சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா: கருணாநிதி ஒரு சகாப்தம்

DIN


கலைஞர் என்றாலே தமிழர்கள் மத்தியில் கருணாநிதியைதான் சொல்வார்கள். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி.  தென் இந்தியாவில் இருந்து தில்லி அதிகாரத்தை மையம் கொண்டவர். "ஆதரித்தாலும், எதிர்த்தாலும் தீவிரமாக இருக்கும் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே! ' என்று தேசியத் தலைவர்களால் பாராட்டும் பெற்றவர்.

1969-இல் முதன் முறையாக தமிழக முதல்வரானார்.  அரை நூற்றாண்டாக திமுகவின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி,  இந்திய அரசியல் வரலாற்றில் சாதனையைப் படைத்தவர். பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்,   அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பற்பல பரிமாணங்களைக் கொண்டவர்.

"தூக்குமேடை' நாடகத்தின்போது எம். ஆர். ராதா,  கருணாநிதிக்கு "கலைஞர்' என்ற பட்டம் அளித்தார்.

இளமையிலேயே போர்க்குணம்: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 இல் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் .  நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட  அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14 ஆவது வயதில் சமூக மேம்பாட்டு இயக்கங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  

இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கி,  பின்னர் "அனைத்து மாணவர்களின் கழகம்'” என்ற அமைப்பாக மாற்றினார். இதுவே திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக அமைந்தது. "முரசொலி'  என்ற  பெயரில் கையெழுத்து பத்திரிகையையும் தொடங்கினார்.

வட இந்தியாவில் இருந்து  வந்து சிமென்ட் ஆலையை உருவாக்கி,  அந்தப் பகுதியின் பெயரை " டால்மியாபுரம்' என மாற்றினார்கள்.  அந்த பெயரை "கல்லக்குடி- பழங்காநத்தம்' என்று பழைய பெயரிலேயே அழைக்க வேண்டும் என  1952 இல்  திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர். கருணாநிதி கைது செய்யப்பட்டார்.

முரசொலி நாளிதழ் வாயிலாக,  மாணவர் மன்ற அணித் தோழர்களான க.அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் , கே.ஏ.மதியழகன் ஆகியோர் கருணாநிதியின் அரசியலுக்கு உறுதுணையாக இருந்தனர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில்,  தமிழ்நாட்டில்  மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13 இல் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி போராட்டமும் நடத்தினார்.  அண்ணா, கருணாநிதி உள்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.   இந்தி திணிப்பை எதிர்த்து, கருணாநிதி எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும் பெரிய போராட்டத்தை உருவாக்கியது. திமுகவின் போராட்டமும், மாணவர்களின் எழுச்சியும் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட காரணமாயிற்று.

கருணாநிதியின் எழுச்சி: திமுக தொடக்கக் கால உறுப்பினரான கருணாநிதி. பின்னர், முன்னணித் தலைவராகி 1960 இல் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969 -ஆம் ஆண்டு வரை  அந்தப் பதவியை வகித்தார்.

1957 ஆம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்துத் தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார்.  சட்ட மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற தேர்தல்களில் முக்கிய பங்கை இவர் ஆற்றினார்.

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை,  அண்ணா நகர்,  துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர் உள்பட பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டப் பேரவையில் பொன் விழா நாயகராக விளங்கினார். 1962 இல் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார்.

1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்து, முதல்வராக அண்ணா பொறுப்பேற்றார். அவர் மறைவுக்குப் பின்னர்,  1969 இல் கருணாநிதி முதல்வரானார். பின்னர், 1971-1976,  1989-91 ,  1996-2001, 2006-11 என ஐந்து முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணியாற்றினார். பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி, இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

மத்தியில் 1989-91ஆம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய முன்னணி ஆட்சி, 1996-98 ஆம் ஆண்டுகளில் தேவே கௌடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சி, 1999-2004 இல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 2004-14 இல் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகள் அமைவதில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.

இதுதவிர,  பிரணாப் முகர்ஜி,  பிரதீபா பாட்டீல் உள்பட பல குடியரசுத் தலைவர்களைத் தேர்வு செய்வதிலும் கருணாநிதி பெரும் பங்காற்றினார்.

தேசிய அரசியலில் பங்காற்ற வாய்ப்பு கிடைத்தும், ஆளுநராக, மத்திய அமைச்சராக என பல்வேறு உயர்பதவிகள் தேடி வந்தபோதும் அவற்றை உதறித் தள்ளிவிட்டு தமிழக அரசியலிலே முழு பங்காற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை : அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்துவந்தார். இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி முரசொலி,  குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன.  இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

விருதுகளும், பெற்ற சிறப்புகளும்..:
திரைத்துறையில் "அபிமன்யூ' திரைப்படம் மூலம் கதை வசனகர்தாவாக அறிமுகமாகி, "பராசக்தி' , "மனோகரா' உள்ளிட்ட நூறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்துள்ளார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் என்ற பெப்சி மாநாட்டில்,  2009 ஆம் ஆண்டில் இருந்த கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

1970 இல் பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கௌரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987 இல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010-க்கான "உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்' அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார்.  இதுபோன்று நூற்றுக்கணக்கான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவர்.

மறைவு: 2016 ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு காரணமாக, மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். 2018 ஆம் ஆண்டு ஜூலை 27 இல் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு,  ஆகஸ்ட்  7 இல், தனது 94 ஆவது வயதில் சென்னையில் காலமானார். “மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர். அவரது வாழ்க்கை ஒரு சகாப்தம்.

மறைந்து 6 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் அவர் மக்கள் மனதில் நிரந்தரமாக இருந்துவருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்றும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து நினைவஞ்சலி செலுத்துவதைக் கண்கூடாக உணர முடிகிறது. அவரது வாழ்க்கை வரலாறு அல்ல; சகாப்தம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT