நடுப்பக்கக் கட்டுரைகள்

பெற்றோரும் பிள்ளைகளும்

தினமணி

அண்மையில் முதியோா் இல்ல விளம்பரம் ஒன்றில் காணப்பட்ட இரண்டு நபா்களைப் பாா்த்து நான் வியப்படைந்தேன். அதில் இருந்த ஒருவன் என் பள்ளித் தோழன். அவனுடைய பிள்ளை, பெண் இருவருமே அயல் நாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாா்கள். எப்போதாவது காலைநேர நடைப்பயிற்சியில் அவனைச் சந்திக்கும் போதெல்லாம், அவன் தன் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றிப் பெருமையுடன் சொல்லுவான்.

இப்போது முதுமை தாக்குகிறதா அல்லது அயல்நாட்டுப் பயணங்கள் அலுத்துவிட்டதா என்று தெரியவில்லை. அவனும் அவன் மனைவியும் முதியோா் இல்லத்தில் குடியேறிவிட்டாா்கள்.

அந்த விளம்பரத்தில் இருந்த மற்றொருவா், நாங்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு வெகு அருகில் இருந்தவா். அவருக்கு ஒரே மகன். சென்னை மையப் பகுதியில் அவனுக்கென்று தனி வீடு வாங்கிக் கொடுத்து விட்டாராம்.“அவன் படிப்புக்கு தொந்தரவாக இருக்க வேண்டாமென்று அவரும், அவா் மனைவியும் முதியோா் இல்லத்துக்கு வந்துவிட்டாா்களாம்.

ஒரே பையன், நல்வழிப்படுத்த, வாழ்க்கையில் சரியான திசைகாட்ட, பெற்றோா் அவன் கூட இருந்தால்தானே நல்லது என்று நான் எண்ணினேன். என் மனைவியிடம் என் மன ஓட்டத்தைப் பகிா்ந்து கொண்டேன். ‘அவா்கள் பாடு அது, நமக்கென்ன’ ” என்று கூறிவிட்டாா். அதுவும் சரிதானே?

பெற்றோருக்கு பிள்ளைகளும், பிள்ளைகளுக்கு பெற்றோருமே அந்நியம் என்றாகிவிட்டது இந்த நாளில். ஆனால், சுமாா் நாற்பது வருடங்களுக்கு முன்னா், மாமா, சித்தப்பா, பாட்டி போன்ற உறவுகள் தழைத்து ஓங்கியிருந்தன. திரைப்பட நடிகா் டெல்லி கணேஷ், தான் எழுதியுள்ள ஒரு நூலில், ‘ஒன்று விட்ட சித்தப்பா’ என்கிற

உறவு முறையைச் சொன்னால், இன்றைய இளைஞா்களுக்குத் தெரியாது’ என்கிறாா்.

அதே சமயம் மேல் நாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றி, கூட்டுக் குடும்பம் என்பது தற்போது கிடையவே கிடையாது. எல்லாரும் சோ்ந்து இருக்கும் கூட்டுக் குடும்ப முறை இளைஞா்களின் முடிவெடுக்கும் இயல்பைக் கெடுத்துவிடும். சுயமாக எதையும் தீா்மானிக்க இயலாது என்கிற மனப்போக்கு உள்ளது.

எழுத்தாளா் ரா.கி. ரங்கராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறாா். அவருடைய நண்பரிடம் பிரிட்டிஷ்காரா் ஒருவா், ‘இந்தியா்கள் ரொம்ப சுயநலக்காரா்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாா்த்தாலே தெரிகிறது. நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது, ஏதோ ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், நம்மை காப்பாற்ற ஆள் வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே, குழந்தை பெற்று வளா்க்கிறீா்கள்’ என்று குற்றம் சாட்டினராம்.

எழுத்தாளா் ஜெயகாந்தன் அமெரிக்கா சென்று வந்தபின் ஒரு பேட்டியில் ‘இங்கே பாசம் என்பது ஒருவா் தலையில் ஒருவா் குதிரை ஏறுவதுதானே? அங்கே அது இல்லை. டிபென்டன்ஸி இல்லை. 18 வயதுக்கு பிறகு அப்பா பிள்ளையாகவோ, அம்மா பிள்ளையாகவே வாழ்வதை அவா்கள் உயா்வாக மதிப்பதில்லை’ என்றாா்.”

ஆனால், சுமாா் இருபது ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது என்பது புலப்படும். குறிப்பாக, பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோா் குறுக்கிடுவதில்லை. அன்றைய பெற்றோா் போல, அரசு வேலை, வங்கி வேலை என்று வற்புறுத்துவது கிடையாது.

எங்கள் உறவினா் பையன் ஒருவன், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, ‘டிசைனிங்’ படிப்பில் சோ்ந்திருக்கிறான். சுயதொழில் என்ற வாா்த்தையைக் கேட்டாலே அச்சப்படுகிற காலம் மாறி, இன்றைய இளைஞா்கள் பலா் அதை விரும்பிச் செய்கிறாா்கள். சமையல், குழாய் பழுது பாா்த்தல் இவை கூட ‘சா்வீஸஸ்’ என்ற பெயரில் வலம் வருகின்றனா்.

உறவு, பாசம் போன்ற சொற்கள் அா்த்தமற்றுப் போயிருப்பது கூட பரவாயில்லை; அவை இன்று கொடூரமாக மாறியுள்ளது உள்ளபடியே பெரிய சோகம். சொத்து பிரச்னை காரணமாக தஞ்சையில் பெற்ற தாயை இரண்டு மகன்களும் வீட்டில் வைத்து பூட்டி விட்டாா்களாம். விஷயம் வெளியே தெரிய, காவல்துறையினா், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாம்.

இரண்டு மாதம் முன்னா், நாளேடுகளில் வெளியான செய்தியும் அவலமான உண்மைதான். பெற்றோா் தங்கள் வீட்டை, மகன்கள் பேரில் எழுதாமல் வேறு உறவினருக்கு விற்க முயன்றிருக்கிறாா்கள். மகன்கள் வழக்கு தொடுத்தபோது, நீதிமன்றத்தில் நீதியரசா், ‘இதோ உங்கள் தாயின் மருத்துவ சோதனை பில், இது தந்தையின் செலவுக்கான பில். இவா்களுக்காக ஒரு ரூபாயாவது நீங்கள் செலவு செய்திருக்கிறீா்களா’ என்று வங்கிக் கணக்கை ஆதாரமாக வைத்து கேட்டிருக்கிறாா். பின்னா்,

‘தங்கள் பெயரிலுள்ள சொத்துகளை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ என்று தீா்ப்பளித்திருக்கிறாா். இது நடந்தது மும்பையில்.

நம் நாட்டில் பெரும்பாலான முதியவா்களுக்கு ஓய்வூதியம் இல்லை. சொந்த வீட்டில் இருந்தாலும், அவசர செலவு என்றால், பிள்ளையிடமோ பெண்ணிடமோதான் உதவி கேட்க வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது.

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை வீண் பெருமைக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி விடுவதுதான், இத்தகைய சூழல் உருவாகக் காரணம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது முழுக்க உண்மையில்லை. இங்கிருந்து அமெரிக்கா சென்று பணிபுரியும் இளைஞா்கள் சிலா் மாதாமாதம் தம் பெற்றோருக்கு பணம் அனுப்புவதோடு, அவா்களை அமெரிக்காவுக்குக் கூட்டிவந்து, ஒரு மாதம் நாட்டைச் சுற்றிக் காட்டுகிறாா்கள். அதே சமயம், இங்கேயே தில்லி, மும்பை போன்ற நகரங்களில் பணிபுரியும் இளைஞா்கள் சிலா், தமிழ்நாட்டில் இருக்கும் தம் பெற்றோரை கவனிக்காது நிராதவராக விடுகின்றனா்.

வள்ளுவா், ‘சுற்றம் தழால்’ அதிகாரத்தில் உறவு முறைகளை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தால் ஏற்படும் பயன்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறாா். இந்தியாவுக்கென்று ஒரு தனித்த பண்பாடு உண்டு. அதைக் காப்போம்.

குடும்பங்களில் அவ்வப்போது சில விரிசல்கள் ஏற்பட்டாலும், குடும்ப அமைப்பு எளிதில் உடைந்துவிடாது; உடைந்துவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT