சிறப்புக் கட்டுரைகள்

மகாத்மா காந்தி: இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தை!

முனைவர் இரா.மு. தேவசூர்யா

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  குஜராத்  மாநிலத்திலுள்ள  போர்பந்தர் எனும் ஊரில் (2 அக்டோபர் 1869) பிறந்தார். தனது இளமைக் காலத்தில் பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்ட அவர், தனது 18 ஆம் வயதில் ராஜ்கோட்டில் உள்ள அல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பில் தேறினார்.

அதற்கு முன்பே, அக் காலத்து  அவரது குடும்ப வழக்கப்படி, 13ஆம் வயதில் அவர் வயதேயான  கஸ்தூரிபாயைத்  திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில், பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு தாம் மருத்துவப் படிப்புப் படிக்க விரும்புவதாகக் குடும்பத்தில் காந்தி கூறிப் பார்த்தார். ஆனால், "ஒரு வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்தவர், பிராணிகளின் உடலை அறுத்து ஆராய்ச்சி செய்யும் படிப்பைப் படிக்கக் கூடாது" என்று அவருடைய அண்ணன் மிகக் கறாராகச் சொல்லிவிட்டார். காந்திஜியின் தந்தைக்கும், தன் மகன் மருத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லை. அதனால், காந்தி விரும்பிய மருத்துவப் படிப்பு இல்லாமல் பாரிஸ்டர் (Barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக அவர் இங்கிலாந்து (லண்டன்) சென்றார். லண்டன் வாழ்க்கையில் அவர் சைவ உணவு விஷயத்தில் ஒருபோதும் தடம் புரளாமல் மிக மிக உறுதியாக இருந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு (சத்தியசோதனை)  கூறுகிறது.

தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றிய பின்  ராஜ்கோட் சென்று, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் எளிய பணியில் ஈடுபட்டார். இச்சமயத்தில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று தென்னாப்பிரிக்காவில் காலியாகவிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம், தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அங்கு பயணமானார்.

தென் ஆப்பிரிக்கா சென்று பணி செய்த காலத்தில், 1905-ஆம் ஆண்டு வாக்கில், இந்தியன் ஒப்பீனியன் என்ற தென் ஆப்பிரிக்க சஞ்சிகை வாசகர்களுக்காக ஆரோக்கிய வழி ” என்ற தலைப்பின் கீழ்ச் சில கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையை- ஆங்கில முறை டாக்டர்களும், ஆயுர்வேத, சம்பிரதாய வைத்தியர்களும் “ஹக்கீம்களும் '(யூனானி வைத்தியர்கள்) கவனிக்கும் முறைகளினின்றும் வேறுபட்ட ஒரு புது முறையில் - அவர் கவனிப்பதைக்  காட்டின. அக்கட்டுரைகள் பிரபல்யம் பெற்றதற்கு இதுவே  காரணமாக இருக்கலாம்.

காந்திஜிக்கு நோய்க்கான காரணங்களை சரியான முறையில் கண்டறிந்து கொள்ளும் திறமை இருந்ததன் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் பல நோயாளிகளுக்கு அவர் உரிய சிகிச்சையை அளித்து குணப்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வழக்குரைஞராக சொற்ப ஊதியம் பெற்றுப் பணி செய்ததால் அவர் கேலியாகக்  "கூலி பாரிஸ்டர்'' என்று அழைக்கப்பட்டார். இலவச மருத்துவமும் செய்ததால் அவரைக் ‘கூலி டாக்டர் ” என்றும் கேலி செய்தனர், ஆனாலும், பல ஐரோப்பியர்களும் இந்தியர்களும் மருத்துவ ஆலோசனைக்கு அவரை அணுகினார்கள். சிலருக்கு அவர் குடும்ப மருத்துவராகவும் ஆகிவிட்டார். அந்தக் கால கட்டத்தில் காந்திஜியின் சிகிச்சை முறைகள் எந்த மருத்துவ முறைக்கும் - மருத்துவ நூல்களுக்கும் அப்பாற்பட்டவைகளாகவே இருந்தன. துணிச்சலான தமது சிகிச்சை முறையை மேற்கொள்வதில் ஆபத்தும் இருக்கிறது என்று காந்திஜியே சொல்வதுண்டு.['ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி']. இருப்பினும், சிறிது காலத்திற்குப் பின் அவரது சிகிச்சை முறைகளில் சிலவற்றை வைத்தியர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, ஒருமுறை, காந்திஜியை ஒருவன் நன்றாக அடித்துவிட்டான். உதட்டிலும், விலா எலும்புகளிலும்,  நெற்றியிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு காந்திஜி மண்ணையே பிசைந்து தடவினார். வீக்கம் வடிந்து காயங்களும் ஆறிவிட்டன. ப்ளேக், டைஃபாய்டு ஜுரம், மலேரியா, அஜீரணம், மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம், தீக்காயங்கள், பெரியம்மை மற்றும் எலும்பு முறிவு எல்லாவற்றிற்கும் காந்திஜி ‘மண் சாந்து’ சிகிச்சையை சிபாரிசு செய்தார். ஒரு பயணத்தின் போது அவரது மகனின் கை உடைந்துவிட்டது. காந்திஜி மண்ணைக் குழைத்துப் பூசி கட்டுப் போட்டார். காயம் ஆறிவிட்டது. இந்தச் சிகிச்சை முறையில் பலரை காந்திஜி குணப்படுத்தி வந்தார். இருப்பினும் தமது சிகிச்சை முறைகள் பரீட்சார்த்தமானவையே அன்றி முற்றிலும் சரியானவை அல்ல என்றும் எச்சரித்து வந்தார்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து தனது 39-வது வயதில் காந்திஜி மறுபடியும் இங்கிலாந்து சென்றார். அப்போதும் மருத்துவப் படிப்பு படிக்கும் ஆவல் அவருக்குத் தலைதூக்கியது. ஆனால்,  பிராணிகளின் உடலை அறுப்பது என்ற விசயமே அவரது விருப்பத்திற்குத் மீண்டும் தடை போட்டுவிட்டது. பரிசோதனை என்ற பெயரில் உயிருள்ள பிராணிகளை அறுத்துக் கொல்வது, தடுப்பு ஊசி மருந்து தயார் செய்வதற்காக பிராணிகளை சித்திரவதை செய்வது போன்ற பழக்கங்களில் காந்திஜிக்கு உடன்பாடு இல்லை.

அலோபதி மருத்துவர்களை அவர் ‘சாத்தானின் சீடர்கள்’ என்று கூடக் குறிப்பிட்டார். ஆயுர்வேத ஹோமியோபதி வைத்தியர்களையும்  அவர் விட்டுவிடவில்லை; கண்டனம் செய்தார். ஒரு கட்டுரையில் இக்கால வைத்திய முறை முழுவதையும் காந்திஜி உபாஸ் மரத்திற்கு ஒப்பிட்டார். (உபாஸ் என்பது, ஜாவா பகுதியிலுள்ள ஒரு நச்சுமரம். அதில் வரும் பாலை எடுத்து காட்டு மக்கள் அம்புகளின் முனையில் தடவுவார்கள். அந்த அம்பு பட்டவர்கள் கட்டாயம் இறந்து போவார்கள். அதன் நிழலில் எந்தச் செடியும் நசிந்து போகும். அவ்வளவு கொடியது அம்மரத்தின் விஷம்). மருந்தையும் மாத்திரைகளையும் பயன்படுத்தி உடலுக்கு விஷச் சிகிச்சை தருவதைத் தவிர்த்து, உபவாசம், சரியான உணவு முறைகள் மற்றும் பச்சிலைகள் மூலம், இயற்கை வைத்தியத்தில், எவ்வித வியாதியையும் குணப்படுத்தலாம் என்று காந்தி அடிகள் உறுதியாக நம்பினார்.

இயற்கை வைத்தியத்தில் நிபுணர்களான அடால்ப் ஜஸ்ட் (Adolf Just) ,  குஹ்னே (Kuhne) ஆகியோர் நூல்களைக் காந்திஜி படித்தார். ‘நீர்ச்  சிகிச்சை’ முறை காந்திஜியை மிகவும் கவர்ந்தது. முதலில் தன் மீதே சில பரிசோதனைகளைக் காந்திஜி செய்து கொண்டார். பிறகு தனது மனைவியையும் மகன்களையும் அதுபோன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்.

அதற்குப்பின், தண்ணீர், மண், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் உதவியுடன் வைத்தியம் செய்யும் ஆற்றலை அவர் பெற்றார். நோயுற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவருடைய ஆழ்ந்த ஈடுபாடு, அவரை ஒரு இயற்கை வைத்தியராகவே உருவெடுக்க வைத்துவிட்டது என்பது உண்மை,. ஒரு தருணத்தில், பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைந்த ஒரு நோயால் தன் மனைவி பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் வெறும் எலுமிச்சைச்சாற்றை மட்டுமே தொடர்ந்து புகட்டி அவர்  குணப்படுத்தினார். வேறொரு சமயத்தில், குடல்வால் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரை எவ்விதமான அறுவைச் சிகிச்சையும் இல்லாமல் இயற்கை முறையாகவே குணப்படுத்தினார்.

மருத்துவம் என்பது நான்கு வகையான அம்சங்களைக் கொண்டது என்கிறார் வள்ளுவர். `நோயாளி, மருத்துவன், மருந்து, நோயாளியின் அருகிலிருந்து உதவுபவன்` என்பன அந்த நான்கு அம்சங்கள். [குறள் 950]. இப்போதும் கூட, இந்த நான்கு அம்சங்களைத் தவிர, வேறு எந்த அம்சமும் மருத்துவத் துறையில் சேரவில்லை. நோயாளியை “உள்ளார்ந்த அன்புடன் அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் தன்மையில் (நான்காவது அம்சம்) ஒரு கைதேர்ந்த மருத்துவரைப்போல காந்தி பணியாற்றுகிறார்” என்று மிலி கிரகாம் போலக் ‘காந்தி எனும் மனிதர்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.. [காந்தி எனும் மனிதர். ஆங்கிலத்தில்: மிலி கிரகாம் போலக். தமிழில்: க. கார்த்திகேயன். சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை].

காந்திஜியின் கருத்துப்படி, “இயற்கை வைத்திய சிகிச்சை செய்பவர், நோயாளியிடம் ‘சிகிச்சையை விற்பதில்லை’. மாறாக  நோயாளி, தன் வீட்டில் சரியான முறையில் வாழ்க்கை நடத்துவது எப்படி என்பதை அவர் கற்பிப்பார்” என்பது அவர் கருத்து. [ஆரோக்கிய வாழ்வு, பக் 72] இந்த முறை, நோயாளியின் குறிப்பிட்ட நோயைக் குணமாக்குவதுடன், எதிர்காலத்தில் அவனை நோய்வாய்ப்படாமலும் காப்பாற்றுகிறது. “சாதாரணமான ஒரு டாக்டருக்கோ, வைத்தியருக்கோ நோயை ஆராய்வதிலேயே அதிகச் சிரத்தை இருக்கிறது. ஆனால் இயற்கை வைத்தியருக்கோ, ஆரோக்கியத்தை ஆராய்வதில்தான் அக்கறை அதிகம்” என்றும் காந்தி குறிப்பிட்டார். “சாதாரணமான டாக்டரின் சிரத்தை முடிவடையும் இடத்தில்தான் இயற்கை வைத்தியரின் சிரத்தை ஆரம்பமாகிறது.” என்றும் அடிகள் குறிப்பிடுகிறார். [ஆரோக்கிய வாழ்வு, பக் 72]

“இயற்கை வைத்தியத்தின்படி நோயாளியின் நோயைப் போக்குவது என்பது, நோய்க்கு இடமே இராத ஒரு புதிய வாழ்க்கை முறையின் ஆரம்பத்தையே குறிக்கிறது. ஆகவே, இயற்கை வைத்தியம் என்பது ஒரு வாழ்க்கை முறையே ஒழிய, ஒரு “சிகிச்சை முறை அன்று”  என காந்தி அடிகள் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..[ஹரிஜன் ”– 7-4-1946]. “இயற்கையின் விதிகளை வேண்டுமென்றோ, அறியாமலோ மீறுவதால் தான் நோய் உண்டாகிறது. ஆனால், உரிய காலத்தில் மீண்டும் இயற்கை விதிகளுக்குத் திரும்பிவிடுவது நோயைக் குணமாக்கவேண்டும் என்றாக்குறது. பொறுக்க முடியாத அளவுக்கு இயற்கையைக் கஷ்டப்படுத்தியவன் இயற்கை கொடுக்கும் தண்டனையை அனுபவித்தாக வேண்டும்” என்றும் [ ஹரிஜன் - 15--9--1946 ] பதிவு செய்திருக்கிறார் காந்தி அண்ணல்.

மகாத்மா தனது வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். உணவுச் சீர்திருத்தம், இயற்கை வைத்தியம் இவற்றின் மூலம் மனிதன் தனக்கு வரக்கூடிய நோய்கள் அனைத்தையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது அவருடைய முடிவு. உணவு விஷயத்திலும் தனக்குத் தானே பல பரிசோதனைகள் மேற்கொண்டு வாழ்ந்தார். “காற்றும், தண்ணீரும் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது; உடம்பைப் போஷித்து வளர்ப்பது உணவுதான். ‘உணவே உயிர் எனப்படுகிறது’ என்றாலும் கூட “உடம்பைக் காப்பாற்றுவதற்கு மருந்து சாப்பிடுவதைப்போல, உணவு உட்கொள்ளுவதையும், ஒரு கடமையாகக் கொள்ளவேண்டுமே ஒழிய, ருசிக்காக ஒருபோதும் சாப்பிடக்கூடாது” என்று (ஆரோக்கியத் திறவுகோல்,1942 ) கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வது வள்ளுவ கோட்பாட்டைத்தான்;  அதாவது “அதிகம் சாப்பிடக் கூடாது” [குறள் 941]  என்பதைத்தான்.

குறைவாகச் சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்தைச் சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்ற கோட்பாட்டை வள்ளுவர் தம் குறள்களில் [அதிகாரம் 95] வலியுறுத்துகிறார். ‘முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து, பின்னர் தக்க அளவு உணவுண்டால், உடலுக்கு மருந்தே தேவைப்படாது.’ [குறள் 942]; ‘அளவறிந்து உண்க’ [குறள் 943]; ‘பசித் தீயின் அளவறியாமல் ஒருவன் அதிகம் உண்டால், அளவில்லாத நோய் வருவது உறுதி’ [குறள் 947] ; சில உணவு வகைகளை சில உடம்புகள் ஏற்றுக்கொள்வதில்லை (ஒவ்வாமை/ அலர்ஜி). அவற்றை அவர்கள் அறிந்து உணர்ந்து விலக்க வேண்டும் என்கிற. மருத்துவ விஞ்ஞானத்தின் இன்றைய நவீன சிந்தனையை அன்றே வள்ளுவர் தம் குறளில் பதிவு செய்திருக்கிறார் [குறள் 945].

ஆரோக்கியம் குறித்த காந்தியின் ஆய்வுகள், அதன் மூலம் அவர் அறிந்த உண்மைகள் பல மிக நுணுக்கமானவை; நாம் அனைவரும் அறிந்து பயன்பெறத்தக்கவை. எடுத்துக்காட்டாக ஒன்று. “கொய்யாப் பழத்தின் விதையைக் கடிக்காமல் சாப்பிட்டால் அது ஜீரணத்திற்குப் பயன்படுகிறது. மாறாக, ஞாபகமாய் அதைக் கடித்துச் சாப்பிட்டால், அதில் உள்ள ஓர் அமிலம் இதயத்தை வலிமைப் படுத்துகிறது. கொய்யாப்பழ விதைகளைக் கடித்து உண்பவர்களுக்கு இதய நோய் (ஹார்ட் அட்டாக்) வரும் வாய்ப்புக் குறைவு” என்கிறார் காந்தி. 

1936லிருந்து 1946 வரை  10 ஆண்டுகள் காந்திஜி மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா (Wardha) அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் தங்கித் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டதுடன், மக்களுக்கு மருத்துவத் தொண்டும் செய்தார். அந்த நாட்களில் அந்த கிராமத்தில், மலேரியா, டைஃபாயிடு போன்ற நோய்களினால் அவதிப்படும் அநேக ஹரிஜன குடும்பங்களுக்கு உள்ளார்ந்த பரிவோடு  காந்தி தொண்டு செய்தார். சேவாக்ராமத்தில் பிரக்ருதிக் ஆகார் பண்டார் எனப்படும் இயற்கை உணவகம் உள்ளது. அங்கு அம்பாடி சர்பத் எனப்படும் மூலிகை சர்பத் ஆரோக்கியமான, மிகவும் பிரபலமானதும் ஆகும் என்ற செய்திகளைக் காந்தியுடன் வர்தா கிராமத்தில்  தங்கி, அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்களுக்குத் தொண்டு செய்ய வந்த வெளிநாட்டுப் பெண்மணி மிஸ் செல்ட் (மீரா பஹன் – சகோதரி மீரா) எழுதி வைத்துள்ள குறிப்புகளில் கூறியுள்ளார்.

சேவாக்கிராமத்தில் தினந்தோறும் ஒரு மணி நேரம் நோயாளிகளுக்காக அவர் ஒதுக்கி இருந்த சமயத்தில், ஆசிரமவாசிகள் மட்டுமின்றி பக்கத்து கிராமங்களிலிருந்தும் கூட்டமாக மக்கள் வரத் தொடங்கினர். காந்தி எல்லோருக்கும் கொடுத்து வந்த அறிவுரை என்னவென்றால், ''காய்கறிகளைச் சாப்பிடுங்கள்; மோர் அருந்துங்கள்; தோல் அரிப்பு நோய்கள் வந்தால் மண்ணைப் பூசிக்கொள்ளுங்கள்'' என்பதுதான். நோயாளிகள் பலகீனமாக இல்லாவிடில் அவர்களைத் திறந்தவெளியில் உட்கார்ந்திருக்கும்படி அறிவுரை சொல்வார். நோயாளியை முற்றிலுமாக சோதனை செய்த பின்புதான் சிகிச்சை முறை பற்றி அவர் தீர்மானிப்பார். சில சமயங்களில் அவர் நோயாளிகளின் மலத்தையும் எந்த அருவருப்பும் இல்லாமல் சோதனை செய்து பார்ப்பது உண்டு. இயற்கை வைத்திய முறையில், நோயாளியின் உணவு எப்படி தயாரிக்கப்பட வேண்டும், ஒத்தடம் எப்படிக் கொடுக்க வேண்டும், எனிமாவில் எந்த அளவிற்கு உப்பு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் பற்றி விபரமான அறிவுரைகளை காந்திஜி வழங்கி வந்தார். மருத்துவமனைகளையோ, மகப்பேறு மனைகளையோ,  நிறையக் கட்டிவைக்க வேண்டும் என்று காந்திஜி சொன்னதில்லை. மாறாக, மக்களுக்கு சுத்தத்தையும் சுகாதாரத்தையும் போதிப்பதுதான் முக்கியம் என்று கூறி வந்தார். நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட நோய் வராமல் தடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறிவந்தார்.

தினந்தோறும் மாலையில் உலாவிவிட்டுத் திரும்பும் சமயத்தில் ஒவ்வொரு நோயாளியையும் சந்தித்துப் பேசுவார். நோயாளிகளின் சிறு தேவைகள் பற்றிக்கூட காந்திஜி அறிந்து வைத்திருந்தார். "காந்திஜி உன்னை நெருங்கிவந்து உன்னுடன் பேசவேண்டும் என்றால் நீ ஒரு நோயாளியாக மாறவேண்டும்." என்று அவருடைய ஆசிரமவாசிகள் வேடிக்கையாக சொல்வதுண்டு.

சிறைவாசத்தின் போதும் காலை, மாலை வேளைகளில் அவர் வெகுநேரம் நடை பயில்வது வழக்கம். மேலும் சரியான சுவாசப் பயிற்சிகளையும் மேற்கொள்ளும்படி அவர் சிறைவாசிகளுக்கு போதனை செய்து வந்தார். மனக்கவலை காரணமாக உடலின் ஆரோக்கியம் பாதிப்பு அடைகிறது என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆகவே, மனதை சலனமின்றி வைத்துக்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.

இயற்கை வைத்தியத்தை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதையும் காந்திஜி அறிந்திருந்தார். இருப்பினும் பல காரணங்களுக்காக அச்சிகிச்சை முறையை அவர் வலியுறுத்தி வந்தார். ஏழை மக்கள் அதை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பது முதல் காரணம். அது நூற்றுக்கு நூறு சுதேசி முறை என்பது இரண்டாவது காரணம். அலோபதி மருந்துகளை ஒரேயடியாக ஒதுக்கி விடுவதற்கில்லை என்பதையும். காந்திஜி ஒப்புக்கொண்டார். ஒரு முறை சேவாகிராமில் காலரா நோய் பரவி இருந்தபோது, ஆசிரமவாசிகளையும் கிராமத்து மக்களையும் காலரா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளும்படி காந்திஜியே அறிவுறுத்தினார். ஒரு சிறைவாசத்தின் போது சிறை மருத்துவர்  வற்புறுத்தல் காரணமாக காந்திஜி குடல்வால் நோய்க்காக (அப்பெண்டிசைட்டிஸ்) அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டார். சிலர் அவருக்குக் கண்டனக் கடிதங்களை அனுப்பினார்கள். மருத்துவர் வற்புறுத்தல் இருந்த போதும், தான் அலோபதி சிகிச்சையை ஏற்றுக்கொண்டது தவறுதான் என்று காந்திஜி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

1946ல் புணேவில் உள்ள டாக்டர் தின்ஷா மேத்தாவின் வைத்தியசாலையில் அவரோடும் ஸ்ரீ ஜஹாங்கீர் பட்டேலோடும் காந்தி ஒரு கூட்டு தருமகர்த்தாவாக ஆனார். அந்தத் தரும ஸ்தாபனத்தின் ஒரு நிபந்தனை என்னவென்றால், 1946 ஜனவரி முதல் தேதியிலிருந்து அது ஏழைகளின் சிகிச்சை நிலையமாக ஆகிவிட வேண்டும் என்பதே. பணக்காரர்கள் சிகிச்சைக்காக வந்தால், அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்குப் பணம் கொடுத்துவிட்டு, ஏழைகளைப்போல் அதே வார்டுகளிலேயே தங்கியிருப்பார்கள். “இந்த நிபந்தனையின் படி நடக்க விரும்பாதவர்கள் வைத்தியசாலைக்கு வரவேண்டிய தில்லை” என்று கண்டிப்புடன்  அறிவித்தார். அந்த வைத்தியசாலைதான் தற்போது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் (National Institute of Naturopathy, Pune). 21-ஆம் நூற்றாண்டின் இயற்கை மருத்துவத்திற்கான மையமாக இந்த வளாகம் விளங்கவுள்ளது.

தனது 77வது வயதில் அளவற்ற உற்சாகத்துடன் புணேவுக்கு அருகில் உள்ள உருளி கன்ச்சன் கிராமத்தில், ‘நிசர்க் உப்ச்சார்’ ஆசிரமத்தில் 1946-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இயற்கை மருத்துவமனை ஒன்றை நிறுவினார். அதில் விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள் கிடையாது. அங்கு காந்திஜி நடத்திய புகழ்பெற்ற இயற்கை மருத்துவ முகாமை நினைவுபடுத்தும் விதமாக, புணேவில் அமையவுள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் புதிய வளாகம் நிசர்க் கிராம் என்று அழைக்கப்படும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்து எதிர்காலத்துக்குத் தயாராக இருக்கும் வகையில் வளாகம் உருவாக்கப்படுகிறது. டாக்டர் தின்ஷா மேத்தாவின் வைத்தியசாலையில் மகாத்மா காந்தி, கூட்டு தருமகர்த்தாவாக ஆன நவம்பர் 18 ம் தேதியை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இயற்கை மருத்துவ தினமாக 2018ல் அறிவித்துள்ளது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 இயற்கை மருத்துவ தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

யோகா - இயற்கை மருத்துவம் வெளிநாடுகளில் பிரபலமாகியுள்ளது. நம் நாட்டில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவமுறைகள் வளர்ந்துள்ள அளவிற்கு யோகா, இயற்கை மருத்துவ முறை இதுவரை நமது மக்களுக்கு அதிகம் சென்று சேரவில்லை என்பது உண்மைதான். தற்போது நம் நாட்டில் பல கல்லூரிகளில் யோகா, இயற்கை மருத்துவம், பட்டப் படிப்புகளாகவும், பட்டயப் படிப்புகளாகவும் கற்றுத் தரப்படுகிறது. இதன் மூலம் நம் நாட்டில் இயற்கை வைத்திய முறை இனி வளரலாம்.

இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தை மகாத்மா காந்தி மிகவும் நம்பி, தமது வாழ்நாள் எல்லாம் செயல்படுத்திய இயற்கை மருத்துவ முறைகளை நமது நாட்டில் முதன்மைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசும், அனைவரும் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் இதுவே நமது ஐந்தாவது இயற்கை மருத்துவ தின (18 நவ 2022) உறுதி ஏற்பு ஆக இருக்க வேண்டும். 

(நவ. 18 - தேசிய இயற்கை மருத்துவ நாள்)

[கட்டுரையாளர் முனைவர் இரா.மு. தேவசூர்யா - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, திருச்சி வேளாண்மைக் கல்லூரி நலவாழ்வு மையம்,

ம. ஐ. பவித்ரா - இயற்கை மருத்துவம், யோகா அறிவியல் மாணவி.]

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT