சிறப்புக் கட்டுரைகள்

சுமந்து வளர்க்கும் முதியோர் சுமக்கப்பட வேண்டாமா?

1st Oct 2020 10:27 AM | நசிகேதன்

ADVERTISEMENT

ஒரு நல்ல நோக்கத்திற்காகவும், எதிர்பார்ப்புடனும் நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் முதியோர் நாள், ஒரு அரசு விழாவாகவோ, தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒரு சடங்கு நிகழ்வாகவோ அரங்கேறி வருவது முதியோர் மீது அதீத மரியாதை வைத்துள்ள அனைவருக்கும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி வருகிறது.

முதியோர் தின விழாக்கள் எதுவும் தனியாக நடத்தப்படாமல் முதியோர் இல்லங்களில் மட்டுமே நடத்தப்பட்டுவருவது அதனைவிட கொடுமை. கடந்த 30 ஆண்டுகளில் வீதிக்கு வீதி தெருவுக்குத் தெரு சொந்தமாகவோ, வாடகைக் கட்டடங்களிலோ அதிகரித்துள்ள முதியோர் இல்லங்கள் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறி இந்த நாளுக்கான அர்த்தத்தை இழந்து நிற்கிறது.

குடும்பத்தின் நலனுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்து முடியாமல் இருப்பவர்கள், முதியோர்கள் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படத்தான் வேண்டுமா என்பதை அனைவருக்குமான பொதுக் கேள்வியாகப் பலரும் எழுப்புவதை உணர முடிகிறது.

ஆனால் பணம், செல்வம், சொத்து, அருகிலுள்ள வீட்டினர் பெருமைப்படவும் தங்களது அப்பாவை, தாத்தாவை அருகில் வைத்துச் சீராட்டாமல் இல்லங்களுக்கு அனுப்பி வைத்து கிரெடிட் கார்டில் பணம் செலுத்துவது மிகவும் பெருமையளிக்கக் கூடியதாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

இதில் ஒன்றுமில்லாத கடைக்கோடிக் கூலிகள் வீடுகள் பரவாயில்லை. அவர்கள் வீடுகளில் முதியோர் படுக்கைகள் இருக்கிறது. புதிய பணக்காரர்கள், திடீர் பணக்காரர்கள் வீடுகளில் முதியோர் படுக்கை என்பதும் முதியோர் இருக்கை என்பதும் கேவலமானதாக உணரப்படுகிறது. தவிரவும் அவர்களால் முதியோர்களை வைத்துப் பராமரிக்க முடிவதில்லையென்பதுதான் உண்மையும்கூட.

வளர்ச்சி என்கிற அசுரத்திற்கு நாம் கொடுத்த விலையாகவே முதியோர் புறக்கணிப்பின் தொடக்கம் அமைந்தது. இந்தத் தொடக்கம் புள்ளியாகத் தொடங்கி தற்போது வெள்ளப்பெருக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதன் ஒட்டுமொத்த ஆனந்தத்தையும் முழ்கடித்துள்ளது.

முந்தைய தலைமுறையில் தமிழகத்தின் வீடுகளில் கூட்டுக் குடும்ப கலாசாரம் பெருமையளிக்கக் கூடியதாக, மகிழ்ச்சியின், தியாகத்தின், அன்பின், நிம்மதியின் குடியிருப்பாக இருந்து வந்தது.

ஆனால், காலத்தின் கட்டாயத்தில் தற்போது முதியோர்களின்றி கூட்டுக்குடும்ப வீடுகள் காலியாகக் கிடக்கின்றன. கூட்டுக் குடும்ப முறை உயிருடன் இருந்தவரை வீடுகளில் நடந்த தவறுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. மூத்தோர் வாழ்ந்த வீடுகளில் இளம்பெண்கள் வழிமாறிப் போவது இல்லாத நிலையிருந்தது. குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் முதியோரின் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன.

முதியோர் இருந்த வீடுகள் நம்பிக்கை கொண்ட வீடாக இருந்தது. பயங்களைக் குறைத்துக்கொண்ட அனுபவங்கள் நிறைந்த வீடாக நிறைந்திருந்தது கூட்டுக் குடும்ப வீடுகள்.

முதியோர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தபோது நாடு முழுவதுமே தவறுகள் குறைந்த சமூகமாகவும் இருந்தது. முதியோர் இல்லங்கள் அதிகரிக்கத் தொடங்கியதற்குப் பிறகு தவறுகள் சர்வசாதாரணமாக அதிகரித்துள்ளன.

வீடுகளில் முதியோர் இல்லாததே சமூகப் பழக்க வழங்கங்களின் அழிவிற்கு ஆரம்பமாக காரணமாக அமைந்தது. குடும்பத்தின் வளர்ச்சிக்கு, குடும்பத்தின் வசதிக்கு முதியோர்கள் இருக்கக் கூடாது என்கிற பண அடையாளத்தின் கட்டுப்பாட்டில் வீழ்ந்தது குடும்பத்துப் பாரம்பரியம்.

திரைப்படங்களில் காட்டப்பட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கை, முதியோர் இருப்பு என்பது பழைய திரைப்படக் கனவுக் காட்சிகளாகப் பத்திரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தவறிக்கூட கூட்டுக் குடும்ப வாழ்க்கையை திரைப்படங்களாக எடுக்க  யாரும் முன்வருவதில்லை. அது மாபெரும் தவறாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அலறும், அலையும் முதியோர்களின் மூச்சுக்குரல்கள் முதியோர் இல்லங்களில் யாராவது வந்து கைப்பிடித்துக் கூட்டிப் போவார்கள் என்று காத்துக் கிடக்கிறது. முதியோரின் ஒட்டுமொத்த புறக்கணிப்பு என்பது குடும்பத்தின் தியாகத்தை புறக்கணிப்பது, குடும்பத்தின் நிம்மதியை முதியோர் பெயரில் இழந்து நிற்பது என்றாகியுள்ளது.

உழைத்து குடும்பத்தை நிலைநிறுத்தியவர்களின் சேவையைப் புறக்கணிப்பதுதான் ஒட்டுமொத்த பாவத்தின் உச்சம் என்பதை உணராத சமூகத்தில் எதுவுமே பாவமாக பதிவு செய்யப்படவில்லை.

அரசு வேலைகளிலோ, தனியார் நிறுவனங்களிலோ பணியாற்றி  கணவன், மனைவியாக குடும்பத்தின் நலனுக்கான சுமைப்பாடுகளை சந்தோசத்துடன் சுமந்து இரண்டு சக்கர வாகனத்தில் தொடங்கி பின்னர் கார்களில் அலுவலகத்தில் இறங்கி, சுமைப்பாடுகளை சுகங்களாக்கிக் கொண்டு மகன்களையோ, மகள்களையோ நல்ல நிலைக்கு கொண்டு வந்து நிம்மதி அடைவதற்குள் அவர்களுக்குத் தனிமை என்கிற அடுத்த சுமைப்பாடு தயாராகத்தான் காத்துக்கிடக்கிறது.

தங்களுக்காக வாழ்ந்து தீர்த்தவர்களைத் தங்களுடன் வைத்து தாலாட்டவும், சீராட்டவும் தயாராக உள்ளவர்கள் ஏனோ தொலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் நம்மைத் தொலைக்கிறோம் என்று தெரியாமல் புரியாமல் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.

என்ன நிர்பந்தத்திற்கோ கட்டுப்பட்டு அனைவரும் வரிசைகட்டி முதியோர் இல்லங்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கின்றனர். கூட்டுக்குடும்ப நிலை இன்னும் சில பகுதிகளில் மட்டுமே விடாப்பிடியாக கடைப்பிடித்து வரப்படுவதால் அந்த வீட்டு முதியவர்கள் நிம்மதியுடன் இருக்க முடிகிறது.

குழந்தைகளைப் பள்ளிக்கும் அவர்களுக்குக் கதை சொல்லவும், வீட்டுச் சில்லறைத் தேவைகளை பூர்த்தி செய்தும் வர முடிகிறது. அவர்களது முழுக் கண்காணிப்பில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர், வீடுகளுக்குத் திரும்புகின்றனர். பாடங்களைப் படிக்கின்றனர். தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர். தாத்தா பாட்டியுடன் தூங்குகின்றனர். அதுபோன்ற குடும்பங்கள் தவறுகளைத் தொலைத்த குடும்பமாக நிம்மதியுடன் வாழ்ந்து வரும் உதாரணக் குடும்பங்களாக இருக்கிறது.

குறைந்த வாடகையில் முதியோர் இல்லங்கள், இலவச முதியோர் இல்லங்கள் எப்போது தொடங்கப்பட்டதோ அப்போதே எழுதப்பட்டு விட்டது முதியோர் மரணக் கணக்கு.

தங்களது குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் வேலையாட்களை வைத்து கவனித்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர ஓவர்டைம் செய்து தனது மகனின், மகளின் வெளிநாட்டு படிப்பு வெளிநாட்டு வேலையை புல்லரித்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பெருமையுடன் பேசி நாட்களைக் கழித்த அவர்கள் விதியேயென தற்போது தனிமையுடன் கைவிரல்களை ஆட்டி ஆட்டி காற்றுடன் பேசி வருவதை காண முடிகிறது.

தங்களைத் தனிமையாக விட்டுச் சென்ற பெற்றோரைப் பழி வாங்கவோ அல்லது தங்களால் கவனிக்க முடியாது என்பதை உணர்த்தவோ தற்போது அவர்கள் முதியோர் இல்லங்களில் தனிமைப்படுத்திச் செல்வதைக் காண முடிகிறது.

காலத்தின் கசப்பான தீர்ப்பு என்பதைத் தவிர இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் வேறில்லை. ஓயாமல் ஓடிஓடி சம்பாதித்து செலவு செய்தவர்கள் தங்களது மூச்சைவிட முடியவில்லையே என்று யோசித்தபடி கனவில் வந்து மகனோ, மகளோ, பேரன் பேத்திகளோ கரம்பிடித்து அழைத்துப் போவதாக  எண்ணிப் பேராசையுடன் வாழ்கின்றனர்.

தங்கள் நண்பர்களை, தங்களது மனைவிகளை, தங்களது குழந்தைகளை, தங்களது முன்னோர்களை இழந்துத் தவிக்கும் முதியவர்கள் புதியவர்களைக் கண்டால் அடையாளம் தெரியாமல் பூரித்து அன்பு செலுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா….

முதியோர் இல்லங்களில் பூட்டப்படாத கதவுகள் அமைந்துள்ள அறைகளில் திடுமென நுழைந்து தங்களுக்கு ஏதாவது தரமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் முதியோரை உங்களுக்குத் தெரியுமா…

வாழுங்காலத்தில் தங்களைத் தொலைத்தவர்கள் இறக்கும் காலத்தில் தங்களது குடும்பத்தைத் தொலைத்தவர்களாக உடனிருப்போரிடம் பழைய கதைகளைப் பேசித் தீர்க்கிறார்கள். அவர்களது கதைகள் உலகம் கவலைகளைப் பேசிக் கொள்ளும் உலகமாகவும், மகிழ்ச்சிகளே இல்லாத தங்களைத் தவிக்க விட்டுப் போன கண்ணீர் கதைகளைக் காது கொடுத்து கேட்கும் நேரமாகவே அமைந்திருக்கிறது. அவர்களது காதுகளும் கதவுகளும் திறந்தபடி காத்திருக்கிறது ஏதாவது அதிசயம் நிகழாதா என்று எதிர்பார்த்து...

பெரிய மருத்துவரொருவர், பார்த்துப் பார்த்துக் காட்டைப் போல அமைந்த வீட்டைக் கட்டி அதில் பெருமையுடன் வாழ்ந்து வந்தவர்,  தான் பெற்ற மருத்துவர் மகன் வெளிநாட்டில் பணியாற்றச் சென்றவர் விடியோ அழைப்பில் கூட பேசாமல் பரபரப்பு ஆனதால் தனது மனைவியுடன் வீட்டை விற்று விட்டு முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதுபோன்ற பிரபலங்களின் கதைகள் தனிமைப்படுத்தலின் பெருங்கதைகளாகவே அமைந்துள்ளன.

தனது மகள்கள், தனது மகன்கள் படித்து வெளிநாட்டுக்குச் சென்று தங்களையும் தங்களுடன் கூட்டிச் சென்று பராமரிப்பார்கள் என்று எதிர்பார்த்தது அவர்களுக்கு தாங்கள் சுமையாகிப் போனதுதான் உண்மையென்று தாமதமாகத்தான் புரிந்துகொள்கிறார்கள். இப்படித்தான் முன்னேறியவர்களும், முன்னேற்றியவர்களும் முதியோர் இல்லங்களை தங்களது முகவரியாக்கிக் கொண்டது.

முதியோர் இல்லங்கள் என்பது நிரந்தரமில்லை. முதியோர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், அவர்களை நிம்மதியான மரணத்திற்கு வழிவகுப்பதும் உடனிருந்து வாழ்பவர்களால்தான் என்பதை இந்த உலகம் எப்போது உணரப் போகிறது என்பது புரியவில்லை.

வசதியும், வாழ்க்கையும் மட்டுமே ஒருவருக்கு எல்லாவற்றையும் தந்து விடும் என்பதும், அதுதான் அவர்களுக்கு மரியாதையை வழங்கும் என்பதும் பொய்யாய் பழங்கதையாகப் போனதுவே என்பதை எப்போது உணரப் போகிறார்கள். முதியோர்களை மதிக்காத வீடுகள் மயானங்கள்தான்… முதியோர்களுக்கு இடம் ஒதுக்காத இல்லங்கள் சுடுகாடுகள்தான்…..முதியோர்களைப் பராமரிக்காத குடும்பத்தினர் சாத்தான்கள்தான் என்பதை விவிலியம் மட்டுமல்ல உலக சரித்திரங்களும் சான்றாக்கியுள்ளது.

இன்று நான், நாளை நீ...

Tags : eldersday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT