சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: ரணில் விக்ரமசிங்கவின் சுயநல அரசியல்: நேரடி ரிப்போர்ட் - 28

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

ராஜபட்ச குடும்பம் அதிகாரத்தில் இருந்தபோது தங்கள் உறவினர்களையும், இராணுவ அதிகாரிகளையும் அரச நிர்வாகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களாக நியமித்திருந்தார்கள்.

தற்போது ராஜபட்ச குடும்பத்தின் துணையுடன் அதிகாரத்திற்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி உறுப்பினர்களை அரச நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுக்கு நியமித்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த நாடளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த சாகல ரத்தநாயக்க தற்போது பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்தநாயக்க, ரூ.4 பில்லியன்(400 கோடி)  அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த தற்போதைய அதிபர் செயலாளர் காமினி செனரத்தை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து மேற்குறித்த வழக்கிலிருந்து தப்ப உதவி செய்தார்.

அதேபோல, கடந்தத் தேர்தலில் தோல்வியடைந்த  ரணில் விக்ரமசிங்கவின் மருமகன் ருவான் விஜேவர்தன தற்போது பிரதமர் அலுவலக இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான் விஜேவர்தன, ராஜபட்ச குடும்பம் மைத்திரிபால சிறிசேன உதவியுடன் சதி செய்து ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது தங்களுக்கு உதவ முன்வந்த கட்சி தலைவர்களுக்கு ரூ.500 மில்லியன்(50 கோடி) பணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓவருவருக்கும் ரூ.30 கோடியையும் ராஜபட்ச குடும்பம் லஞ்சம் வழங்கியதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இது தவிர, ருவான் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைப்படையில் இருந்த சகரான் தலைமையிலான கும்பல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதேபோல நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த அகில விராஜ் காரியவசம் பிரதமர் அலுவலக அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

அகில காரியவசம் கல்வி அமைச்சராக இருந்தபோது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சீருடை தொடர்பான கூப்பனில் தனது படத்தை அச்சிடுவதற்க்கு செலவு செய்யும் தொகையிலும் 25% அதிகமாக செலவு செய்திருந்தார்.

ஆகவே, ராஜபட்ச குடும்பத்திற்கும் ரணில் விக்ரமசிங்க கும்பலுக்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. இவர்கள் யாருக்கும் தூய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்கிற அக்கறையும் கிடையாது. சுயநல அரசியலைத் தான் செய்கிறார்கள்.

மேலும், இரண்டு தரப்புமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை போட்டி போட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

குறிப்பாக, சிங்கள பௌத்த அரசியல் பீடம் தனது அரசியலை பேரிடர் காலப் பகுதியில் நிறுத்தி வைக்காது என்பதற்கு குருந்தூர் மலை விவகாரம் ஒரு சான்று. ஆனால், இந்த உண்மைகளை மறந்து  சிலர் இப்போதும் ரணில் புராணம் பாடுகிறார்கள்.

கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் கோத்தபய ராஜபட்ச தவிர வேறு யாரால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என் கேட்ட அதே கும்பல்தான் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்க தவிர வேறு யாரால் நிமிர்த்த முடியும் என ரணிலை புகழ்கிறார்கள்.

ஆனால், உண்மையில் அரசியல் கட்டமைப்பு மாற்றம் இன்றி இலங்கையின் பொருளாதாரத்தை எவராலும் காப்பாற்ற முடியாது. இவர்கள் தமிழர்களின் சிக்கல்களுக்கு தீர்வு தர விரும்ப மாட்டார்கள்.

                                                                                                                                   - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT