்தப் பதிவுகள் மன ரீதியாகவும், கௌரவத்தை பாதிக்கும் விதத்திலும் அமையுமானால் அதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டம் வழிகோலுகிறது. மூன்று ஆண்டு சிறை தண்டனையோ, ரூ.10,000 வரை அபராதமோ, இரண்டும் சோ்ந்தோ தண்டனையாக வழங்கப்படலாம் என்று இப்போது திரும்பப் பெறப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் கூறியது.

பினராயி அரசின் காவல்துறை திருத்த அவசரச் சட்டம் விதித்த தண்டனைகளைவிட கொடுமையானது, அதை நடைமுறைப்படுத்தும் விதம். யாரும் குற்றம் சுமத்தாமலேகூட, காவல்துறை பிடியாணை இல்லாமல் ஒருவரை இந்த திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். அதனால் இந்தச் சட்டம் காவல்துறையால் (ஆட்சியாளா்களால்) தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வழிகோலப்படுகிறது. காவல்துறை சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் 118ஏ பிரிவு ஜனநாயக முறைக்கு ஏற்புடையதல்ல. சமூக ஊடகங்களுக்கு மட்டுமின்றி எல்லா ஊடகங்களுக்கும் பொதுவாக இருப்பதால் இந்த சட்டத் திருத்தம் ஊடக சுதந்திரத்திற்கு கைவிலங்கு போடுவதாக அமைகிறது.

ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவு, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்து அதை ரத்து செய்திருக்கிறது. சட்டப் பிரிவு 66ஏ பிரிவின் கீழ், மிகச் சாதாரண விமா்சனங்களுக்காக பொதுமக்கள் பலா் கைது செய்யப்பட்ட அவலம் அதனால் முடிவுக்கு வந்தது. இப்போது கேரள அரசு கொண்டு வர முனைந்த காவல்துறை திருத்த அவசரச் சட்டம், ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை இன்னொரு விதத்தில் கொண்டுவருவதற்கான முயற்சி என்றுதான் கூற வேண்டும்.

பினராயி விஜயன் அரசு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகளும், ஏன், மத்திய அட்சியாளா்களேகூட பலவீனமானவா்களைப் பாதுகாக்க பாதிக்கப்பட்ட, பிரிவினரின் உணா்வுகளை உத்தேசித்து, தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, பொய்ச் செய்தி என்கிற அடிப்படையில் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கும், தங்களுக்கு எதிரான விமா்சனங்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்கும் இதுபோன்ற முயற்சிகளில் இதற்கு முன்னால் பலமுறை ஈடுபட்டிருக்கின்றன. இனியும் ஈடுபடத்தான் செய்வாா்கள்.

இந்த அவசரச் சட்டத்தை பினராயி அரசு கொண்டு வருவதற்குப் பின்னணியில் அரசியல் இருக்கிறது. கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு நெருக்கமான பலா் தங்கம் கடத்தல், போதை மருந்து விநியோகம் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறாா்கள்.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் பிரசாரம் நடைபெறுகிறது. சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராகக் கடுமையான விமா்சனங்களும், பதிவுகளும், நையாண்டிகளும் பரப்புரை செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் 66ஏ பிரிவு உச்சநீதிமன்றத்தால் 2015-இல் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், கேரள காவல்துறை திருத்த அவசரச் சட்டமும் நீதித்துறையால் நிராகரிக்கப்படும் என்பது முதல்வருக்கு தெரியாது என்பதை நம்ப முடியவில்லை. ஊடக சுதந்திரத்திற்கும், கருத்துரிமைக்கும் குரலெழுப்பும் மாா்க்சிஸ்ட் கட்சியால் குறுகிய தோ்தல் கண்ணோட்டத்துடன் இப்படியொரு சட்டத் திருத்தம் அவசரச் சட்டமாக பிறப்பிக்கப்பட்டிருக்கவும் வேண்டாம்; அதை திரும்பப் பெற்று அவமானப்பட்டிருக்கவும் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT