சிறப்புக் கட்டுரைகள்

புற்றுநோய் என்றால் என்ன?

22nd Sep 2020 05:00 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

புற்றுநோய் என்றால் என்ன?

உடலில் உள்ள உயிர் அணுக்களின் ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே புற்றுநோய். இவ்வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியைவிட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மையுடையது.

நாம் எறும்பு புற்றைப் பார்த்திருப்போம். இந்த எறும்புப் புற்றானது இரு வகைப்படும். அவற்றில் ஒன்று தரைக்கு மேலாக மலைகள் போன்று வளர்வதாகும். மற்றொன்று தரைக்கு கீழே பல மடங்கு ஆழத்தில் மணலை அரித்து, அரித்து உள்ளே போவதைப் போலவும், அதே மணலை எடுத்து மேலேயும் புற்றை உருவாக்கும். தரைக்கு கீழே உள்ள எறும்புப் புற்றானது உள்பக்கத்தில் பல மடங்கு பெரியதாக இருந்தாலும் வெளியில் வருவது மட்டுமே தெரியும். இதுபோலவே புற்று நோயின் வளர்ச்சியும் இருக்கிறது.

நமது நாட்டில் உயிர் கொல்லும் நோய்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது புற்றுநோய். உலக அளவில் இந்தியாவில் தான் வாய்ப் புற்றுநோய் மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் பெரும்பாலும் கட்டுப்படுத்தக் கூடியதுடன் குணமாகக் கூடியதுமாகும்.

செப். 22 - உலக ரோஸ்  தினம் கடைப்பிடிப்பது  ஏன்?

கனடா நாட்டைச் சேர்ந்த மெலிண்டா ரோஸ் என்ற சிறுமிக்கு ரத்தப் புற்று நோய் ஏற்பட்டு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நோய் உடலில் பரவி விட்டதாகவும், இரு வாரங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்றும் தெரிவித்தனர். ஆனால், அவரோ அடுத்துப் பல ஆண்டுகள் வரை வாழ்ந்தாராம். இதன் காரணத்தை ஆய்வு செய்தபோது அவர் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருந்தது தெரிய வந்துள்ளது. அது  மட்டுமில்லாமல் தன்னைப் போல பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள் பலருக்கும் மனவலிமையின் மகத்துவத்தைக் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக பகிர்ந்துகொண்டார். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய யுத்தத்தில் வெல்ல முடியும் என்று மற்றவர்களுக்கும் உணர்த்தினார். மெலிண்டா ரோஸ் என்ற ஒளியானது மறைந்தாலும் அவரது மனிதநேயமிக்க செயல்கள் பலருக்கும் தன்னம்பிக்கை தரக்கூடியதாக இருந்ததால் அவர் மறைந்த தினமான செப். 22 ஆம் தேதியே உலக ரோஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் உயிர் அணுக்களில் (செல்களில்) புற்று நோயின் தாக்கங்கள்

1. உடல் உறுப்புக்களில் உயிரணுக்களின் மீது அபரிமிதமான வளர்ச்சியடையும்.

2. உடலில் உள்ள  மற்ற உறுப்புகள் மீது வேகமாக பரவும் குணமுடையது. அதாவது உடலில் நுரையீரல், கல்லீரல் உள்பட மற்ற பாகங்களுக்குப் பரவி அவற்றையும் செயலிழக்கச் செய்வது.

3. உடலானது தனது சுயக் கட்டுப்பாட்டை இழந்து விடும் அளவுக்கு வளர்ந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது ஆகியன. புற்றுநோய்களில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை ஆகியனவற்றில் புற்றுநோயின்  தாக்கம்  அதிகமாக  உள்ளது. ஆனால், இந்திய அளவில் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியனவற்றின் தாக்கமே 75 சதவிகிதம் இருக்கிறது. இந்த மூன்றையும் கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது பல்வேறு தீவிர முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

ADVERTISEMENT

புற்றுநோயைப் பொருத்தவரை நோய் வந்தவுடன் உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை  செய்ய வேண்டும், இரண்டாவதாக முறையான சிகிச்சை தரும் மையங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், அடுத்ததாக செய்யக் கூடிய சிகிச்சை தொடர் சிகிச்சையாக இருப்பதும் அவசியமாகும். இந்த மூன்றையும் முறையாகச் செய்துகொண்டால் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோய் எதனால் வருகிறது?

புற்றுநோயானது பழக்க வழக்கங்களாலும், மரபியல் சார்ந்தும் வருகிறது. புகை பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமல் எடை அதிகமாக இருத்தல் இந்த 3 காரணங்களால்தான் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் வருகிறது. 30 வயதுக்கு மேல் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது, குழந்தை தாமதமாக பிறப்பது, உடல் எடை அதிகமாக இருப்பது இவையனைத்தும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் வரக்கூடிய புற்றுநோயின் காரணிகளாகும்.

வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளும் காரணங்களும்

இந்தியாவில் வாய்ப்புற்று நோயின் தாக்கமே மிகவும் அதிகமாக இருக்கிறது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவற்றை நீண்ட நேரம் வாயிலேயே அடக்கி வைத்திருப்பது, உடைந்த கூரான பற்களினால் உண்டாகும் புண்களாலும், மதுபானங்களை அதிகமாக அருந்துவதாலும் வருகிறது. நாக்கிலோ அல்லது வாயிலோ ஏதாவது ஒரு பாகத்தில் ஒரு புண் மூன்று வாரங்களுக்குப் பிறகும் ஆறாமல் பெரிதாகிக் கொண்டே இருப்பது, வாயில் தடிப்பான அல்லது வெள்ளை நிறப்படை போன்ற பாகம் உருவாவது, உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு விரைவில் ஆறாமலேயே இருந்து வருவது, வலியற்ற ஒரு கட்டி நாக்கிலோ அல்லது வாயில் ஏதேனும் ஒரு பகுதியிலோ பெரிதாகிக்கொண்டே இருப்பது ஆகியன வாய்ப் புற்று நோய் வருவதற்கான காரணங்களாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இருந்தாலும் அவையனைத்தும் புற்றுநோயாக இருக்கும் என்றும் கூறிவிட முடியாது. ஆனால் மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகே அது புற்றுநோயா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கருப்பை வாய்ப்புறப் புற்றுநோய்க்கான காரணங்கள்

குழந்தைத் திருமணங்கள், இளம் வயதில் குழந்தை பிறப்புகள், ஹெச்.பி.வி. என்ற வைரஸானது உடலுக்குள் வந்து தங்கி கருப்பை வாயில் வந்து புற்றுநோயாக மாறுதல், ஒருவர் பல பெண்களிடம் உறவு வைத்திருத்தல் போன்றவை காரணங்களாக இருக்கின்றன. கருப்பையில் புற்றுநோய்  என்பது வாய்ப்புறத்தில் ஏற்படும் ஒருவித வளர்ச்சி அல்லது ரணமாகும். இந்தியாவில் பெண்களிடம் காணப்படும் புற்றுநோய் வகைகளில் கருப்பைப் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது. இது மிக வேகமாகப் பரவி பக்கத்தில் உள்ள திசுக்களையும் அழிக்கிறது. இந்நோயை முற்றவிடாமல் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் கட்டுப்படுத்தி விடுவது மிகவும் நன்மையாகும்.

புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக அளிக்கப்படும் 3 வகையான சிகிச்சை முறைகள்

ஒன்று அறுவைச் சிகிச்சை, இரண்டாவதாக கதிர்வீச்சு மூலம் சிகிச்சையளிப்பது, மூன்றாவது கீமோதெரபி எனப்படும் சிகிச்சை முறையாகும். நோயாளிக்கு நோய் இருக்கும் தன்மையைப் பொருத்து ஏதேனும் ஒரு சிகிச்சை முறையோ அல்லது மூன்று விதமான  சிகிச்சை முறையும் தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சை என்பது புற்றுநோயை கொல்லக்கூடிய உயர்தரமான மருந்துகள், மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்துவதாகும். இந்த மாத்திரைகள் நவீனமானதும், விலை உயர்ந்ததுமாகவும் தரமானதாகவும் இருக்கின்றன.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான சுகாதார முறைகள்

சாதாரண பல்லோ அல்லது செயற்கைப் பல்லோ வாயில் புண்களை உண்டாக்கினால் உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றுவிட வேண்டும், உதடுகள், வாயின் உட்புறம், தொண்டை ஆகிய பாகங்களில் ஒரு கட்டி அல்லது வெள்ளைப்படை போன்ற பாகம் இருந்தாலோ அல்லது ஆறாத புண் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து இருந்தாலோ உடனே மருத்துவப் பரிசோதனை   மிகவும் அவசியமாகும்.

பீடி, சிகரெட் குடிப்பதையும், புகையிலையை வாயில் நீண்ட நேரம் அடக்கி வைக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும். அதிக காரமான உணவை உட்கொள்வதையும், லவங்கப் பொருள்களை உணவுடன் அதிகமாக சேர்த்து சாப்பிடும் பழக்கமும் இருக்கக் கூடாது. மதுபானங்களை அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும். முக்கியமாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பீடா ஆகியனவற்றை வாயில் நீண்ட நேரம் ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை முற்றிலுமாக விடுவதும் நல்லது. வெறும் பாக்கை மட்டும் வாயில் போட்டுக் கொள்வதும் தவறானதாகும்.

புற்றும் ஒரு நோயே, நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவதும் முன்னெச்சரிக்கையாக இருப்பதும் வருவதைத் தவிர்ப்பதும் வந்தால் எதிர்கொள்வதுமே தக்க அணுகுமுறை.

Tags : roseday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT