சிறப்புக் கட்டுரைகள்

அப்பா - மகள் உறவென்பது...

20th Jun 2021 11:35 AM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்! 

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...

அப்பாக்களுக்கு மகள்கள் எப்போதுமே தேவதைகள்தான். மகள்களுக்கு ஆண் தேவதை, தன்னுடைய அப்பா மட்டுமே. 

சாதாரணமாக ஒரு வீட்டில் அம்மாவுக்கு மகன்களும், அப்பாவுக்கு மகள்களும் செல்லப்பிள்ளைகளாக இருப்பது வழக்கம்தான். இருந்தாலும், உலகில் மற்ற உறவுகளைவிட அப்பா- மகள் உறவு அதிகம் கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

ADVERTISEMENT

ஆண் ஒருவன் தான் பெற்றெடுத்த தாய், சகோதரியை அடுத்து தன்னுடைய மகளை, தாயாகக் கருதுகிறான். தாய், சகோதரியைவிட மகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், அவள் பிறந்தது முதல் தன் வாழ்நாள் இறுதிவரை அவளைத் தாங்குகிறான். 

மனைவியின் வயிற்றில் இருக்கும்போதிலிருந்து குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடும் ஆண், தனக்குப் பிறக்கப்போவது பெண் குழந்தையாக இருந்தால் கூடுதலாகத் திட்டமிட்டுக்கொள்கிறான். 

மேலும் ஆண் ஒருவனுக்கு தன்னுடைய இறுதிப்பயணம் வரை வரும் பெண் உறவு மகள். 

தன்னுடைய மகன்/மகளுக்கு ஆசானாக விளங்கும் ஆண் தேவதைகள், மகள் மீது கூடுதல் அன்பையும் அக்கறையும் செலுத்துகிறார்கள். 

மகனிடம் வெளிப்படையாக பேச முடியாத பல அப்பாக்கள், தங்கள் மகள்களிடம் வெளிப்படையாக தங்கள் உணர்வுகளைக் கொட்டுகிறார்கள். 

அதேபோல ஒரு வீட்டில் மகன் இல்லாத குறையை மகள் தீர்த்துவைக்கிறாள். அந்தவகையில் பலரது வீட்டில் அப்பாக்கள், தங்கள் மகளை - ஒரு தைரியம் மிக்க மகனாக வளர்த்தெடுக்கிறார்கள். 

பெண் பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதாலே அப்பாக்கள் பெண் பிள்ளைகளை கடிந்துகொள்வது அரியதொரு நிகழ்வே. 

அப்படிப்பட்ட பெண் குழந்தைகள் பிறந்து இந்த சமூகத்தில் தைரியமிக்க ஒரு பெண்ணாக உருவெடுக்க அப்பாவின் அன்பும், அறிவுரையும்  தேவைப்படுகிறது. இன்று சமூகத்தில் சாதனை படைத்திருக்கும் பல பெண்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் அவர்களது அப்பாக்களாகத் தான் இருக்க முடியும். 

குழந்தைப் பருவத்தில் அவளுடன் இறங்கி விளையாடும் அப்பா, அவளுடைய ஒவ்வொரு ஆர்வத்தையும் தூண்டி அதை கற்றுக்கொள்ளச் செய்கிறார். பிற்காலத்தில் அவளது முன்னேற்றம் கருதி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்கிறார். 

ஒரு பெண்ணின்(மகளின்) அனைத்து உத்தரவுகளுக்கும் அடிபணியும் ஆண்மகன் அப்பாவாகத் தான் இருக்க முடியும். 

அதுபோல மகளும் தன்னுடைய எந்தவொரு சூழ்நிலையிலும் தனக்குத் துணையாக தந்தை இருக்கிறார் என்ற நம்பிக்கை திருமணம் ஆன பின்னும் தொடர்கிறது. 

மேலும் இன்றைய காலத்தில் ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் பலரும் தங்கள் பெற்றோரை கவனித்துக்கொள்கின்றனர். 

'ஆண்மகன் ஒருவன் இப்படித்தான் இருக்க வேண்டும், தன்னிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்' என்பதற்கு உதாரணமாக பெண்களுக்கு அப்பா மட்டுமே இருக்கிறார். 

பெண்ணுக்கு, பிறந்தது முதல் அன்பைப் பொழியும் தந்தையாகவும், சுக, துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தோழனாகவும், தவறான பாதையில் சென்றால் கண்டித்து திருத்தி வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுத்தரும் ஆசானாகவும், வெளியில் சென்று திரும்பும்வரை ஒரு பாதுகாவலனாகவும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை மீட்டெடுக்கும் ஹீரோவாகவும் இருக்கிறார் அப்பா. 

வளர்ந்தாலும் அப்பாக்களுக்கு மகள்கள் 'தங்கமீன்கள்' தான், வயதானாலும் அப்பாக்கள் மகள்களுக்கு 'தெய்வத் திருமகன்கள்' தான். 

ஆண் தேவதைகளான அப்பாக்களை மகள்கள் நித்தமும் கொண்டாடி வந்தாலும் இன்று கூடுதல் சிறப்பாக கொண்டாடுங்கள்! 

[ஜூன் 20, 2021 - தந்தையர் தினம்]

Tags : fathers day
ADVERTISEMENT
ADVERTISEMENT