சிறப்புக் கட்டுரைகள்

சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!

ஆர். ஆதித்தன்


சேலம்: சேலம் என்றாலே மாம்பழமும், ஜவ்வரிசி, வெள்ளிக்கொலுசு தான் நினைவுகளை தொட்டு செல்லும். சேலத்தில் மாலை நேரமானதும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் சேலம் தட்டுவடை செட் அனைத்து தரப்பினராலும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டியாக விளங்கி வருகிறது.

சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்தவர் ரவி (32). இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தனது தாயுடன் தட்டுவடை செட் போட உதவி செய்து வந்தார்.

பள்ளிப் பருவத்திலே தாய்க்கு உதவியாகத் தொடங்கிய ரவியின் வாழ்க்கையில் தட்டுவடை செட் முழு நேர தொழிலாக மாறிவிட்டது. இப்போது 10 ஆண்டுகளாக தட்டுவடை செட் போட்டு அசத்தி வருகிறார். சேலம் மட்டுமல்ல சென்னை, கோவை, மதுரையிலும்  சேலம் தட்டு வடை செட்டை திருமண நிகழ்ச்சிகளில் பிரபலப்படுத்தி வருகிறார்.


சேலம் ஸ்பெஷல் தட்டுவடை குறித்து ரவி கூறியது:

எனது பள்ளிப் பருவத்தில் தாய் செய்து வந்த தட்டுவடை செட் போட உதவி செய்து வந்தேன். முன்பெல்லாம் தட்டுவடை சாப்பிட வேண்டும் என்றால், அம்மாபேட்டை மற்றும் பட்டை கோயில் வீதிகளுக்குச் செல்ல வேண்டும். அப்போது, சைக்கிளில் வைத்து தட்டுவடை செட் விற்பனை செய்வார்கள். ஒரு செட் தட்டு வடை விலை ரூ.5 ஆக இருந்தது.

இப்போது அழகாபுரம் பெருமாள் கோயில் அருகே மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறேன். இந்தக் கடையை 10 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன்.



சேலம் தட்டுவடை செட்களில் மிகவும் பிரபலமானது சேலம் ஸ்பெஷல் தட்டு வடை செட் தான். இதில் சாதாரண தட்டு வடை செட்களில் வைக்கப்படும் தட்டுவடை முறுக்கு, தக்காளி, வெங்காயம், மாங்காய் துருவல், பூண்டு, பீட்ரூட் மற்றும் கேரட் துருவலுடன் கூடுதலாக தக்காளி சட்னியும், கொத்தமல்லி சட்னியும் வைத்து தரப்படுகிறது.

தட்டுவடை செட்களில் சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் அதிகபட்சமாக ரூ.50-க்கு விற்பனையாகிறது. இதில் சாதாரண தட்டுவடை செட் ரூ.20-க்கு விற்பனையாகிறது. இதில் தக்காளி, கேரட் மற்றும் பீட்ரூட் துருவல், பூண்டு, 5 தட்டு வடை செட் முறுக்கு வைத்து வாடிக்கையாளர்களுக்கு தரப்படுகிறது.

அடுத்து நொறுக்கல் செட் பிரபலமானது. இந்த நொறுக்கல் என்பது கை முறுக்கை உடைத்து தக்காளி சட்னியுடன் கலக்கி தரப்படும் அறுசுவை சிற்றுண்டியாகும்.


ஒரே மாதிரி தட்டுவடை செட் போட்டு தர விருப்பமில்லை. தட்டுவடை செட்களில் மாற்றத்தையும், புதுமையையும் கொண்டு வந்தால் தான் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில், எனது கடையில் கலக்கல் செட், ஈரோடு செட், குடல் செட்,  பன் செட், பன் நொறுக்கல்  என 65 வகையான செட்கள் போடுகிறேன்.

சேலத்தில் ஆயிரக்கணக்கான தட்டுவடை செட் கடைகள் செயல்படுகின்றன. கரோனா தொற்று தாக்குதலுக்குப் பிறகு ஏராளமானோர் புதிதாக தட்டுவடை செட் கடைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனது கடையைப் பொருத்தவரையில் உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. சான்றிதழ் பெற்று தரமான வகையில் தட்டு வடை செட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றேன். ஆன்லைனில் புக் செய்தும் தட்டுவடை சாப்பிடும் ரசிகர் கூட்டமும் உள்ளது.


எனக்கென தனியாக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் தினம் தரும் தகவல்களை வைத்து தட்டுவடை செட்களில் மாற்றத்தைக் கொண்டு வருகிறேன்.

பகல் நேரங்களில் தட்டுவடை செட்டுக்குத் தேவையான சட்னி தயாரித்தல், தட்டுவடை பெறுதல், காய்கறி வாங்குதல் உள்ளிட்டவைகளுக்கு நேரம் செலவிடுவேன். மாலை நேரத்தில் தள்ளுவண்டியுடன் வியாபாரத்தை துவக்கி விடுவேன்.


என்னிடம் மதுரையைச் சேர்ந்த ஒருவர் தட்டுவடை செட் போட பயிற்சி எடுத்தார். இப்போது அவர் மதுரையில் 2 தட்டு வடை செட் கடைகளை நடத்தி வருகிறார்.

அதேபோல சென்னை, கோவை, ஈரோடு, அவினாசியில் அடிக்கடி திருமண நிகழ்வுகளில் தட்டுவடை செட் போட ஆர்டர் வரும். கோவையில் நடைபெறும் உணவுத் திருவிழாக்களில் சேலம் ஸ்பெஷல் தட்டு வடை செட்டை விளம்பரப்படுத்தி வருகிறேன்.


இப்போது சேலத்தை தாண்டி கோவை, சென்னை, மதுரை என பல ஊர்களில் தட்டுவடை செட் பிரபலமாகி வருகிறது. பானி பூரி செட் கடைகளை போல தட்டுவடை செட் கடையும் பிரபலமாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான திருமண நிகழ்வுகளில் தட்டு வடை செட் போட சென்று வந்துள்ளேன்.

அதேபோல கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட தட்டுவடை செட் போட்டு தருகிறேன். ஆர்வமாக மாணவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். மாணவிகள் விடுதிகளில் போன் செய்து தட்டுவடை செட் ஆர்டர் பெற்று வாங்கி செல்கின்றனர். சேலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தட்டுவடை செட் கடைகள் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறிவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT