சிறப்புக் கட்டுரைகள்

குறையொன்றும் இல்லை! சாதனை கபடி வீரரின் கதை

3rd Dec 2022 07:10 AM | கு. அழகியநம்பி

ADVERTISEMENT

 

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராயினும் கூன், குருடு, செவிடு, 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் செய்வாராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!

என்பது அவ்வை மொழி. 

மனிதராய் பிறப்பதிலும் எவ்வித உடல் குறையும் இன்றி பிறத்தல் அரியதாகும். அரிய வகையில் பிறப்பெடுத்த பல மனிதர்கள் பிறந்ததன் அருமை உணராமல் யாருக்கும் எவ்விதப் பயனும் இன்றி வாழ்ந்து மறைகின்றனர். குறையுடன் பிறந்த பலரோ தங்களுக்குள் பல திறமைகள் இருப்பது தெரிந்தும் அதை வெளிக்கொண்டு வரத் தெரியாமல் வாழ்ந்து மறைகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தம் திறமை அறிந்து அதை வெளிப்படுத்தும் வழியறிந்து பல இடர்பாடுகளுக்கிடையேயும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்து மறைகின்றனர்.

ADVERTISEMENT

அவ்வாறு தன் குறை மறந்து திறமையை வெளிப்படுத்தி சாதித்து வருபவர்தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த கபடி வீரர் சரவணன் (46).

தமிழகத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி அணியில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறன் வீரர்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான கபடிப் போட்டிகளில் தமிழ்நாட்டு அணிக்காக விளையாடித் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தியதால் தற்போது இந்திய தேசிய அணிக்குத் தேர்வாகியுள்ளார் சரவணன்.

தனது குறைகளை மறந்து நிறைகளை மட்டுமே சிந்தித்து சாதித்தது குறித்து அவர் கூறும்போது, 'பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமான உடலமைப்போடு பிறந்த நான், 2 வயதில் வாழ்வின் திருப்புமுனையாக போலியோ நோயால் தாக்கப்பட்டு கால் ஊனமாக்கப்பட்டேன். 40% உடல் ஊனமுற்ற நான் சிறுவயதிலேயே எனது குறையைப் பொருட்படுத்தாமல் சக தோழர்களுடன் இயல்பாக ஓடியாடி விளையாடி மகிழ்வேன். எனது ஊரான சிவந்திபுரம் கபடி விளையாட்டிற்குப் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள இளைஞர்களில் யாரும் கபடி விளையாடாமலோ கபடி விளையாட்டு தெரியாமலோ இருக்க மாட்டார்கள். ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை இங்கு கபடிப் போட்டிகள் பெரிய அளவில் நடைபெறும். 

பக்கத்து கிராமங்கள், பிற மாவட்டங்களிலிருந்து பல அணிகள் வந்து போட்டிகளில் கலந்துகொள்வார்கள். கபடிப் போட்டிகள் நடப்பது கோயில்களில் திருவிழா நடப்பதுபோல் இரவும் பகலும் வெகுவிமரிசையாக நடைபெறும். 

கபடிப் போட்டிகளைப் பார்த்து நானும் விளையாட விருப்பப்பட்டபோது ஆரம்பத்தில் பலர் உன்னால் முடியாது என்று ஒதுக்கிவிட்டனர். ஆனாலும் கபடி விளையாட்டில் எனக்கிருந்த மோகத்தால் எனது வயது சிறுவர்களுடன் தொடர்ந்து விளையாடி கபடியில் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.

எனது கல்லூரி நாட்களில் (1996 - 1999) கல்லூரிக்கான கபடி அணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் பல போட்டிகளில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தேன். இதைத் தொடர்ந்து உள்ளூர் கபடி அணியில் சேர்ந்து பல வெற்றியை அணிக்கு வாங்கித் தந்துள்ளேன். 

தொடர்ந்து காரைக்காலில் 2003 முதல் வேலை பார்த்து வந்தபோது அங்குள்ள கபடி அணியிலும் விளையாடி வந்தேன்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கபடி அணி உருவாக்க முடிவெடுத்து அணிக்கான வீரர்கள் தேர்வு பெரம்பலூரில் நடைபெற்றது. அதில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்திருந்த 45 வீரர்களில் நான் ஒருவன் மட்டுமே மாநில அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அன்றிலிருந்து தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறேன். தொடர்ந்து 3 முறை தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிகளுக்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும்போது எனது குறை என்பது மறைந்து மனதில் மகிழ்ச்சி மட்டுமே எழுகிறது.

எனக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 11 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் பள்ளிக்கான கால்பந்து அணியில் முன்னணி வீரராக விளையாடி மாநில அளவிலான போட்டிகளில் வென்றுள்ளார்.

முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள நான் செல்லிடப்பேசி பழுது நீக்கும் மையம் நடத்தி வந்தேன். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் பணியில் போதிய வருமானம் இல்லாததால் ஒரு ஆட்டோ வாங்கி அதையும் ஓட்டி வருகிறேன்' என்றார் சரவணன். 

மேலும் அவர் பேசுகையில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான கபடி அணியில் மாநில அணிக்காக விளையாடி வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள என்னைப் போன்ற 16 வீரர்கள் போதிய வருவாய் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் முன் சுமார் 10 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். சொந்த செலவிலேயே பயிற்சியில் கலந்துகொள்கிறோம். பயிற்சிக்கும் போட்டிக்கும் செல்லும் நாட்களில் தொழிலும் செய்ய முடியாமல் சொந்தப் பணம் செலவழித்தே செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெரும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, அரசு மாநில அணி வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதோடு நிரந்தர வருமானம் வரும் வகையில் வேலைவாய்ப்பும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களும் என்னைப் போன்ற மாற்றுத்திறன் வீரர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

"எனது கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கபடி விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருகிறேன். மனிதனாய்ப் பிறந்த எவருக்கும் குறையொன்றுமில்லை. குறை என்று சொல்ல வேண்டுமானால் அனைவரிடமும் குறை உண்டு என்றே சொல்லலாம். அது அவரவரது எண்ணத்தில் உள்ள குறை. உறுப்பு குறை என்பது ஓர் குறையே கிடையாது. எனவே, உடல் குறையுடையவர்கள், மாற்றுத்திறன் உடையவர்கள் என்பது மிகச் சரியே. மாற்றுத்திறன் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள திறனைக் கண்டறிவது மிக எளிது. ஆனால், அதை வெளிக்கொண்டு வர சிறிதும் தயங்காமல் வெளிப்படுத்த முன்வர வேண்டும். பிறர் சொற்களை கருத்தில்கொள்ளக் கூடாது. நமக்கான வழியைக் கண்டுபிடித்து அதன்வழியே தயங்காமல் வெற்றிநடை போட்டு சாதனை படைக்க வேண்டும்" என்று மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அறிவுரை கூறுகிறார் சரவணன். 

சிறு வயது முதலே கபடி விளையாட்டின் மீது எனக்கிருந்த ஈடில்லாத ஆர்வமும், அணியில் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற ஏக்கமுமே இன்று என்னை இந்தியாவிற்கான தேசிய அணியில் விளையாட வைத்துள்ளது என்று கூறி சிரிக்கிறார் பெருமையோடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT