சிறப்புக் கட்டுரைகள்

சமூக வலைத்தளங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பா, ஆபத்தா?

8th Mar 2020 06:00 AM | ஆர்.வேல்முருகன்

ADVERTISEMENT

 

இது இணையதள யுகம். இங்கே தொழில்நுட்பம் அறிந்து கையாளத் தெரிந்தவன் புத்திசாலி. நமக்கு சுத்தமாகப் புதிய தொழில் நுட்பம் தெரியாவிட்டால் எவ்விதப் பிரச்னையுமில்லை. ஆனால் சிறிதளவு தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொண்டு சிலந்தி வலையில் சிக்குவதைப் போல சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அந்த வகையில் ஆண்களை விடப் பெண்கள் இணைய தள யுகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொள்ளாச்சி, சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுமி உள்ளிட்ட பெண்களே. 

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் ஆண்களை மிகவும் நல்லவர்கள் என்று நம்பிய அப்பாவிப் பெண்கள் பலரும் தங்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல் பணத்தையும் தொலைத்துவிட்டு இன்று எதையோ பறிகொடுத்தது போலத் தவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இதில் பாதிக்கப்பட்ட பலரும் அப்பாவிப் பெண்கள் மட்டுமில்லாமல் சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாகக் கூறப்படுபவர்களுமே. முன்பெல்லாம் தகவல் தொழில் நுட்பம் இவ்வளவு வளர்ச்சி பெறாத காலத்தில் ஒரு பெண்ணை தந்தையாக இருந்தால் கூட சாலையில் பெயர் சொல்வதற்குக் கூடத் தயங்கினார்கள். ஆனால் இன்று அப்படியில்லை.

அதேபோலத் தொழில் நுட்பத்தின் உதவியால் பெண்ணைப் புகைப்படம் எடுப்பது மட்டுமில்லாமல் அவர்களை அசிங்கமாகக் கூட இணையதளத்தில் பதிவிடவும் முடியும். இதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை எளிதில் சிதையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

என்னதான் இந்தியா தகவல் தொழில் நுட்பத்தின் உச்சியில் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் ஆணாதிக்க மனோபாவம்தான் அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் தவறு செய்வதாகச் செய்திகள் வெளியில் வந்தாலும் ஆணாதிக்க மனோபாவமே அதிகம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கடந்த 1993-94இல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கன்னட நடிகர் ராஜ்குமாரை அவருடைய பண்ணை இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்லும் முன் அவருடைய மனைவி பர்வதம்மா பதில் கூறினார். தவறு செய்தால் அரபு நாடுகளில் உள்ளது போலக் கடுமையான தண்டனை தர வேண்டும். திருடினால் சவுக்கடி, பாலியல் வன்கொடுமை செய்தால் மரணம் என்று தண்டனை கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். அப்போதுதான் அனைவருக்கும் பயம் இருக்கும். அந்த மாதிரி சட்டம் வந்தால் முதன் முதலில் அரசியலில் நாங்கள்தான் நுழைவோம் என்றார்.

இப்போது நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்து கொண்டேயிருப்பதால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

பொதுவாக இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் சமூக வலைதளங்களில் பல்வேறு ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகின்றன.  போதாக்குறைக்கு நாடகக் காதல் கதைகள் வேறு. இன்றைய சூழ்நிலையில் தங்கள் மகன் குறிப்பாக மகள்களுடன் பெற்றோர்கள் அதிகம் நேரத்தைச் செலவிட்டாக வேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னை என்றாலும் குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவிப்பார்கள். 

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் கூடிய அன்பைக் காட்டுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும், கஷ்ட நஷ்டங்களையும் புரிய வையுங்கள். இதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் பாடமாகக் கிடையாது. இதெல்லாம் புரிந்து விட்டால் அவர்கள் சமூக வலைதளங்களை ஊறுகாய் போல மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள். அடிமையாக மாட்டார்கள்.

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT