நடுப்பக்கக் கட்டுரைகள்

மீளுருவாக்க விவசாயம் தேவை

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

பசுமைப் புரட்சி, 1960-களில் உருவான இந்தியாவை ஒருபுறம் அதிக உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றி, மறுபுறம் உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீர் உறிஞ்சு நாடாகவும் மாற்றியது. கடந்த ஆண்டு வெளியான ஐ.நா.  சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் 251 கன கி.மீ. பரப்பிலான உலகின் கால் பகுதி நிலத்தடி நீரினை இந்தியா உறிஞ்சுவதாக கூறுகிறது. இதில் 90 % நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 3.9 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படும் கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்ற பயிர்களின் விளைச்சலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று 2019-ஆம் ஆண்டு வெளியான தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது. 

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 22.45 கோடி மக்களுக்கு உணவளிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும்  இந்திய விவசாயம் இயற்கையுடன் ஒன்றியிருக்கவேண்டும் என்கிறது கடந்த ஆண்டுக்கான ஐ.நா உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து நிலை அறிக்கை.

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் இயற்கை உள்ளீடுகளைக் கொண்டு பயிர் சுழற்சி போன்ற சாகுபடி முறைகளை உபயோகித்து  ரசாயனமற்ற விவசாய முறையான, மீளுருவாக்க விவசாய முறையினை உருவாக்கி வருகின்றனர். உற்பத்தியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், நுகர்வோர் என அனைவரும் மீளுருவாக்க விவசாயத்தின் மேல் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.  

காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (இன்டர் கவர்ன்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்) காலநிலை மாற்றம், நிலம் குறித்த அறிக்கையில், மீளுருவாக்க விவசாயத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளது. மீளுருவாக்க விவசாயம் என்பது வேளாண் அமைப்புகளில் ஏற்படும் பின்னடைவைத் திறம்பட சமாளிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு  நிலையான நில மேலாண்மை நடைமுறை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

மீளுருவாக்க விவசாயம் என்பது மண்ணின் ஆரோக்கியம், உணவின் தரம், பல்லுயிர் மேம்பாடு, நீரின் தரம், காற்றின் தரம் என அனைத்திலும் கவனம் செலுத்தும் ஒரு முழுமையான வேளாண் முறையாகும். இது மண்ணில்  கரிமப் பொருட்கள், உயிர்ச்சத்து, பல்லுயிர்ப் பெருக்கத்தை அதிகரிக்கச் செய்து மண்ணின் வளத்தினை மேம்படுத்துகிறது. மண்ணில்  நீர்ப்பிடிப்பு திறனையும் கரிம தேக்கத்தினையும் மேம்படுத்துகிறது.

தற்போதைய தீவிர விவசாய முறை, மண் சிதைவினை ஏற்படுத்தி தொடர்ச்சியான மண்வள இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் உலகின் மண்வளம் அடுத்த 50 ஆண்டுகளுக்குக்கூட உணவளிக்கும் வகையில் இல்லை என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நீரின் பயன்பாட்டையும் அதன் பயனுறுதிறனையும் மேம்படுத்த மண்ணின் ஆரோக்கியத்தையும் அதன் ஊட்டச் சத்து திறனையும் மேம்படுத்த வேண்டும். 

மண்ணின் ஆரோக்கிய அளவீடாகக் கருதப்படும் கரிமப் பொருளின் அளவினை 0.4 ஹெக்டேருக்கு ஒரு சதவிகிதம் அதிகரிப்பதால் அந்நிலத்தின்  நீர் சேமிப்பு திறன் 75,000 லிட்டருக்கு மேல் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

புவியின் வெப்ப உயர்வு  2 டிகிரி செல்சியஸýக்கு மேல் உயராமல் இருக்கவும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்தவும் மண்வளத்தைப் பாதுகாத்தல் அவசியம். உலகம் முழுவதும் மண்வளமும் பல்லுயிர் பெருக்கமும் குறைந்து வரும் சூழலில் உலகிற்கு உணவளிக்க 400 கோடி ஏக்கருக்கும் அதிகமான விவசாய விளைநிலங்களின் மண்ணை மீளுருவாக்கம் செய்வது அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்தியாவில், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி இவற்றின் பயன்பாட்டைக் குறைத்து விவசாய செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு மீள்ளுருவாக்க  விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம், குஜராத் போன்ற மாநிலங்களில் இதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பயிர், கால்நடை பண்ணைக் கழிவுகளை உரமாக்குதல், வண்டல் மண் பயன்பாடு, பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளை செயல்படுத்துதல் போன்ற விவசாயப் பணிகளை செய்துவரும் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த "சமாஜ் பிரகதி சஹ்யோக்' என்ற அமைப்பு,  2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களிலும் மராட்டிய மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலும் 1,000 விவசாயிகளைக் கொண்டு 2,000 ஹெக்டேர் நிலத்தில்  மீளுருவாக்க விவசாயத்தை சோதனை முறையில்  நடத்தியது.  

பயிர் சுழற்சி முறை, உலர் விதை விதைப்பு, மண்வளம் பேணுதல், சொட்டு நீர்ப் பாசனம், வேர், துளிர் வளர்ச்சியினை மேம்படுத்தும் நவீன கோதுமை பயிரிடும் முறை (சிஸ்டம் ஆப் வீட் இன்டென்சிபிகேஷன்),  வரிசை விதைப்பு, தெளிப்பு நீர்ப்பாசனம் போன்ற மீளுருவாக்க விவசாய நடைமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் 1,500 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டதாக இந்த சோதனையின் முடிவு கூறுகிறது.

சேமிக்கப்பட்ட இந்த 1,500 கோடி லிட்டர் தண்ணீர் 11 கோடி நகர்ப்புற அல்லது  27 கோடி கிராமப்புற மக்களின் ஒரு நாள் நுகர்வு. நகர்ப்புறத்தில் வாழும் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் தண்ணீரும் கிராமபுறத்தில் வாழும் ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுவதாக மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத் தரவு கூறுகிறது.

அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தின் "இந்திய உயிர்ம, கரிம உரங்களின் நிலை 2022'-இன் அறிக்கை, இந்திய மண்ணில் நிலவும் கரிம கார்பன், நுண்ணூட்டச்சத்துக்களின் கடுமையான பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய மண்ணின் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், இந்த அணுகுமுறை நாட்டின் தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க உதவும் என நம்புவோம்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய நடைமுறைகளை மீட்டெடுத்து மீளுருவாக்க விவசாயத்தினை தழைக்கச் செய்வோம். ஏனெனில்  மீளுருவாக்க விவசாயம் என்பது நமது முன்னோர்களின் விவசாய முறையை மட்டுமல்ல, விவசாய தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT