சிறப்புக் கட்டுரைகள்

மூன்று தலைமுறை கண்ட இனாம்குளத்தூர் பிரியாணி!

16th Oct 2021 08:20 AM | ஆர். முருகன்

ADVERTISEMENT

முகலாய உணவு கலாசாரத்தின் அடையாளம் பிரியாணி. உலகம் முழுவதும் பிரியாணி பல பகுதிகளிலும் வெவ்வேறு சுவைகளிலும் பலதரப்பட்ட பெயர்களிலும் அழைக்கப்பட்டாலும் அவற்றிக்கெல்லாம் முதன்மையானது இஸ்லாமியர்களின்  திருமணங்களிலும், ரமலான், பக்ரீத் போன்ற விழாக் காலங்களிலும் இஸ்லாமியர் வீடுகளில் பாரம்பரியமிக்க முறையில் உருவாக்கப்படும் பிரியாணியாகும்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் ஹைதராபாத்திலிருந்து தருவிக்கப்பட்ட அடையாளமாக உள்ளது. இந்த வகையில், ஹைதராபாத் சென்று வந்த நண்பரின் துணையுடன் செவத்த கனி (அப்துல் ரஹ்மான்) அறிமுகப்படுத்தியதுதான் இனாம்குளத்தூர் பிரியாணி. 

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த பிரியாணி கிடைக்கும் என்பது தனிச் சிறப்பு. தனது 12 வயதில் சமையல் கற்றுக்கொண்ட செவத்த கனி, விருந்து, விழாக்களுக்கு சமையல் செய்து வருவதை தொழிலாக மாற்றிக் கொண்டார். தனது நண்பர் ஒருவர் ஹைதராபாத் சென்று கற்றுக் கொண்டு வந்த பிரியாணியின் சமையல் யுத்தியைக் கேட்டு அந்த உணவை நமது ஊர்க்காரர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக விருந்து நிகழ்ச்சிகளில் முதலில் பிரியாணி தயாரித்து வழங்கினார்.

ADVERTISEMENT

இது, அமோக வரவேற்பை பெற்றதால் வாரத்துக்கு ஒரு நாள் அசைவம் என்றாகிவிட்ட சூழலில், ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரியாணி தயாரிக்கும் ஹோட்டலை தொடங்கினார். இதர நாள்களில் டிபன் வகைகளை தயார் செய்து தந்தாலும், ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கு கிடைத்த மவுசுதான் இவரை உணவுப் பிரியர்களின் உயர்ந்த இடத்துக்கு கொண்டு சேர்த்தது. குடிசை கடையாக பெயரில்லாமல் தொடங்கப்பட்டதுதான் இந்த பிரியாணி கடை. இப்போது, 50 ஆண்டுகளை கடந்து இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி கடை என்பதை அடையாளத்துக்காக (போலிகளை தவிர்க்க) கடைக்கு பெயர்ப் பலகை வைத்து பாரம்பரியம் மாறாமல் விருந்து அளித்து வருகின்றனர்.

பெப்பர் சிக்கன்

துறையூர், கொப்பம்பட்டி சீரக சம்பா அரிசி, தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மறி ஆடு, இனாம் குளத்தூர் தண்ணீர், செவத்தகனிக்கு மட்டுமே தெரிந்த பிரியாணிக்குத் தேவையான மசாலா வகைகள் சேர்ப்பு ஆகியவைதான் இனாம்குளத்தூர் பிரியாணிக்கு பெயர் பெற்றுத் தந்துள்ளது. இதுமட்டுமல்லாது, செவத்தகனியின் அறிமுகமான பெப்பர் சிக்கன் எனும் மிளகில் பிரை செய்த கோழிக் கறி மிகவும் பிரசித்தம்.  

சுவரொட்டி

செவத்த கனிக்குப் பிறகு அவரது மகன் பீர் முகமது நடத்தி வந்தார். இப்போது, பீர் முகமதுவுக்கு பிறகு மூன்றாவது தலைமுறையாக அவரது மகன்களான இர்ஷாத் அகமத், இஸ்தியாக் அகமத் ஆகியோர் இந்த கடையை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்துநிலையம், சமயபுரம் பகுதிகளில் புஹாரி ரெஸ்டாரெண்ட் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி தினந்தோறும் பிரியாணி தயாரித்து வழங்கினாலும், இவர்களது அடையாளத் தயாரிப்பான இனாம்குளத்தூர் பிரியாணிக்கு எப்போதுமே மவுசு அதிகம். 

மட்டன் கோலா உருண்டை

பல ஊர்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் ஏழை முதல் பணக்காரர்கள் வரை தேடி வந்து, காத்திருந்து ஞாயிற்றுக்கிழமை இந்த பிரியாணியை ருசித்துச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் விற்பனை 2.30 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். காலை 10 மணிக்கே வந்து டோக்கன் வாங்கி காத்திருப்போரும் பலருண்டு. பார்சலுக்கே தனி வரிசை என்றாகிவிட்டது. பார்சல் ரூ.230-க்கு கிடைக்கிறது. அரைப்படி ரூ.1,400, ஒரு படி ரூ.2,800-க்கு கிடைக்கிறது. கடையில் அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு கால்பிளேட் ரூ.130 என்ற வகையில் வழங்கப்படுகிறது. 

வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

பிரியாணி மட்டுமல்ல அதற்காக வழங்கப்படும் தால்சா குழம்பு, மட்டன் பால்ஸ் எனும் கோலா உருண்டை, சிக்கன் 65, வஞ்சிரம் மீன் வறுவல், சுவரொட்டி, ஈரல் என அசைவ உணவுப் பிரியர்களுக்கென்றே பல அயிட்டங்கள் உண்டு. அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் பலரும் இனாம் குளத்தூர் பிரியாணி சுவைக்கு அடிமை என்பதே இந்த கடைக்கான கூடுதல் சிறப்பு. 

வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

இதுதொடர்பாக, மூன்றாவது தலைமுறையான இஸ்தியாக் அகமத் கூறுகையில், தாத்தாவின் மசாலா பக்குவம் (அது மட்டும் ரகசியம்), இனாம் குளத்தூர் தண்ணீர் இந்த இரண்டும்தான் எங்களது பிரியாணிக்கு சுவை கூட்டி வருகிறது. சமையல் மாஸ்டர்கள் மாறினாலும் மாறாத சுவைக்கு காரணம் இந்த ரகசியம்தான். அன்று முதல் இன்று வரை விறகு அடுப்புகளில் மட்டுமே சமைப்பதால் மணமும், சுவையும் மாறவில்லை. இளம் ஆடுகளை தேர்வு செய்வது, துறையூர் கொப்பம்பட்டி சீரகச் சம்பா அரிசி, இளம் சூட்டில் வேக வைத்து, சரியான பக்குவத்தில் தம் பிடித்தல் ஆகியவை எங்களது சிறப்பம்சங்கள். மேலும், சாப்பிட்டவுடன் செறித்துவிடும் என்பதால் குழந்தைகள் கூட விரும்பி உண்ணுவர். வயிற்றுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. எனவேதான், தேடி வந்து ருசித்து செல்கின்றனர் என்கிறார் இஸ்தியாக்.

Tags : world food day food day Food Day Special
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT