நடுப்பக்கக் கட்டுரைகள்

சிறுவர் இலக்கியம் வளர்ப்போம்!

இரா. கற்பகம்

 இன்று, பள்ளி மாணவர்களுக்குத் தமிழில் பிழையின்றிப் பேசவோ எழுதவோ தெரியவில்லை. தாய்மொழியாம் தமிழில் திக்கித் திணறித்தான் பேசுகிறார்கள்; தப்பும் தவறுமாகத்தான் எழுதுகிறார்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம்?
 தமிழ் மொழியில் இருநூற்று நாற்பத்தியேழு எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தில் இருபத்தி ஆறு எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. தமிழில் "ல', "ள', "ழ' என்றும், "ன',"ண', "ந' என்றும், வெவ்வேறு ஒலிகட்கு வெவ்வேறு எழுத்துகள் உள்ளன. "வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள், அளபெடைகள், புணர்ச்சி விதிகள் என்று தமிழ் இலக்கணம் மிக மிக விரிவாகவும், ஆங்கில இலக்கணத்தோடு ஒப்பிடுகையில் மிகக் கடினமாகவும் உள்ளது.
 ஆங்கிலம் கற்பிக்கப்படும் விதம்; ஆங்கிலம் கற்பதற்கு உள்ள ஆர்வம்; ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கென எழுதப்பட்டுள்ள எண்ணற்ற புத்தகங்கள்; எளிதாக நிறைய மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு; தமிழைத் தவிர்க்கவும் பிற நாட்டு மொழியைப் பாடமாக எடுக்கவும் தமிழக அரசின் கல்வித் துறையே பள்ளிகளில் செய்து தரும் வசதி -- இவை எல்லாமே தமிழ்நாட்டில் தமிழ்ப் பற்று குறைவதற்கான, குறிப்பாக மாணவர்களிடத்தில் குறைவதற்கான காரணங்களாகின்றன.
 சமச்சீர் கல்வி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்று எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும் மொழிப் பாடங்களாகிய தமிழ், ஆங்கிலப் பாடப் புத்தகங்கள், தொடக்கக்கல்வி வரையில் மிக நன்றாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விரும்பும் வகையில் வண்ணமிகு படங்களுடன் பாடல்களாகவும், உரையாடல்களாகவும், கதைகளாகவும் உள்ளன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும், பத்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாடப் புத்தகத்தையே பயன்படுத்துகிறது. ஆனால் தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்பில் இரு பாடத்திட்டங்களும் வேறுபடுகின்றன.
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கொள் குறி வினாக்களே அதிகம்; விரிவான விடைகளோ மனப்பாடச் செய்யுள்களோ இல்லை. அதனால் தமிழ் கற்பதும், அப்பாடத்தில் மதிப்பெண்கள் பெறுவதும் அம்மாணவர்களுக்கு எளிதாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்திலோ வினாக்கள் கடினமாக இருப்பதோடு, செய்யுட்பகுதி மனப்பாடம் செய்து, அவற்றில் வினா விடைகளும் எழுத வேண்டியுள்ளது. ஆறாம் வகுப்புக்கு மேல் தமிழ் ஆங்கிலப் பாடப் புத்தகங்களின் வடிவமைப்பு மிகவும் மாறுபட்டு, தமிழ் கடினமாகவும், ஆங்கிலம் சற்றே எளிதாகவும் ஆகிவிடுகிறது.
 செய்யுள், உரைநடை, துணைப்பாடம் இவை தமிழில் சிறுவர்களை ஈர்க்கும் வண்ணம் சுவாரசியமாக இல்லை. எல்லாம் அறிவுரை கூறும் வகையிலேயே உள்ளன. ஆங்கிலத்தில் நல்ல சிறுகதைகள், பாடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. துணைப்பாடத்துக்கு பிரபல புதினங்கள் சிறுவருக்கென எளிமையாக்கப்பட்டுப் பாடங்களாக வைக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் விருப்பத்தோடு அவற்றைக் கற்கிறார்கள்.
 ஒரு செய்தியை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். நான் ஆறாம் வகுப்பு படித்த போது ஆங்கிலத்தில் ஒரு பாடம். ஒரு கைதி, கடலுக்கு நடுவில் உள்ள கோட்டைச் சிறையில் இருந்து தப்ப முயல்கிறான். ஏற்கெனவே இறந்து போன ஒரு கைதியைச் சாக்கில் கட்டி வைத்திருக்கிறார்கள். இவன் இரவோடு இரவாக அப்பிணத்தை எடுத்துத் தன் அறையில் வைத்துவிட்டு, தான் சாக்கினுள் புகுந்து கொள்கிறான். அது தெரியாத காவலர்கள் மறுநாள் அச்சாக்கு மூட்டையைக் கடலில் தூக்கி வீசுகிறார்கள். இத்தோடு அப்பாடம் முடிந்து விட்டது.
 அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய " தி கெளண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ' என்னும் கதையில் ஒரு சிறிய பகுதியே எங்களுக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டிருந்தது என்பது மட்டும் என் நினைவில் பதிந்து போனது. அக் கைதி என்ன ஆனான் என்ற கேள்வி அப்படியே நின்றது. அப்புத்தகத்தை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் வளர்ந்தது.
 கல்லூரியில் படிக்கும்போதுதான் அப்புத்தகம் கிட்டியது. படித்து முடித்தேன். இவ்வாறு சிறு மனங்களில் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் சுருக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டுள்ளன. "தி த்ரீ மஸ்கிட்டியர்ஸ்', "தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்', " ட்ரஷர் ஐலேண்ட்', "கிட்நாப்ட்', "ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்', "ஜேன் அயர்', என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
 ஆனால் தமிழில் இப்படிப்பட்ட கதைச்சுருக்கங்கள் அதிகம் இல்லை. எழுத்தாளர் கல்கி எழுபது ஆண்டுகளுக்கும் முன் எழுதிய "பொன்னியின் செல்வன்' இப்போது திரைப்படமாக வெளிவந்துள்ளதால் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகியுள்ளது. 2009-இல் முதல் முதலாக இதனை எளிமைப்படுத்தி, "பொன்னியின் செல்வன் சிறுவர்களுக்காக' என்று நான் எழுதிய நூல் வெளிவந்தது. 2021-இல் கல்கியின் மற்றொரு படைப்பான "சிவகாமியின் சபதம்' புத்தகத்தை முதல் முறையாக கதைச்சுருக்கமாக எளிமைப்படுத்தி நான் எழுதிய நூல் வெளிவந்தது. ஆனால் அவையெல்லாம் சிறுவர்களிடத்தில் பெரிய அளவில் சென்றடையவில்லை.
 தமிழில் திரும்பத் திரும்ப ராமாயணம், மகாபாரதம், பரமார்த்த குரு கதைகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் இவைதான் வெவ்வேறு பதிப்புகளாக வருகின்றனவே தவிர பழம்பெரும் புதினங்கள் எளிமைப்படுத்தப்படுவதில்லை; எளிமைப்படுத்தினாலும் அவற்றுக்கு வரவேற்பு இல்லை.
 கல்கியின் "அலை ஓசை', "பார்த்திபன் கனவு', சாண்டில்யனின் "கடல் புறா', யவன ராணி', நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன்' போன்றவையெல்லாம் தமிழ் மொழியின் பொக்கிஷங்கள் அல்லவா? அவற்றில் சிறுவர்களுக்குத் தேவையான ரசங்களைக் கொடுத்து தேவையற்றதைத் தவிர்த்து கதைச் சுருக்கங்களாக எழுதி வெளியிட்டால், அவற்றைப் படிக்கும் சிறுவர்கள் நிச்சயம் பின்னாளில் அவற்றின் மூல நூல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்கள்.
 இதில் மற்றுமொரு வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், தமிழில் உள்ள அற்புதப் புதினங்களை விட்டுவிட்டு, நம்மவர்கள் ஆங்கிலப் புதினங்களை எல்லாம் திரைப்படங்களாக எடுத்துள்ளார்கள். அவ்வப்போது மட்டுமே தமிழ் புதினங்கள் திரை வடிவம் பெறுகின்றன. "பொன்னியின் செல்வ'னுக்கு இப்போதுதான் நல்ல காலம் பிறந்திருக்கிறது. திரைப்படமாக வந்துதான் "பொன்னியின் செல்வன்' சிறுவர்களைச் சென்றடைய வேண்டியிருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
 சிறுவர்களது கற்பனை உலகத்தில் பொம்மைகள், பூதங்கள், மந்திர தந்திரங்கள், சித்திரக் குள்ளர்கள் போன்றவற்றுக்கு அதிக இடமுண்டு. ஆங்கிலத்தில் எனிட் ப்ளைட்டன் என்னும் பெண்மணி நூற்றுக்கணக்கில் சிறுவர்களுக்கெனக் கதைப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
 இவரது கதைகளில் பொம்மைகள் பேசும். சித்திரக்குள்ளர்கள், மந்திரவாதிகள் அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்றெல்லாம் வியக்கத்தக்க வகையில் கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கதைகளை எழுதியிருப்பார். ஒரு இடத்தில் கூட நீதி போதனை இருக்காது. ஆனால் நற்பண்புகள் எவை, தீய பண்புகள் எவை என்பதைச் சிறுவர்கள் தாமாக அறிந்து கொள்ளும் வண்ணம் கதைக்குள் மறைத்து வைத்திருப்பார்.
 குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் போல இன்று பலர் சிறுவர் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு அடுத்த நிலையாகச் சிறுகதைப் புத்தகங்கள், சிறு புதினங்கள் ஆகிவற்றைப் படைப்பவர்கள், நீதி போதனைகளைத் திணிக்காமல் எழுதினால் சிறுவர்கள் விரும்பிப் படிப்பார்கள். "பூந்தளிர்', "அம்புலிமாமா', "ரத்னபாலா' போன்ற சிறுவருக்கான இதழ்கள் இப்போது வருவதில்லை. "கோகுலம்' மட்டுமே சிறுவருக்கென வந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல வரவேண்டும்.
 "நேஷனல் புக் ட்ரஸ்ட்', "சில்ட்ரன்ஸ் புக் ட்ரஸ்ட்' ஆகிய பதிப்பகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்த அவற்றின் பதிப்புக்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனவே தவிர தமிழில் கதைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களது புத்தகங்கள் குழந்தைகள் விரும்பும் வகையில் பெரிய வண்ண ஓவியங்களுடன் வெளிவருகின்றன. "அமர் சித்ர கதா' இந்தியாவின் வரலாற்று நாயகர்கள், விடுதலை வீரர்கள், புராணங்கள் ஆகியவற்றைச் சித்திர வடிவில் சிறுவர்களுக்கென அள்ளி வழங்குகிறது. இதிலும் தமிழகத்துச் செய்திகள் மிகக் குறைவாகவே தரப்படுகின்றன.
 தமிழக அரசும் பதிப்பகங்களும் தமிழில் வித்தியாசமான முயற்சிகளை ஊக்குவித்து அவைசிறுவர்களைச் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். கல்வித்துறை தமிழ்ப் பாடங்களில் ஆங்கிலப்பாடத்தில் உள்ளது போல் கதைச் சுருக்கங்களின் பகுதிகளைச் சேர்த்து சுவாரசியமாக்க வேண்டும்.
 இலக்கணப் பகுதிகளைச் சற்றே குறைத்து, வினா வடிவமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும். பள்ளி இறுதிவரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். வேற்று மொழிகளை மாணவர்கள் விரும்பியெல்லாம் கற்பதில்லை; தமிழிலிருந்து தப்பிக்கவே அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 தமிழை விரும்பிக் கற்கும் வண்ணம் எளிமையாகவும், நேர்த்தியாகவும் பாடங்களை எழுத வேண்டும். பாடப்புத்தகங்கள் எழுதும் குழுவில் சிறுவர் நூல்கள் எழுதுவோரையும் சேர்க்க வேண்டும். பெற்றோரும், பாடப்புதகங்களை மட்டும் படிக்கச் சொல்லுவதை விடுத்து, சிறு வயதிலிருந்தே நல்ல கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 சமூக ஆர்வலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT