சிறப்புக் கட்டுரைகள்

வெளிமாநிலங்களிலும் வரவேற்பைப் பெறும் சுவை மிகு தருமபுரி நிப்பட்!

16th Oct 2021 09:00 AM | ஆர். ராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையான உணவு வகைகள், பலகாரங்கள், தின்பண்டங்கள் பிரத்யேக பெயர் பெற்றிருக்கும். அந்த வரிசையில் தருமபுரி மாவட்டத்தில், தயாரிக்கப்படும் நிப்பட்டும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றிருக்கிறது. பிற மாவட்டங்களில் தட்டை வடை, தட்டு வடை என்பது தான் தருமபுரி வட்டாரத்தில் 'நிப்பட்' என்றழைக்கப்படுகிறது. இந்த நிப்பட் மற்ற மாவட்டங்களில் தயாரிக்கப்படுவதைக் காட்டிலும் தருமபுரி பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பகுதி மக்களால் கார வகைகளில் முறுக்குக்கு நிகராகவும், அதனைவிட கூடுதலாகவும் நிப்பட் சுவைக்கப்படுகிறது.

இந்த நிப்பட்டில், நிலக்கடலை, பொட்டுக் கடலை, கருவேப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து வைத்து அவற்றை பதமான அரிசி மாவுடன் இணைத்து பிசைந்து பல்வேறு அளவுகளில் தட்டையாக வைத்து, பின்பு எண்ணெயில் பொரித்து மொறுமொறு பதத்தில் எடுக்கப்படுகிறது. இதன்பின்பு எண்ணெய் வடிக்கப்பட்டு அவற்றை பொட்டலங்களாக கிலோ கணக்கில் வைத்து அடைத்து, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று அளவுகளில் தயாரித்து பொட்டலங்களாக மாற்றி மொத்தமாக அனுப்பப்படுகிறது. கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தருமபுரி அருகேயுள்ள ஒட்டப்பட்டி, சோகத்தூர், ஆட்டுக்காரன்பட்டி, பிடமனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலைகள் அமைத்தும், குடிசைத் தொழிலாளகவும் நிப்பட் தயாரிக்கப்படுகிறது. ஆலைகளில் ஒரு அடுப்பில் அதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக அளவிலான வாணலியில் நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ வரை பொரிக்கப்படுகிறது.

இதில், ஆலைகள் வைத்து உற்பத்தி செய்வோர் இரண்டு அல்லது மூன்று அடுப்புகளும், குடிசைத் தொழிலாக வீட்டில் தயாரிப்போர் 50 கிலோ வரையும் தயாரிக்கின்றனர். இந்த நிப்பட்டுகளை மொத்த வியாபாரிகளிடம் பொட்டலங்களாக விற்பனை செய்யும்போது அவர்கள் கோரும் பெயர்கள் (பிராண்ட்) மற்றும் தரத்தில் வழங்கப்படுகிறது.

தருமபுரி வட்டாரத்தில் தயாராகும் நிப்பட்டுகளை கோவை மற்றும் பெங்களூரிலிருந்து மொத்த வியாபாரிகள் வாங்கி, அவற்றை ஹைதாரபாத், விசாகப்பட்டினம், மும்பை, புதுதில்லி, டேராடூன் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அங்குள்ள சிப்ஸ் கடைகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

குடிசைத் தொழிலாக செய்வோர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பேக்கரிகள், சிப்ஸ் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. பல்வேறு மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்புவதால்,ஆண்டு முழுவதும் நிப்பட் தயாரிப்பு நடைபெறுகிறது. இதனால், உரிமையாளர்களுக்கு ஒரளவுக்கு வருவாய் கிடைக்கிறது. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த தட்டை வடை தயாரிக்கப்பட்டாலும், இந்த வகை தின்பண்டம் சென்னை உள்பட பல பகுதிகளில் பொதுவாக தருமபுரி தட்டை அல்லது நிப்பட் என்றே அழைக்கப்படுகிறது. 

படங்கள்- யு.கே.ரவி

Tags : world food day food day Food Day Special
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT