நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆடம்பரத் திருமணம் வேண்டாம்!

வெ. இன்சுவை

 சமீபகாலமாக "திருமணம்' என்பது ஒருவரின் செல்வத்தையும், செல்வாக்கையும் ஊருக்கும், உறவுக்கும் உணர்த்தும் ஒரு நிகழ்வாகி வருகிறது. "இது போன்ற ஒரு கல்யாணத்தை யாரும் நடத்தியது இல்லை' என்று பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகப் பணத்தை வாரி இறைத்து தங்களின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றுகின்றனர்.
 பெண் பார்க்க வரும் நிகழ்வில் இருந்து திருமணம் வரை பணம் ஆறாய் ஓடுகிறது. செல்வந்தர்களிடம் பணம் இருக்கிறது, செய்யட்டும் என்ற சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நடுத்தர வர்க்கத்தினரும் கடன் வாங்கி ஆடம்பரமான திருமணம் நடத்துகிறார்கள்.
 "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்' என்பார்கள். இப்போது இரண்டுமே வெகு சுலபம். பணம் மட்டும் இருந்தால் போதும், சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் இரண்டையும் செய்து முடிக்கலாம். நாமும் விருந்தினர் போல் நம் இல்லத் திருமணத்தில் பங்கேற்கலாம்.
 ஆனாலும், அகலக் கால் வைத்து விட்டு சிலர் தடுமாறிப் போகிறார்கள். திருமணத்தில் ஆடம்பரம் காட்டினால் கூட பரவாயில்லை. ஒவ்வொரு சிறிய சடங்கு, சம்பிரதாயத்திற்கும் கூட்டம் சேர்க்கிறார்கள்; தடபுடலாய் விருந்து வைக்கிறார்கள்.
 
 திருமண அழைப்பிதழ் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். குஜராத்தைச் சேர்ந்தத் தொழிலதிபர் ஒருவர் தன் மகன் திருமணத்திற்கு ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ் ஒன்றை வடிவமைத்திருந்தார். அதன் எடை 4 கிலோ, 280 கிராம். அழைப்பிதழே இத்தனை ஆடம்பரம் என்றால் திருமணம் எப்படி இருந்திருக்கும்?
 பெரியவர்கள் உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக ஓர் அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள். மணமக்கள் தங்களின் நண்பர்களுக்காக இணையத்தில் தேடித் தேடி அழகான அழைப்பிதழை வடிவமைக்கிறார்கள். அழைப்பிதழுக்கே மண்டையை உடைத்துக் கொள்பவர்கள் திருமண மண்டபம், மேடை அலங்காரம், திருமண உடை, மாலைகள், மணமக்கள் ஒப்பனை, விருந்து என்று ஒவ்வொன்றிலும்ஆடம்பரம் இருக்க வேண்டும் என்று பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
 திருமணம் உறுதி செய்யும் நிகழ்வே ஒரு கல்யாணம் போல ஏக தடபுடலாக நடைபெறுகிறது. அதற்குப் பின் திருமண நாள் வரை வரிசையாக நிறைய சடங்கு, சம்பிரதாயங்கள் உள்ளன. அத்தனையையும் விமரிசையாக நடத்துகிறார்கள். நெருங்கிய சுற்றம், நட்பு, அக்கம் பக்கம் என அழைத்தாலே கணிசமாக கூட்டம் சேர்ந்து விடுகிறது.
 முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் புகைப்படம், காணொலி எடுக்கப்படும். இப்போது திருமணத்திற்கு முன் பெண்ணும், பையனும் சேர்ந்து நெருக்கமாக படம் பிடித்துக் கொள்கிறார்கள். சினிமா காட்சிகள் போல அவை எடுக்கப்படுகின்றன. மணமகள் ஒப்பனைக்கு பல நாட்கள் முன்பே ஒத்திகை செய்கிறார்கள்.புடவைக்கு ஏற்றாற் போல் நகைகள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஏற்கெனவே அழகாய் இருக்கும் முகத்திற்குப் பல ஆயிரம் செலவு செய்கிறார்கள். வசதி குறைவான குடும்பம் கூட இதற்குப் பெரிய தொகையை ஒதுக்கியே ஆக வேண்டும். இதில் சமரசத்திற்கு இடமே இல்லை.
 திருமண வரவேற்புக்கான மணமக்கள் உடையைப் பொறுத்தவரை அது வட இந்திய பாணியில் இருக்க வேண்டும். மணமகள் தேவலோகத்து அப்சரஸ் போல இருக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் அள்ளி விடட்டும். ஆனால், வசதி இல்லாத குடும்பங்களிலும் இந்த நிலைதான். மறுக்க முடியாமல் மறுகிப் போகும் குடும்பங்கள் பாவம்.
 அடுத்து விருந்தை எடுத்துக் கொண்டால், இலையை நிறைத்து விடுகிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்களின் இலையிலும் மூன்று வகை இனிப்பு. பாதிப் பண்டம் கைபடாமலேயே குப்பைத் தொட்டிக்குப் போகிறது. விருந்தில் இத்தனை வகைகள் பரிமாறப்பட்டன என்ற பெருமை தான் முக்கியமே தவிர பணம் ஒரு பொருட்டல்ல. பரிமாறுபவர்கள் இயந்திரம் போல வரிசையாக இலையில் அடுக்கிக் கொண்டே போகிறார்கள். வேண்டும், வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
 இலையில் வீணாக்கப்படும் உணவைப் பார்த்தால் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாத வயிறுகள் நம் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஒருவரால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு பரிமாறினால் போதாதா? நீண்ட பட்டியலில்தானா நம் தகுதி அடங்கியுள்ளது? சாப்பாடு முடிந்தபின், நூற்றுக்கணக்கான தண்ணீர் பாட்டில்கள் தூக்கி போடப்படுகின்றன.
 பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழக ஆய்வு, அந்நகரில் நடைபெறும் திருமணங்களில் மட்டும் ஆண்டுக்கு 339 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுகள் வீணடிக்கப்படுவதாகச் சொல்கிறது. அப்படி வீணாகும் உணவைக் கொண்டு இந்தியாவில் உள்ள 2 கோடியே 60 லட்சம் நபர்களுக்கு ஒரு வேளை வயிராற சாப்பாடு கொடுக்கலாம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 அப்படியென்றால், இந்தியா முழுக்க திருமண விருந்துகளில் வீணாகும் உணவுகளைக் கொண்டு எத்தனை கோடி மக்களின் பசியைப் போக்க முடியும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு விருந்தில் 30 இனிப்புகள் வைக்கப்பட்டன. இது எங்கே போய் முடியுமோ?
 ஊர் மூக்கின்மேல் விரல் வைக்க வேண்டும் என்று ஆடம்பர செலவு செய்துவிட்டு தன் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.
 தற்பொழுது இன்னொரு பழக்கம் நம்மிடையே தோன்றியுள்ளது. நம் வீட்டில் நடக்கும் எந்த நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கு வருபவர்களுக்கு ஏதாவது பரிசு தருவது. கொலு, பிறந்தநாள் கொண்டாட்டம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, திருமணம் போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் அவர்கள் விடைபெற்றுச் செல்லும் போது நினைவுப் பரிசு கொடுக்கிறார்கள். உண்மையில் இது ஒரு புதிய தலைவலி என்று சொல்லலாம்.
 ஆடம்பரத் திருமணங்கள் மூலம், திருமண ஏற்பாட்டாளர்கள், சமையல் கலைஞர்கள், அலங்காரப் பணி செய்வோர், தூய்மைப் பணியாளர்கள் எனப் பல்வேறு துறையினரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி வாய்ப்புப் பெறுகிறார்கள். வசதி இருப்பவர்கள் ஆடம்பரமாக செலவு செய்யட்டும். ஆனால், கடன் வாங்கி ஆரவாரமாகத் திருமணம் செய்ய வேண்டாமே.
 நம் வீட்டுத் திருமணம் பிறரை மலைக்க வைக்க வேண்டும் என்பதுதான் பலருக்கும் குறிக்கோளாக இருக்கிறது. முன்பெல்லாம் வரவேற்புக்கு நெருங்கிய உறவினர்கள் மண்டப வாயிலில் நிற்பார்கள். ஆனால், தற்போது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முகம் தெரியாத இரு பெண்களை இப்பணியில் அமர்த்துகிறார்கள்.
 கல்யாண செலவும், சீர்வரிசைகளும் பெரும்பாலும் பெண் வீட்டார் செலவாகி விடுவதால் பெண்ணைப் பெற்றவர்கள் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். சொத்துக்களை விற்று திருமண செலவு செய்பவர்களும் உளர்.
 கரோனா காலத்தில் ஆடம்பர திருமணங்களுக்கு அனுமதி இல்லாததால் மக்கள் மிக எளிமையாக திருமணத்தை நடத்தினார்கள். சிலர்தான் கலந்துகொண்டனர். தாலி கட்டியதும் ஒரு விருந்து அவ்வளவே. பல லட்சம் பணம் மிச்சமானது.
 வீண் ஆடம்பரம் இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. சமீபத்தில் ஒரு செய்தி, பலருக்கும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. ஒரு தந்தை தன் மகளுக்குக் கொடுத்த சீர்வரிசை 200 சவரன் நகை, பாத்திரக்கடை வைக்கும் அளவுக்கு பித்தளை, எவர்சில்வர் சாமான்கள், ஏகப்பட்ட வெள்ளி சாமான்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை. சுமார் நூறு பெண்கள் அவற்றைத் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்தனராம். மகளின் மீது கொண்ட பாசமா? தன் செல்வச் செழிப்பைப் பறைசாற்றவா? இன்னொரு தகப்பன் தன் மகளின் எடை அளவு தங்கம் தந்ததாக செய்தி வந்தது.
 இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் புழங்காத, பயன்படுத்தப்படாத பொருட்கள் அதிகம் இருக்கின்றன. பரண் மீது பிசுக்கு ஏறி அழுக்கு படிந்து கிடக்கின்றன. அவற்றைப் பராமரிக்க நேரமும் இல்லை, ஆட்களும் இல்லை, அக்கறையும் இல்லை.
 அந்தக் காலத்தில் பாத்திரங்கள் வாங்கும் தேவை இருந்தது. விசேஷங்களின் போது உணவை வீட்டிலேதான் சமைத்தாக வேண்டும். இப்போது போல் வெளியே ஆர்டர் கொடுப்பது இல்லை. ஆகவே, பெரிய பெரிய பாத்திரங்களுக்கான அவசியம் இருந்தது.
 இப்போது பெரிய பெரிய பாத்திரங்களுக்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது. குருவிக் கூடு போல ஒரு வீடு. வீட்டில் சமைப்பதை விட வெளியில் சாப்பிடுவது அதிகமாகி விட்டது. நிலைமை இவ்வாறு இருக்க, நூறு அண்டாக்கள், நூறு குடங்கள் நூறு கொப்பரைகள் என சீர் கொடுத்தால் அவ்வளவையும் என்ன செய்வார்களோ?
 சமீபத்தில் ஒரு தாய் மாமா சீர் செய்து தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க ûவைத்தார். கிரேனில் தூக்கிக் கொண்டு வரப்பட்ட மாலை பேசுபொருளாக ஆகிவிட்டது. மாலையே இப்படி என்றால், மற்ற சீர் வரிசைகளைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். வசதி படைத்த தாய்மாமன்கள் இப்படிச் செய்யலாம். சுமாரான வசதி படைத்தவர்களும், பணம் இல்லாதவர்களும் என்ன செய்ய முடியும்?
 ஊர் முழுக்க பத்திரிகை வைத்து (இப்போது ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், இனிப்பு வைத்து அதன் மேல் அழைப்பிதழ் வைக்கிறார்கள்; வசதி படைத்தவர்கள் புடவையும் கூட) வருபவர்களை "வாருங்கள்' என்று முகம் மலர அழைக்க முடிவதில்லை. வருபவர்கள், பரிசுப் பொருள்கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து, பின்னர் பந்தியில் முண்டியடித்து சாப்பிட்டு விட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
 திருமணம் என்பது, இரண்டு அன்பு உள்ளங்கள் இல்லறத்தில் இணைவது. அவர்களின் இல்வாழ்க்கை கன்னலாய் தித்திக்க வேண்டும். அங்கே அன்பும், அறனும் தழைத்தோங்க வேண்டும்.
 அவைதான் முக்கியமே தவிர பணத்தை வாரி இறைப்பது முக்கியம் இல்லை.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT