சிறப்புக் கட்டுரைகள்

பராமரிப்பின்றிப் பாழாகிறது ஊருக்கே தண்ணீர் தந்த 100 ஆண்டு கிணறு

22nd Mar 2020 06:00 AM | கே. விஜயபாஸ்கர்

ADVERTISEMENT

ஈரோடு அருகே ஊருக்கே தண்ணீர் தந்த கிணறு பராமரிப்பின்றிப் பாழாகிப் பாசி படர்ந்து பாழாகிக் கிடக்கிறது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகே காவல் நிலையத்தை ஒட்டி இருக்கிறது நந்தவனக் கிணறு. 100 ஆண்டுகள் பழமையான இந்தக் கிணறு கடந்த 2016 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்படாமலும், தூர்வாரப்படாமலும் இருந்தது. இதையடுத்து சிவகிரியைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளையும், சுதந்திர சிறகுகள் என்ற தன்னார்வ அமைப்பினரும் பொதுமக்கள் பங்களிப்பாக தந்த ரூ. 1.70 லட்சத்தை வைத்து கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த கிணற்றில் நீர் வரத் துவங்கி தற்போது வரை வற்றாமல் உள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கிணறு தூர்வாரும் பணியின்போது அங்கு வந்த மொடக்குறிச்சி எம்எல்ஏ வி.பி. சிவசுப்பிரமணி கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைத்து கிணற்று நீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு தனது நிதியில் இருந்து ரூ.2 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இந்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிதியும் இன்று வரை வந்துசேரவில்லை.

ADVERTISEMENT

 இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது, நாங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையை வைத்து பணி செய்து முடித்தபோது அங்கு வந்த எம்எல்ஏ எங்களது பணியை தொடர்ந்து செய்ய ரூ.2 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் வந்து சென்ற பின் ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் சிலர் எங்களிடம் வந்து நலப் பணியை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

அவர்களின் கோரிக்கைக்கு நாங்கள் உடன்படாமல் நீங்கள் தரும் நிதியைக்கொண்டு நாங்களை பணிகளை மேற்கொள்கிறோம் என கூறினோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. அதனால், நாங்கள் மிகவும் சிரமப்பட்டுச் செய்த பணியால் வந்த பலன் பொதுமக்களை சென்றடையாமல் உள்ளது. மேலும், எங்களது நலப்பணி தொடர்ந்து நடப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டை போடப்பட்டதால் நாங்கள் அமைதியாகிவிட்டோம் என்றனர்.

இதுகுறித்து சிவகிரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது எம்எல்ஏ நிதி ஒதுக்கி தந்தால் அந்த கிணற்றில் இருந்து நீரை எடுத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தருவோம். தற்போது எங்களிடம் நிதியில்லை. இதுகுறித்து அரசின் கவனத்து கொண்டு செல்கிறோம் என்றனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த சண்முகம் கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவகிரி பேரூராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு  இந்த கிணறுதான் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இந்தக் கிணற்றை சிவகிரி பேரூராட்சி நிர்வாகம் தூர்வாரி பயன்படுத்திக்கொண்டால் கிணறு அமைந்துள்ள பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவு குறையும். மேலும் அருகில் உள்ள பேரூராட்சி சுகாதார வளாகத்துக்கு இங்கிருந்து தண்ணீர் கொடுக்க முடியும். தவிர குடியிருப்புகளுக்கு இப்போது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே காவிரி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த கிணற்றைத் தூர் வாரினால் காவல் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு குடிநீர் தேவை தவிர்த்து பிற தேவைகளுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்போது வெய்யில் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் கிணறு முழுமையாக நிரம்பி இருக்கிறது.   இந்தத் தண்ணீர் பாசி படந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த கிணற்றைத் தூர்வாரி பராமரிப்பதன் மூலம் மக்களுக்குத் தண்ணீரும் கிடைக்கும். 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிணறும் பாதுகாக்கப்படும்.  

இது தவிர சிவகிரி பேரூராட்சியில் கடந்த 1970 இல் 10 குளங்கள் இருந்தன. தற்போது, அவை எங்கே? என்று தெரியவில்லை. இந்த குளங்கள் குறித்து வருவாய்த் துறையின் ஆவணப்பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஈரோடு வட்டமாக இருந்தபோது சிவகிரியில் நான்கு குளங்கள் இருந்ததற்கான சான்று வருவாய்த் துறை ஆவணப் பதிவேடுகளில் இருந்தது. காணாமல் போன குளங்கள் குறித்து முறையான விசாரணை நடந்தால் பல்வேறு  உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்து காணாமல்போன குளங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் சிவகிரி பகுதியில் எப்போதுமே தண்ணீர் தட்டுப்பாடு வராது என்றார்.  

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT