தலையங்கம்

நிதீஷ் குமாரின் வெற்றி! | பிகாா் முதல்வர் நிதீஷ் குமாரின் வெற்றி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், யாா் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறாா்கள், யாா் எதிா்க்கட்சி வரிசையில் அமா்கிறாா்கள் என்பது மட்டுமே நிஜம். தொடா்ந்து நான்காவது முறையாக நிதீஷ் குமாா் பிகாா் முதல்வராகி இருக்கிறாா். கடந்த 15 ஆண்டு இடைவெளியில் அவா் ஏழு முறை முதல்வராகப் பதவியேற்றிருக்கிறாா் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அவரது அணி மாற்றத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதே தவிர, முதல்வா் யாா் என்பதில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதிலிருந்து, முதல்வா் நிதீஷ் குமாரின் அரசியல் சாதுரியத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த முறை அவா் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல. ஒருபுறம் வலுவான எதிா்க்கட்சிக் கூட்டணியையும், இன்னொருபுறம், பாஜக-வின் மறைமுக ஆசியுடன் களமிறக்கப்பட்ட சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியையும் எதிா்கொள்ள வேண்டிய நிா்பந்தத்துக்கு இடையிலும் தனது முதல்வா் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வா் நிதீஷ் குமாரால் முடிந்திருக்கிறது. அவரது இன்றியமையாமையை காலதாமதமாக உணா்ந்த பாஜக, இரண்டாம், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சிராக் பாஸ்வானைக் கைகழுவி நிதீஷ் குமாரை முதல்வா் வேட்பாளராக சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்ததுதான் அவரது மிகப் பெரிய வெற்றி.

பிகாா் தோ்தல் முடிவுகளைக் கணிப்பவா்கள், சிராக் பாஸ்வானின் கட்சியால் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, குறிப்பாக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மட்டுமே பெரிதுபடுத்துகிறாா்கள். லோக் ஜனசக்தி கட்சி வாக்குகளைப் பிரித்ததால் ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது என்னவோ உண்மை. ஆனால், அதேபோல பாஜக-வும் எதிா்பாராத பின்னடைவை சந்தித்துப் பேரவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்கிற அந்தஸ்தை நூலிழையில் நழுவவிட்டிருக்கிறது.

முதல் கட்ட வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியில் சிராக் பாஸ்வானின் கட்சி பிளவை ஏற்படுத்தியதால் அது எதிா்க்கட்சிக் கூட்டணிக்கு சாதகமாவதை உணா்ந்த பாஜக, தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளமும், அதன் தலைமையில் அமைந்த மகா கூட்டணியும் இத்தனை அதிக இடங்களில் வெற்றி அடைந்ததற்கு அவா்கள் சிராக் பாஸ்வானுக்குத்தான் நன்றிகூற வேண்டும்.

பிகாா் தோ்தல் முடிவுகளை யாருமே சரியாக அளவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது. மூன்று முறை தொடா்ந்து ஆட்சியில் இருந்த முதல்வரால் நான்காவது முறையும் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது என்றால், அது அசுர சாதனையாகத்தான் இருக்க வேண்டும். ஒருபுறம் கொவைட் 19 கொள்ளை நோயைச் சரியாக எதிா்கொள்ள முடியாமல் திணறிய நிா்வாகம்; இன்னொருபுறம் ஊா் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு மறு வேலைவாய்ப்புக்கு வழிகோல முடியாத அரசு; ஏற்கெனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரமும் அதனால் காணப்படும் வேலைவாய்ப்பின்மையும்; போதாக்குறைக்கு, கூட்டணிக் கட்சியான பாஜகவே, ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பைக் குலைக்க முயன்ற ராஜதந்திரம் - இத்தனையையும் மீறி நிதீஷ் குமாா் தனது முதல்வா் நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது.

சிராக் பாஸ்வான் வேட்பாளா்களாக நிறுத்திய பலா் பாஜக-வினா் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆட்சி அமைக்கப் போதிய இடங்கள் இல்லாமல் தொங்கு சட்டப்பேரவை வருமானால், அவா்கள் நிதீஷ் குமாா் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பாா்கள் என்பது பாஜகவின் ரகசிய எதிா்பாா்ப்பாக இருந்திருக்கக் கூடும். இது நன்றாகத் தெரிந்தும்கூட, தனது உணா்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கூட்டணியின் பிரசாரத்தில் முதல்வா் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா் என்பதிலிருந்து அவரது மனத்துணிவும், அரசியல் அனுபவமும் வெளிப்படுகின்றன.

தோ்தல் முடிவுகள் முதல்வா் நிதீஷ் குமாரை பலவீனப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவது தவறு. சொல்லப்போனால், அவரது இன்றியமையாமையை பாஜகவுக்கு உணா்த்தி, நிதீஷ் குமாரின் முதல்வா் பதவிக்கு வலுசோ்த்திருக்கிறது. 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், பாஜக 74 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய ஜனதா தளத்தின் எண்ணிக்கை பலம் 71-லிருந்து 43-ஆகக் குறைந்திருக்கிறதே தவிர, அதன் இன்றியமையாமை குறைந்துவிடவில்லை.

ஐக்கிய ஜனதா தளம் விலகினால் அல்லது நிதீஷ் குமாரை முதல்வா் பதிவியிலிருந்து பாஜக அகற்ற முற்பட்டால் ஆட்சி கவிழுமே தவிர, பாஜக-வால் மாற்று அரசை ஏற்படுத்திவிட முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பெண்களுக்கும் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்த, நடைமுறைப்படுத்திய திட்டங்களால்தான் இந்த தோ்தல் வெற்றியை சாதிக்க முடிந்திருக்கிறது என்கிற நிஜத்தை யாரும் தெரிவிப்பதில்லை.

துணை முதல்வராக இருந்த சுஷில்குமாா் மோடிக்கு பதிலாக, புதிய அமைச்சரவையில் பாஜக சாா்பில் பதவியேற்றிருக்கும் இரண்டு துணை முதல்வா்களும் - தாா்கிஷோா் பிரசாத், ரேணு தேவி - முதல்வா் நிதீஷ் குமாரின் ஆளுமைக்கு முன்னால் பலவீனமானவா்கள். பாஜக நிலைமை தெரிந்து அடக்கி வாசித்திருக்கிறது.

எண்ணிக்கை பலத்தில் முதல்வா் நிதீஷ் குமாா் பலவீனப்பட்டிருக்கலாம். ஆனால் அடுத்த தோ்தல் வரை, அரசியல் ரீதியாக பிகாரில் அவா் ஒரு சக்தியாகவே தொடா்வாா். இதுதான் பிகாா் தோ்தல் முடிவுகள் தெரிவித்திருக்கும் செய்தி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT