நடுப்பக்கக் கட்டுரைகள்

பயணத்தில் குறுக்கிடும் கால்நடைகள்

முனைவர் என். பத்ரி

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. நாய்கள், மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. திடீரென சாலையின் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

வாகனங்கள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளை விட கால்நடைகளால் விபத்துக்கள் நிகழ்வது சமீபகாலமாக அதிகரித்து விட்டது. சென்னை ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், வேப்பம்பட்டு, தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, பழைய மகாபலிபுரம் சாலை இங்கெல்லாம் கால்நடைகளால் அநேகமாக நாள்தோறும் விபத்துக்கள் நிகழ்கின்றன.

விபத்துகளில் சிக்கும் கன்றுகளையும், மாடுகளையும் காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை. சாலையின் நடுவே உயிருக்குப் போராடும் இந்த கால்நடைகள் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதும்போது அவை பலியாவதோடு, தொடர்ந்து வாகனத்தில் வருபவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். 

பெருநகரங்களில், கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதற்கு அரசால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தீவிரமாக பின்பற்றப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சியும், காவல்துறையும் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. 

சாலையில் மட்டுமல்லாமல், இருப்புப் பாதைகளிலும் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன. ரயில் மோதி கால்நடைகள் பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. தண்டவாளத்தைக் கடக்கும் மாடுகள் மீது விரைவு ரயில்கள் மோதி அதன் இயந்திரங்கள் பழுதான சம்பவங்களும் உண்டு.தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால், அவற்றைப் பிடிக்க ஆர்வம் காட்டும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மாடுகளை ஏனோ கண்டுகொள்வதில்லை.

கடந்த மாதம் ஒரே இரவில், சென்னையில் மேடவாக்கம், சந்தோஷபுரம், பெருங்களத்தூர், பழைய மகாபலிபுரம் சாலை இவற்றில் மட்டும் விபத்தில் சிக்கி கால்கள் உடைந்து ரத்த வெள்ளத்திலிருந்த நான்கு கன்றுக்குட்டிகள் மீட்கப்பட்டு வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. 

அந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சாலைகளில் விபத்தில் சிக்கிய 50 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரித்த செலவுத்தொகையுடன் அபராதமாக ரூ. 2,000 விதிக்கப்படுகிறது.

பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தி மாடுகளை மீட்டு செல்லவில்லையெனில், மூன்றாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாட்டுக்கும் பராமரிப்புத் தொகையாக ரூ. 200 வசூலிக்கப்படுகிறது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14.12.2022 முதல் 27.12.2022 வரையிலான இரண்டு வார காலத்தில் 446 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடமிருந்த்து ரூ.8,92,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்தான் என்றில்லை. நாகை - நாகூர் பிரதான சாலையிலுள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக படுத்துக்கொள்வதும், சாலையில் நடுவே நின்று சண்டையிட்டுக் கொள்வதும் அடிக்கடி விபத்து நிகழக் காரணமாகின்றன. அதிலும் இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் உறங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே நாகை நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலையில் மாடுகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனஅறிவித்தது. மாட்டு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் இருந்ததால், நகராட்சி ஊழியர்கள் நாகை - நாகூர் சாலையில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர். 

இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர்கள் நகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீஸôர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இவ்வாறான நிகழ்வுகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் நிகழ்கின்றன. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட மாடுகளை மாட்டுத் தொழுவத்திருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பம் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறி உள்ளது. 

மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபட்டால், அதன் உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படமாட்டாது. அது புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.

ஆறறிவு பெற்ற மனிதனே போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கால்நடைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றைப் பராமரிப்பவர்கள்தான், அவற்றை சாலைகளில் திரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தங்களின் கால்நடைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு கொடுக்க அவர்களை வலியுறுத்தும் வகையில், அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT