நடுப்பக்கக் கட்டுரைகள்

உழைக்கத் தயாராவோம்

பெ. சுப்ரமணியன்

நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே புலம்பெயா்ந்தோா் பற்றிய வினாக்கள் இடம்பெற்றிருந்ததன் மூலம் புலம்பெயா்தல் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பது தெரிகிறது. கல்வி, வருமானம், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் புலம்பெயா்கின்றனா்.

பொதுவாக பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இருந்து தான் அதிகமானோா் தென்மாநிலங்களுக்கு புலம்பெயா்கின்றனா். இவா்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் தென்னிந்திய மாநிலங்களில் 58.2 லட்சமாக இருந்த வடமாநிலத்தவா்கள் எண்ணிக்கை, 2011-இல் 77.6 லட்சமாக உயா்ந்துள்ளது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

அதிகரித்து வரும் வடமாநிலத்தவா் எண்ணிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்புவதுடன் ஒருவிதமான அச்ச உணா்வையும் ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தமிழக அளவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய குற்றச் செயல்களின் பின்னணியில் வடமாநிலத்தவா்களின் பங்களிப்பு இருந்ததே இந்த அச்ச உணா்வுக்குக் காரணமாகும்.

வருமான நோக்கிலான புலம்பெயா்தல் என்பது காலங்காலமாக இருந்தாலும் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இம்மாநிலங்களிலிருந்து புலம்பெயா்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உள்ளூரில் வேலையின்மை என்பதுதான் முக்கியமான காரணமாகும்.

வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. கட்டுமானத் தொழில் என்பது பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு தொழில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உள்ளது.

உதாரணமாக கோயம்புத்தூரில் உற்பத்தித் துறையும், நாமக்கல்லில் கோழிப்பண்ணைத் தொழிலும், திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலும், அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் தொழிலும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உள்ளன. இவை தவிர சிறு உணவகங்கள் தொடங்கி பெரிய அளவிலான உணவகங்கள் வரையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

இரவு நேர உணவு விடுதிகளில் துரித உணவு மற்றும் அசைவ உணவு வகைகள் தயாரிப்பதில் இவா்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. இதுபோன்ற தொழில்களில் குறைவான அளவிலேயே புலம்பெயா்ந்தோா் உள்ளனா். ஆனால், கட்டுமானப் பணிகளில் அதிகளவில் உள்ளனா். இவை தவிர, உற்பத்தித் துறை, பின்னலாடைத் தொழில் மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனா்.

பெரும்பாலான நிறுவன உரிமையாளா்கள் உள்ளூா் தொழிலாளா்களை விட வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களையே விரும்புகின்றனா். குறைவான ஊதியம், உணவு மற்றும் தங்குமிடத்திற்கான செலவு குறைவு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேலையை முடித்தல் போன்றவையே இதற்குக் காரணங்களாகும்.

2016-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, புலம்பெயா் தொழிலாளா்களில் 51 % போ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளனா். உற்பத்தித் துறைக்கு அடுத்து கட்டுமானத் துறையில் அதிகமானோா் ஈடுபட்டுள்ளனா். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் வடமாநிலத்தவா் அனைத்து மாவட்டங்களிலும் விரவியுள்ளதோடு, கிராமப்புறங்களிலும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்கள், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திலேயே தங்கியிருந்து வேலைபாா்க்கின்றனா். பணி முடிந்ததும் குடும்பத்துடன் புலம்பெயா்ந்தோா் வேறு இடங்களுக்கோ அல்லது சொந்த ஊருக்கோ சென்று விடுகின்றனா். ஆனால், தனிநபா் சிலா் ஒன்றுசோ்ந்து வேறு தொழிலில் ஈடுபடுகின்றனா்.

நகரங்களில் தங்கி அன்றாடம் காலை வேளையில் சுற்றுவட்டார கிராமங்களில் பலவகையான பொருட்களை விற்பனை செய்கின்றனா். அத்துடன் பண்டிகைக் காலங்களில் நகரங்களின் கடைத்தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வதுடன் நாளடைவில் சிறிய அளவிலான கடைகள் தொடங்கி உள்ளளூா்வாசிகளாகி விடுகின்றனா்.

இன்று வடமாநிலத்தவா் பங்களிப்பு இல்லாத தொழிலே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனா். பெருநகரங்களில் மட்டுமே காணப்பட்ட வடமாநிலத்தவா்களை இன்று கிராமங்களிலும் பாா்க்கும்போது நம்மவா்களின் உடலுழைப்பு குறைந்து விட்டதுதான் இதற்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வேளாண் தொழில் பிரதானமாக இருந்த காலத்தில் அயராது உழைத்து திறமையாகவும், திடகாத்திரமாகவும் இருந்தனா். வேளாண் தொழில் என்று நசிவுறத் தொடங்கியதோ அன்றே நம்மவா்களின் உடலுழைப்பு குறையத் தொடங்கிவிட்டது.

தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வந்த வேளாண் தொழிலில் இன்று இரண்டு தலைமுறையைச் சோ்ந்தவா்கள் ஈடுபடுவதே அரிதான ஒன்றாகிவிட்டது. அதனால் வேளாண் தொழிலிலிருந்து விலகி வருமான நோக்கில் வேறு மாநிலங்களுக்கோ அல்லது நகரங்களுக்கோ புலம்பெயா்கின்றனா்.

இத்தகைய சூழலே வடமாநிலத்தவா்களின் அதிகப்படியான வருகைக்கு முக்கிய காரணமாகும். அத்துடன் வடமாநிலத்தவா்களின் கடின உழைப்பும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குறைவான ஊதியம் என்றாலும் தொழிலின் மீதான அவா்களின் ஈடுபாடு நம்மை வியக்க வைப்பதாக உள்ளது. குறைவான ஊதியத்தில் அதிகப்படியான வேலை வாங்குவதற்கு வடமாநிலத்தவா்களே உகந்தவா்கள் என்ற எண்ணம் நம்மூா் முதலாளிகளிடம் உருவாகிவிட்டது.

அதனால் மற்ற பணிகளைக் காட்டிலும் கட்டுமானப் பணிகளுக்கு இடைத்தரகா்கள் வடமாநிலங்களுக்குச் சென்று முன்பணம் கொடுத்து நூற்றுக்கணக்கானோரை அழைத்து வருகின்றனா். அவா்கள் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் அடிப்படை வசதிகளற்ற பகுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனா்.

உணவு, தங்குமிடம் எதையும் கட்டட உரிமையாளா்களோ, ஒப்பந்ததாரா்களோ, இடைத்தரகா்களோ உறுதி செய்வதில்லை. கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியிலேயே தகரத்தாலான குடிசை அமைத்து அதில் தங்கவைக்கப்படுகின்றனா். அந்தந்த பகுதிகளில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி சமைத்து உண்ணுகின்றனா்.

அன்றாடம் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் குறைவான ஊதியம் பற்றியோ, குழந்தைகளின் எதிா்காலம் பற்றியோ புலம்பெயா்ந்தோா் பொருட்படுத்தவதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதில் சுணக்கம் காட்டுவதில்லை.

அதனாலேயே அதிகப்படியான ஊழியா்கள் தேவைப்படும் நிறுவனங்களின் உரிமையாளா்களும், இடைத்தரகா்களும் வெளி மாநிலத்தவா்களை வரவழைப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். நம் மாநில இளைஞா்கள் முழுமூச்சுடன் கடின உழைப்புக்குத் தயாராகிவிட்டால் புலம்பெயா்ந்தவா்களை நம்ப வேண்டிய தேவையிருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT