சிறப்புக் கட்டுரைகள்

'குட்டை'யாகிறது சமுத்திரமாக இருந்த ஏரி

22nd Mar 2020 06:00 AM | வி.என்.ராகவன்

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் பரந்து விரிந்து சமுத்திரம் போல காணப்பட்ட ஏரி இப்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக கிட்டத்தட்ட குட்டை போல மாறிக் கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர்- நாகை சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது.  பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டது. அவர்களுடைய காலத்தில்தான் இதற்கு சமுத்திரம் ஏரி என்ற பெயர் வந்தது.

"இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போது, இந்த ஏரி தஞ்சாவூர் நகரிலிருந்து தொடங்கி மாரியம்மன் கோயில் வரை பரந்து விரிந்து இருந்தது தெரிகிறது. மராட்டியர் காலத்தில் இது முக்கியமான ஏரியாக இருந்துள்ளது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதில், கடல் போல தண்ணீர் இருந்ததால், இதை சமுத்திரம் ஏரி என அழைக்கப்பட்டது"  என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

ADVERTISEMENT

தஞ்சாவூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஏரியின் மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 800 ஏக்கர். இதன் மூலம் புன்னைநல்லூர், கலக்குடி, கடகடப்பை, கரம்பை, கொடிக்காலூர்,  அருள்மொழிப்பேட்டை, புளியந்தோப்பு உள்பட பல கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. மேலும், தஞ்சாவூர் நகரின் வடிகாலாகவும் இந்த ஏரி இருந்தது.
காலப்போக்கில் இந்த ஏரியின் தென் கரையில் தஞ்சாவூர் - நாகை சாலை அமைக்கப்பட்டது. என்றாலும், இந்த ஏரியில் கோடைக்காலம் உள்பட எப்போதும் தண்ணீர் நிறைந்திருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரி உயிர்ப்புடன் இருந்தது.

எனவே, தஞ்சாவூர் - நாகை சாலையில் பயணிக்கும்போது கடல் போல காணப்படும் இந்த ஏரியின் அழகையும் ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால், படிப்படியாக இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக,  தென் கரையில் நகர்கள் உருவாகியுள்ளன. முதன்மைச் சாலையை ஒட்டியுள்ள கரையில் வணிக வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புக்கு பட்டாவும், மின் இணைப்பும் கிடைத்துள்ளன.  

மேற்குப் பகுதியில் மாநகராட்சியின் புதை சாக்கடைத் திட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளதால், ஏரி என்ற அமைப்பே காணப்படவில்லை. இதன் நான்கு திசைகளிலும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதாலும் நீர்பிடிப்புப் பரப்புக் குறைந்து வருகிறது. 

இதனிடையே, 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது இந்த ஏரியின் குறுக்கேதான் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஏரியின் குறுக்கே சாலை செல்வதால், இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இதனால், கடல் போன்ற அழகையும் இந்த ஏரி இழந்துவிட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் - விக்கிரவாண்டி நெடுஞ்சாலைத் திட்டத்தில் தஞ்சாவூர் - கும்பகோணம் புறவழிச்சாலை இந்த ஏரியிலிருந்துதான் தொடங்குகிறது. இதற்காக கிட்டத்தட்ட 100 மீட்டர் அகலத்துக்கு இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியில் இதுவரை 30 சதவீதத்துக்கும் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஏரி குட்டை போல சுருங்கி வருகிறது. 

ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் இந்த ஏரியைச் சீரமைத்து படகு சவாரி விடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இந்த ஏரிக்கரையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடைபாதை அமைப்பதுடன், சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் படகு சவாரி, சிறுவர் பூங்கா போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இன்னும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், ஆக்கிரமிப்பு மட்டும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

விரைந்து முயற்சி எடுக்காவிட்டால் சமுத்திர ஏரி இருந்த இடமெல்லாம் அடையாளம் தெரியாமல் போய் சில சிறு சிறு குட்டைகள் மட்டுமே மிச்சமாக இருக்கும்!

Tags : worldwaterday
ADVERTISEMENT
ADVERTISEMENT