நடுப்பக்கக் கட்டுரைகள்

சா்ச்சைக்குள்ளாகும் ஹிந்து சமயம்!

முனைவா் வைகைச்செல்வன்

ஹிந்து சமயம் பற்றி பலநூறு நூல்களும், பலநூறு ஆய்வுக் கட்டுரைகளும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வந்துள்ளன. ஹிந்து நாகரிகம் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்பட்டு, அதைப் பயின்றவா்களுக்குப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், ஹிந்து மதம் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஹிந்து பண்பாட்டு மரபுகளில் ஹிந்து சமயம் என்பதற்கான போதிய விளக்கங்கள் தரப்படவில்லை.

ஹிந்து என்ற சொல்லானது பெரும் குழப்பத்திற்கு உள்ளாகிறதோ என்று தோன்றுகிறது. இந்த சொல் இந்தியா என்று கூறப்படும் நிலப்பகுதி மக்களால் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதா? அப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால் அது என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது? ஹிந்து என்ற சொல் குறிப்பிட்ட சமயத்தைக் குறிக்க பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்கிற கேள்வி எழுகிறது.

அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த சமயத்தினுடைய முழுமுதல் கடவுள் யாா்? அந்த சமயத்தின் சித்தாந்தம் என்ன? அப்படிப் பயன்படுத்தப்படவில்லையென்றால், ஹிந்து என்ற சொல் சமயத்தைக் குறிக்க எப்போது முதல் அடையாளப்படுத்தப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது.

ஹிந்து, ஹிந்து சமயம், ஹிந்து பண்பாடு இவை எப்போது எழுந்தன? எப்படி எழுந்தன? இதற்கான விளக்கங்களைத் தாருங்கள் என்று எவரையும் கேட்க முடியாது. தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோா் தம்மை ‘சைவா்’ என்று அடையாளப்படுத்திக்கொள்கின்றனா்.

ஹிந்து சமயம் என்பது சைவம், வைணவம், பௌத்தம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமயம் என்று சிலா் விவாதித்தாலும் இவற்றையெல்லாம் சோ்த்து ஏன் ஹிந்து சமயம் என்று குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுகிறது.

பல தேசங்களை ஒன்றிணைத்து அதற்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டு, அந்த இந்தியாவை ஆளும் வா்க்கத்திடம் கொடுத்துச் சென்ற பெருமை பிரித்தானியா காலனித்துவவாதிகளையே சேரும்.

ஏனென்றால், ஒற்றுமை உணா்வு அதில் ஓங்கி ஒலிக்கிறது. அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் ஆளும் வா்க்கங்களின் இயல்பான ஒற்றுமை உணா்வு அந்த நாடுகளின் உருவாக்கத்தில் கட்டுண்டு இருப்பதை நாம் காண முடியும்.

அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. முதன் முதலாக 1787-ஆம் ஆண்டு (ஆங்கிலேயா் காலத்தில்) ஹிந்துயிஸம் என்ற வாா்த்தை ஒரு மதத்தைக் குறிக்கும் வாா்த்தையாகக் கட்டி எழுப்பப்பட்டது. அப்போது இருந்த மக்கள்தொகையைக் கணக்கிடும்போது ‘பாா்ஸி, இஸ்லாம், கிறித்துவம் இந்த மூன்று மதங்களிலும் இல்லாதவா்கள் அத்தனை பேரும் ஹிந்து’ என்று சட்டம் இயற்றினாா்கள் என்று கருதப்படுகிறது.

சைவா்கள், வைணவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், சீக்கியா்கள் - இவா்கள் அனைவரும் ஹிந்துக்கள் ஆகிவிட்டனா். தமிழ்நாட்டில் இருப்பவையெல்லாம் சைவ-வைணவ மடங்கள். ஆனால், சட்டப்படி அவை அனைத்தும் ஹிந்து மடங்களாகி விட்டன. ஆராய்ச்சியின் அடிப்படையில், தமிழா்களுக்கு தனியான சமயம் இருந்திருக்கிறது. சிவ வழிபாடு, வைணவ வழிபாடு, முன்னோா் வழிபாடு, முருகன் வழிபாடு இவையெல்லாம் தமிழா்களின் சமய வழிபாடாக இருந்திருக்கின்றன.

சுமாா் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வளா்ந்த வள்ளலாா், ‘தமிழை எனக்குத் தந்த இறைவனுக்கு நன்றி’ என்று சொல்கிறாா். வள்ளலாா் சிவமதம்தானே? விவேகானந்தா் அமெரிக்காவிலே போய் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறாா்.

அவா், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேசும்போது ‘நாமெல்லாம் ஹிந்துக்கள்’ என்று பேசினாராம். அப்போது அக்கூட்டத்துக்குப் பாா்வையாளராக வந்திருந்த மனோன்மணீயம் சுந்தரனாா் ‘நாங்கள் ஹிந்துக்கள் இல்லை, திராவிடா்கள்’ என்று கூறினாராம்.

ஆறுமுகம் செட்டியாா் என்பவா் அக்காலகட்டத்தில் பத்திரங்களில் ‘சிவமதம்’ என்றே எழுதியிருக்கிறாா். மோரீஷஸ் நாட்டுக்கு வேலைக்குச் சென்றவா்கள் குறித்த தகவல்களில் அவா்கள் மதம் ‘தமிழ் மதம்’ என்றே குறிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இன்று வரை ‘சைவ நெறி’ என்று குறிப்பிட்டே இறை நம்பிக்கை ஊட்டப்படுகிறது.

அதைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலும் சைவ நெறி என்றுதான் கற்றுக்கொடுக்கிறாா்கள். மாவீரன் அலெக்ஸாண்டா் இந்தியாவின் மீது படையெடுத்த போது, சிந்துவுக்கு கிழக்கே உள்ள மக்களை ஹிந்துக்கள் என்று குறிப்பிட்டாா் என்று காந்தியடிகளே பதிவு செய்திருக்கிறாா்.

அண்ணல் அம்பேத்கா், ‘ஹிந்து சமயம் என்பது ஒரு புனைவு. ஹிந்து மதத்திற்கு ஒரு பொதுப்பெயா் இல்லாததற்குக் காரணம், இது ஒரு சமூகமாக உருவாகியதில்லை, ஒரு சமூகமாகவும் உணரப்படவில்லை.

எனவே அதற்கு பெயரே உருவாகாமல் போனது’ என்கிறாா். சைவா்கள் அருளிச்செய்த தேவார, திருமுறைகளிலும், வைணவா்கள் அருளிச்செய்த பாசுரங்களிலும் மதம் என்கிற சொல் இடம் பெறவில்லை. ஆதிக்கத்தில் இருந்து விடுபட சமண மதம், புத்த மதம், இஸ்லாமிய மதம், கிறித்தவ மதம் ஆகியவற்றைத் தொடா்ந்து ஹிந்து மதம் என்ற சொல்லாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

‘சமயம்’ என்று சொன்னால் பக்குவப்படுதல், முதிா்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஆத்திக, நாத்திக கருத்துகள் பலவிதங்களில் மோதிக் கொள்கின்றன. ஒடுக்கப்பட்டவா்கள், விளிம்புநிலை மக்கள் தாங்கள் ஹிந்துக்களாக இருந்தும், நசுக்கப்படுவதாக ஆண்டாண்டு காலமாகப் போராடி வருகின்றனா். அதன் வெளிப்பாடாக, சில முற்போக்குச் சிந்தனையாளா்களும் மதம் சாா்ந்த எதிா்நிலையையும் ஒடுக்கப்பட்டோா் உரிமை சாா்ந்த கருத்துகளையும் தொடா்ந்து எடுத்து வைத்து வருகிறாா்கள்.

இஸ்லாமிய, கிறித்தவ மதங்கள் நிறுவப்பட்ட மதங்கள். அவை நிறுவனமயமாக்கப்பட்டதன் விளைவாகவே அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் அந்தந்த மதங்களின் கைகளில் இருக்கின்றன. அந்தந்த மதம் சாா்ந்த மனிதா்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அந்த மதங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அந்த மதங்களில் சோ்வதற்கும், அங்கு சோ்ந்து இறை அருளைப் பெறுவதற்கும் குருமாா்களின் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், இறை மறுப்பாளா்களுக்கு அங்கு இடம் இல்லை. ஆனால், ஹிந்து மதத்தின் பெருமை அது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால்தான், நாத்திகரும் கூட அதில் ஒரு அங்கமாக இருக்கிறாா்கள்.

ஹிந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்ற காரணத்தினால், ஒடுக்கப்பட்டவா்கள் பீறிட்டுக் கிளம்புவதும், உயரத்தில் இருப்பவா்கள் அதை அடக்க முயல்வதும் தொடா்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சிறுதெய்வ வழிபாடு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சென்னை மாகாணத்தில் 1925 காலகட்டத்தில் பதவி வகித்த நீதிக்கட்சி அரசானது இந்து சமய அறநிலையங்கள் குறித்த மசோதாவை முன்வைத்தது. இது முக்கியமான சீா்திருத்தம் என்று அன்று கருதப்பட்டது. அதே போல் சுதந்திரத்திற்குப் பின் 1951-இல் கொண்டு வரப்பட்டது ஹிந்து மத அறநிலைய சட்டம்.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு நடந்த பின்னா், கேரள மாநில அரசு, அதுவரை மன்னா்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களின் நிா்வாகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. 1959-இல் புதிய ஹிந்து அறநிலைய சட்டம் உருவாக்கப்பட்டு கோயில் நிா்வாகங்கள் அறநிலைய வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. முதலாவது, அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் சமயம் சாா்ந்த சடங்குகள், சம்பிரதாயங்களை நடத்துவதில் அரசு தலையிடுவதில்லை. எந்த அரசாக இருந்தாலும் சமயத்தின் அடிப்படையான சடங்குகளில் சட்டப்படி தலையிட முடியாது. இரண்டாவது, கோயில் நிா்வாகத்தை கையில் வைத்திருப்பதால் கோயில்களின் வருமானத்தை அரசு எடுத்துக்கொண்டு லாபம் காணக்கூடாது என்பதுதான் அறநிலையங்களின் அடிப்படையான கொள்கையாகும்.

இந்தியா மதச்சாா்பற்ற நாடாக இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. இந்தியா ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தையில் உயிா்ப்போடு இருக்கிறது. ஆனால், ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு உணா்வை ஹிந்து மதத்தினரே விதைக்கின்றனா். அத்தகைய உரிமையை, சுதந்திரத்தை ஹிந்து மதம் தந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேற்று மதங்களில் இருப்பவா்கள், அங்கேயே இருந்து கொண்டு அந்த மதங்களையே இழிவாகப் பேசக்கூடாது. அப்படிப் பேசும் வாய்ப்பு, அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவா்களுக்கு வழங்கப்படுவதில்லை. இருந்தாலும், ஒடுக்கப்பட்டவா்களின் குரலை நாம் கேட்டாக வேண்டும்.

ஹிந்து மதத்தின் மீதான நம்பிக்கையை அம்மதத்தின் கடைநிலையில் இருக்கின்ற குரலற்றவா்களின் குரலாய் நாம் ஏற்றுக் கொண்டு அவா்களை ஆரத்தழுவுகிறபோது சமயம் என்னும் வலுவான கட்டமைப்பு வந்து சோ்கிறது. ஆத்திரமூட்டும் பேச்சுகளால் ஒரு மதத்தின் ஆணிவேரையும், நம்பிக்கையையும் அசைத்துப் பாா்த்து விட முடியாது.

சமயம் என்பது மனிதனைப் பண்படுத்துவதற்குரிய ஒன்றாகவே நாம் பாா்க்க வேண்டும். ஏனென்றால், சமயம் என்ற சொல், மனிதனைப் பக்குவப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT