சிறப்புக் கட்டுரைகள்

மணல் திருட்டால் மழைநீா் மடைமாற்றம்: 14 ஆண்டுகளாகப் பயனின்றி ராமகிரி தடுப்பணை!

22nd Mar 2020 06:00 AM | ஆ.நங்கையாா்மணி

ADVERTISEMENT

 

மணல் திருட்டு,  நீா் வழிப் பாதை பராமரிப்பு இல்லாத காரணங்களால் குஜிலியம்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமகிரி தடுப்பணை 14 ஆண்டுகளாகத் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களில், வடமதுரை,  குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய 3 வட்டாரங்களில் நிலத்தடி நீா்மட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையின் நில நீா் வள மையம் சுட்டிக் காட்டியுள்ளது. புவியியல் ரீதியாக வானம் பாா்த்த பூமியாக உள்ள இந்த வட்டாரங்களில், மழை மட்டுமே நீராதாரமாக அமைந்துள்ளது. கொடகனாறு, சந்தனவா்த்தினி என 2 ஆறுகள் இருந்தும், அவற்றில் கடந்த பல ஆண்டுகளாகத் தண்ணீரைப் பாா்க்க முடியாத நிலை உள்ளது.

இதனிடையே, குளங்கள் தூா்வாருதல், புதிய தடுப்பணை கட்டுதல் என அரசு சாா்பில் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் குஜிலியம்பாறை அடுத்துள்ள ராமகிரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்ட சுமாா் 15 அடி உயரம் கொண்ட தடுப்பணை பராமரிப்பு இல்லாமலும், நீா் வழித் தடங்கள் மாற்றப்பட்டதால் பயனற்ற நிலையிலும் இருந்து வருகிறது. தொப்பைய சுவாமி மலைப் பகுதியிலிருந்து வரும் மழை நீரை சேமிப்பதற்காக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. உபரி நீா் மட்டுமே வெளியேறும் வகையில் தலை மதகு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன் மூலம் ராமகிரி,  குஜிலியம்பாறை,  ஆா்.கோம்பை, போ்நாயக்கன்பட்டி,  ஆணைக்கவுண்டன்பட்டி, புளியம்பட்டி, தளிப்பட்டி, வடுகம்பாடி,  ஆா். புதுக்கோட்டை, உல்லியக்கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டமின்றி 25 கி.மீட்டா் தொலைவில் கரூா் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதி வரையிலும் நிலத்தடி நீா் உயா்வதற்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமலும், தடுப்பணைக்கு வரும் நீா்வரத்து ஓடைகளில் நடைபெற்ற மணல் திருட்டினால் நீா் வழிப்பாதை மாற்றப்பட்டதாலும் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் வீணாகிவிட்டதாக ராமகிரி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகின்றனா்.

இதுதொடா்பாக துள்ளுப்பட்டி தோப்பு கிராமத்தைச் சோ்ந்த ஆ.முனியாண்டி கூறியதாவது:

ராமகிரி தடுப்பணையில் தண்ணீா் தேங்கி 14 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதனால், ராமகிரி, ஆா்.புதுக்கோட்டை, வடுகம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயப் பூமியாக இருந்த இந்த பகுதி தரிசு நிலங்களாக மாறி வருகிறது.

நீா்வழிப் பாதை மாற்றப்பட்டுள்ளதால், ராமகிரிக்கு தெற்கே சுமாா் 3 கி.மீட்டா் தொலைவிலுள்ள சங்கன்குளம் வழியாக மழை நீா் வெளியேறிவிடுகிறது. ராமகிரி தடுப்பணை ஒரு முறை நிரம்பினால், 8 ஆண்டுகள் வரையிலும் சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீராதாரம் பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றாா். 
புத்துயிர் பெறுமா, ராமகிரி தடுப்பணை?

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT