சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் ஆயிரம்: கரோனாவைக் கட்டுப்படுத்தும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

6th May 2021 03:56 PM | பேரா. சோ. மோகனா

ADVERTISEMENT

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும், அதனைக் கட்டுப்படுத்தும் புதிய மனித மரபணுவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

கரோனா இரண்டாவது அலையில் சிக்குண்டு கொத்துகொத்தாக செத்து, சுடுகாடுகூட இல்லாமல் அல்லாடிக்கொண்டு, தெருவில் பிணத்தோடு அமர்ந்து இருக்கின்ற அவல நிலைதான் நாட்டின் தற்போதைய நிலை. 

இந்நிலையில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுமாறு ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. அதுதான், இந்த கரோனா வைரஸான 'சார்ஸ்-கோவிட்-2'(SARS-COV-2)வின் பாதிப்பை எதிர்க்கவல்ல, அதனுடன் போரிடும் மனித உடலுக்குள் உள்ள ஒரு மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை சான்ஃபோர்ட் பர்ன்ஹாம் மருத்துவக் கண்டுபிடிப்பு நிறுவனம் 2021, ஏப்ரல் 16 அன்று மூலக்கூறு செல் இதழில் வெளியிட்டுள்ளது. 

நோயின் தீவிர காரணிக்கு விடை தேடும் கண்டுபிடிப்பு 

ADVERTISEMENT

சான்போர்ட் பர்ன்ஹாம் மருத்துவ நிறுவனத்துடன் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்ஸ்-கோவிட்-2 நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் மனித மரபணுக்களின் தொகுப்பை அடையாளம் கண்டுள்ளனர்.

கரோனாவை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த மரபணுக்கள் உதவுகின்றன என்பதை அறிவதுடன், நோயின் தீவிரத்தை பாதிக்கும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் புரிதலுக்கு பெரிதும் உதவும். மேலும், சாத்தியமான சிகிச்சை முறைகளையும் பரிந்துரைக்கிறது. கேள்விக்குரிய மரபணுக்கள் உடலின் முன்னணி வைரஸ் போராளிகளான இன்டர்ஃபெரான்களுடன்(Interferon) தொடர்புடையவை. 

வைரஸ் பாதிப்பில் செல்களின் செயல்பாடு என்ன?

சார்ஸ்-கோவிட்-2 வைரஸுக்கான பாதிப்பில் நமது செல்களின் உடனடி செயல்பாடு என்ன, இவை வலுவான பதிலடியைக் கொடுக்கின்றதா, மிகவும் பலவீனமானதா என்பது குறித்து நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்க்கிருமி திட்ட  இயக்குநர் மற்றும் பேராசிரியரான, சுமித் கே. சந்தா, சார்ஸ்-கோவிட்-2 வைரஸ் மனித செல்களினுள் ஊடுருவிச் சென்று படையெடுத்து, எவ்வாறு சுரண்டி, அதனை கொள்ளையடிக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆய்வாளர்கள் புதிய நுண்ணறிவு விஷயங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஆச்சில்லே ஹீல்(Achille's heel) எனப்படும் பகுதியைத் தேடினர். இது குதிகாலிலுள்ள பலவீனமான பகுதி. அதுபோல வைரஸின் 'ஆச்சில்லே ஹீல்' பகுதி எது என்று கண்டுபிடித்துவிட்டால் அதற்கு எதிரான, எதிர் வைரஸ் மருந்துகளை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்' என்றார். 

இன்டர்ஃபெரான்-தூண்டப்பட்ட மரபணுக்கள் 

பெருந்தொற்று நோய் தொடங்கிய உடனேயே, மருத்துவர்கள் சார்ஸ்-கோவிட்-2 நோய்த்தொற்றோடு மோதும் பலவீனமான இன்டர்ஃபெரானின் விளைவாக, நம் உடலுக்குள் கரோனாவின் சில கடுமையான நிகழ்வுகள் ஏற்பட்டதாக கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பே பேராசிரியர் சுமித் கே. சந்தா மற்றும் அவரது சகாக்கள், இன்டர்ஃபெரான்களால் தூண்டப்பட்ட மனித மரபணுக்களைத் தேட வழிவகுத்துத் தந்தது. 

இதனை விஞ்ஞானிகள், இன்டர்ஃபெரான்-தூண்டப்பட்ட மரபணுக்கள் (Interferon Stimulated Genes) என்று அழைக்கின்றனர். இது சார்ஸ்-கோவிட்-2 பெருந்தொற்று /நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும்விதத்தில் செயல்படுகிறது.

சார்ஸ்-கோவிட்-2 & சார்ஸ்-கோவிட்-1

சார்ஸ்-கோவிட்-1-லிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 2002 முதல் 2004 வரை ஆட்டிப்படைத்த ஒரு கொடிய, ஆனால் ஒப்பீட்டளவில் கொஞ்சம் பிரச்சினை குறைவான நோயை ஏற்படுத்திய வைரஸ். மேலும் இது சார்ஸ்-கோவிட்-2வை ஒத்திருப்பதை அறிந்ததால் ஆய்வாளர்கள் ஆய்வக சோதனையை உருவாக்க முடிந்தது. கரோனாவில் வைரஸ் நகலெடுப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களை அடையாளம் காண்பதற்கான சோதனைகள் செய்ய முடிந்தது.

இதில் 65 மரபணுக்கள் சார்ஸ்-கோவிட்-2 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. அவற்றில் சில உள்ளே செல்லும் வைரஸ்களையும், அவை உயிரணுக்குள் நுழைவதையும்  தடுக்கின்றன. சில மரபணு, வைரஸின் உயிர்நாடியாக இருக்கும் ஆர்.என்.ஏ. உற்பத்தியை அடக்கியது, வைரஸின் கூட்டத்தைத் தடுக்கிறது என்கிறார் பேராசிரியர் சந்தா.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த மரபணுக்கள் இந்த கரோனாவுக்கு தொடர்பில்லாத எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும் பருவகால காய்ச்சல், வெஸ்ட் நைல்(West Nile) மற்றும் எச்.ஐ.வி. போன்றவை மீதும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி கட்டுப்படுத்துகின்றன என்பது மிகவும் ஆச்சரியமான செய்தியாகும். 

சார்ஸ்-கோவிட்-2​ உயிரியல் ஆய்வும்கூட தேவை 

புரத பேக்கேஜிங்கிற்கு பொறுப்பான துணைச்செல்களின் பகுதியில் உள்ள, சார்ஸ்-கோவிட்-1 மற்றும் சார்ஸ்-கோவிட்-2 நகலெடுப்பைத் தடுக்கும் எட்டு ஐ.எஸ்.ஜி. மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் வைரஸ் தொற்றுநோயைத் துடைத்து எறிய பாதிக்கப்படக்கூடிய இடத்தைப்  பயன்படுத்த முடியும் என்று பரிந்துரைக்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் லாரா மார்ட்டின்-சாஞ்சோ.

இது முக்கியமான தகவல்தான். ஆனாலும்கூட இந்த வைரஸின் உயிரியலை நாம் முழுமையாக இன்னும் அறிந்துகொள்ள வேண்டும், அப்போதுதான் மேலும் இந்த ஐ.எஸ்.ஜி-களில் உள்ள மரபணு மாறுபாடு கரோனா தீவிரத்தோடு தொடர்புபட்டுள்ளதா என்பதை ஆராய முடியும் என்றும் தெரிவித்தார். 

மாறும் சார்ஸ்-கோவிட்-2​வின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த..

அடுத்த கட்டமாக ஆய்வாளர்கள் சார்ஸ்-கோவிட்-2 வகைகளின் உயிரியலைப் பார்ப்பார்கள். அவை தொடர்ந்து பிறழ்வாக/மாறுபாடு(variants)உருவாகி தடுப்பூசி செயல்திறனை அச்சுறுத்துகின்றன என்றும் அறிய முயல்வார்கள். . மார்ட்டின்-சாஞ்சோ ஏற்கனவே ஆய்வக விசாரணைக்கு மாறுபாடுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

"தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் உதவுகின்றன. இப்போது அடிப்படை ஆராய்ச்சி முயற்சிகளினால் நகராமல் அங்கேயே தங்கியிருந்து செயல்படுவதும் மிகவும் முக்கியமானது" என்கிறார் பேராசிரியர் சந்தா

சான்போர்ட் பர்ன்ஹாம் பிரீபிஸ் மற்றும் பிற இடங்களில் அடிப்படை ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வதால் இதுவரை மிக வேகமாக வந்துள்ளோம், மேலும் இந்த ஆய்வு என்பது மற்றொரு வைரஸ் வெடிப்பு/பெருந்தொற்று ஏற்படும்பட்சத்தில் அதை தடுக்க உதவும் என்றும் கூறினார். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT