சிறப்புக் கட்டுரைகள்

அனைவருக்குமானது மாநகரம்…!

15th Dec 2020 11:17 AM | எஸ். மணிவண்ணன்

ADVERTISEMENT

வீடு. அது வெறும் கல்லும் மண்ணும் அல்ல. ரத்தமும் சதையும் சேர்ந்த வாழ்வாதாரத்தின் முதன்மையான உணர்வு.

உழைத்துக் களைத்து ஒதுங்கி வாழக் குடிசை உள்ளது என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை தீவுத்திடல் அருகேவுள்ள காந்திநகர் மக்கள் தற்போது நம்பிக்கை அற்றுக் காணப்படுகின்றனர்.

சென்னையில் கடந்த இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வந்த அவர்கள் நகரமயமாக்கலின் காரணமாகத் தற்போது சென்னையை விட்டு வீசி எறியப்பட்டுள்ளதால் எதிர்காலமின்றித் திணறி வருகின்றனர்.

இன்று காந்தி நகர், நேற்றும் முன்னரும் இதுபோல எத்தனையோ கடைக்கோடி மக்களின் குடிசைப் பகுதிகள்!

ADVERTISEMENT

வீடு என்பது மனித குலத்தின் அடிப்படைத் தேவை. போராடுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. 

தனது அடிப்படைத் தேவைகளுக்காகக் கூவம் ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உரிமைகளையும் பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக அந்தப் பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனிடையேதான் டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினமும் கடந்துசென்றது.

சுதந்திர இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூவம் நதிக்கரையையொட்டியே சிலர் வசித்து வந்தனர். கூவம் மற்ற ஆறுகளைப் போன்று இருந்ததும் அதில் படகுப் போக்குவரத்து மூலம் வணிகம் நடைபெற்றதும் வரலாறு.

கூவம் நதிக்கரையையொட்டிய எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வசித்து வந்தனர். 

நகரமயமாக்கலின் நீட்சியில் பொருளாதார நாகரிகத்திற்கேற்பவும், மேல்தட்டு மக்களின் தேவைக்கேற்பவும் கூவம் கழிவுகளின் கூடாரமானதால், அவர்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டனர். 

எனினும் சைதாப்பேட்டை, சென்ட்ரல், பிராட்வே, துறைமுகம், கோயம்பேடு எனத் தங்களது பொருளாதாரவோட்டத்திற்கான இடங்கள் இங்கு இருப்பதால் அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டுதானிருந்தது.

ஆனால், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கூவம் நதியோரக்  கூரையின் கீழ் வசித்து வந்த மக்களை அவர்களது அன்றாட வாழ்வாதார இடத்திலிருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பால் குடியமர்த்துவது எந்த வகையிலான வளர்ச்சித் திட்டம்?

சென்னையின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல இவர்கள். ஆங்கிலேயேர் காலம் முதலே சென்னையைத் தங்களது உழைப்பினால் தொழில் நகரமாக உருவாக்கியவர்கள் இந்த மக்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

மாநகரான சென்னைச் சீரமைப்பின் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகள்.

2004-ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின்போது வீடுகளை இழந்த மீனவ மக்களுக்கு சுனாமி குடியிருப்பில் மாற்று இடம் வழங்கப்பட்டது.

2015-ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு அடையாறு, சைதாப்பேட்டை ஆற்றங்கரையோர மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றி கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் குடியமர்த்தினர்.

கடந்த ஆண்டு அண்ணா சாலையிலுள்ள அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதி மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு பெரும்பாக்கம் குடியிருப்பை நிரப்பும் பணி நடைபெற்றது.

அங்கு எஞ்சியுள்ள குடியிருப்புகளை நம்பி தற்போது தீவுத்திடல் பின்புறமுள்ள காந்தி நகர் மக்களின் வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்பட்டுள்ளன.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு சீரமைப்பு என்றால் அது அனைத்து அணுகுமுறைகளிலும் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். ஆனால் கூவம் நதிக்கரையையொட்டியுள்ள மிகப் பெரிய வணிக வளாகங்களும், கட்டடங்களும் அந்த பாரபட்சத்தையே வெளிப்படுத்துகின்றன.

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்காக அமைந்தகரை, சூளைமேடு குடிசைகள் அகற்றப்பட்டன. மெட்ரோவிற்காக அகற்றப்பட்ட குடிசைப் பகுதிகளும் ஏராளம். இவ்வாறு அரசின் எல்லா மேம்பாட்டுத் திட்டங்களிலும் விதிவிலக்காகி கம்பீரமாக நிற்கின்றன சில கட்டடங்களும் வணிக வளாகங்களும்.

சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் சம உரிமை கிடைக்கச் செய்வதே ஜனநாயகம் என்ற சட்டமேதையின் வார்த்தைகள் காகிதங்களை மட்டுமே அரிக்கின்றன.

குடிசை மாற்று வாரிய சட்டப்படி, தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் மக்களை அப்புறப்படுத்தினால், அவர்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்தப்படும் இடத்தின் மதிப்புக்கேற்ப இரு மடங்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்கிறது. 

ஆனால் நடைமுறையில் இந்த இரண்டையுமே அளிக்காத அரசு இயந்திரம், சென்னைப் பூர்வகுடிகளின் உழைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு புறநகருக்கு வெளியே அவர்களை சக்கையாக உமிழ்கிறது. 

சென்னையில் ஆற்று நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதாக வெளியேற்றப்படும் மக்கள் பெரும்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு குடியிருப்பில்தான் குடியமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவு ஒவ்வொரு பருவ மழைக்கும் விஷப்பூச்சிகளுக்கு மத்தியில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்க வேண்டியுள்ளது.

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் 2,200 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இங்கு மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்களோ, பள்ளிக் கூடங்களோ, நியாயவிலைக் கடைகளோ இன்னும் அமைக்கப்படவில்லை. குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதியே பள்ளிக்கூடமாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே தனிக்கட்டடங்களாக உள்ளன. மருத்துவ சிகிச்சைக்காகப் பெரும்பாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு வரவேண்டியுள்ளது. புயல், மழைக்காலத்தில் விளக்கு வெளிச்சம்கூட இல்லாமல் மக்கள் அவதியுற்றது அனைவரும் அறிந்ததே.

குடிசையாக இருந்தாலும் சென்னையில் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் இருந்தது. ஆனால், புறநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் வெறும் கட்டடங்களாக மட்டுமே வெறித்துக் காணப்படுகின்றன. அவற்றில் அன்றாடங்காய்ச்சிகளுக்கு நம்பிக்கையின்மை மட்டுமே நிரம்பியுள்ளது. 
வீடுகளைக் காலி செய்ய மறுத்துப் போராட்டத்தில் ஈடுபடும்போது  காவல் துறையினரின் அடி உதையில் இருந்தே அந்த நம்பிக்கையின்மை தொடங்கிவிடுகிறது. 

எதிர்காலம் குறித்துப் பயம் எழும் கணத்தில் கோணிச் சுவரின் ஓலைக்குடிசைக்கும் அடுக்குமாடி கட்டடத்திற்கும் வித்தியாசமற்ற நிலையே ஏற்படுகிறது.

தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு மாற்றுவதும், ஒரே இடத்தில் குடியமர்த்துவதும் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிவகுக்கும், குற்றச் செயல்களை அதிகரிக்கும் என்கிறது உச்ச நீதிமன்றம். 

ஆனால், அவை இங்கு பொருள்படுத்தப்படுவதில்லை. சீரமைப்பு என்ற பெயரில் ஏழைகளைப் புறநகருக்கு அப்புறப்படுத்தும் அரசு அங்கு அவர்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தர வேண்டும். 

இல்லையென்றால் சென்னைக்குள்ளாகவே மணலி, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில்  மறுகுடியமர்வைச் செய்து தர வேண்டும் என்பதே அனைத்தையும் இழந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை நகரம் அனைவருக்குமானதாய் மாறிவிட்டபோது, ஆரம்பம் முதலே தனோடு வாழ்ந்து வந்த மக்களைக் கைவிடுவது எந்தவகை நியாயம்.

Tags : chennai
ADVERTISEMENT
ADVERTISEMENT