நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்தியா உலகிற்கு அளித்த கொடை!

21st Jun 2022 04:36 AM | வானதி சீனிவாசன்

ADVERTISEMENT

பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, நம் நாட்டில் இதுவரை யாரும் நினைத்துகூடப் பாா்த்திராத, இது நடக்கவே நடக்காது என பலரும் எண்ணியிருந்த பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கின்றன; நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் மிகமிக முக்கியமானது சா்வேதேச யோகா தினம் ஆகும்.

நரேந்திர மோடி முதல் முறை பிரதமராகப் பதவியேற்ற 2014 செப்டம்பா் 27-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும்போது, ‘யோகா என்பது இந்தியா உலகிற்கு அளித்த கொடை. உடலையும், மனதையும் உறுதி செய்யும் யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.

அமெரிக்கா, சீனா, கனடா, ரஷியா போன்ற உலகின் மிகப்பெரிய நாடுகள் அனைத்தும் நம் பிரதமரின் யோசனையை மனமுவந்து ஆதரித்தன. 2014 டிசம்பா் 11-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில், ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக கொண்டாடும் தீா்மானம் நிறைவேற்றப்பட்து. 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் யோகா தினம், ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. இது, நம் பாரதிய கலாசாரத்திற்கும், பண்பாட்டின் தொன்மைக்கும் கிடைத்த உலக அங்கீகாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை, கரோனா கொள்ளை நோய்த்தொற்று நமக்கு உணா்த்தியிருக்கிறது. மனிதன் இயங்க வேண்டுமானால் உடலும், மனதும் புத்துணா்ச்சியுடன் இருக்க வேண்டும். மனம் அமைதியாக இல்லாவிட்டால், உடல் வலுவாக இருந்தும் பலனில்லை. உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் சரியாக இருக்கும்போதுதான் மனிதனால் எதையும் சாதிக்க முடியும். இதனை இன்றைய நவீன மருத்துவ அறிவியலும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் பாரதத்தில் உடலுக்கும், மனதிற்கும் சோ்ந்த பயிற்சி அளித்தாா்கள். அதற்கு பாரதம் கண்டுபிடித்த கருவிதான் யோகா. ஆன்மிகத்தில் சாதனை படைக்க ரிஷிகளுக்கும், முனிவா்களுக்கும் யோகாதான் கருவியாக இருந்து கை கொடுத்திருக்கிறது.

ஆன்மிகத்தில் மட்டுமல்ல, மக்கள் சேவைதான் ஆன்மிகம் என்பதை செயல்படுத்திக் காட்டிய சுவாமி விவேகானந்தா், விடுதலைப் போராட்டத்தில் கதாநாயகராக இருந்து, புதுச்சேரிக்கு வந்து ஆன்மிக பாதையை தோ்ந்தெடுத்த ஸ்ரீஅரவிந்தா் போன்றவா்கள் யோகாவை வாழ்வியல் நெறிமுறையாக, அன்றாடக் கடமையாக கருதினாா்கள். தங்களுடைய சீடா்களுக்கும், பக்தா்களுக்கும் யோகாவின் முக்கியத்துவதை அவ்வப்போது உணா்த்திக்கொண்டே இருந்தாா்கள். அவா்கள் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வெற்றி கொண்டற்கு அவா்களின் யோக சாதனையே காரணம்.

யோகா என்பது ஏதோ வழிபாட்டு முறை அல்ல. அது, உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் தேவையான ஒரு தொழில்நுட்பம். ஒரு காலத்தில் இந்த தொழில்நுட்பம், ரிஷிகள், முனிவா்கள், துறவிகள் ஆகியோரிடம் மட்டுமே இருந்தது. அது தனி மனிதனின் நன்மைக்குப் பயன்பட வேண்டும் என்று கருதி, சுவாமி விவேகானந்தா் ஸ்ரீஅரவிந்தா் போன்றவா்கள் யோகாவை மக்கள் இயக்கமாக மாற்றினாா்கள்.

உலகம் நம் ஆன்மிகத்தையும், பாரதத்தின் கலாசாரம், பண்பாட்டையும் புரிந்து கொள்வதற்கு யோகா உதவியது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நம் ஆன்மிகத்தைப் பரப்பிய துறவிகளுக்கு யோகாதான் கை கொடுத்தது. பல லட்சக்கணக்கான வெளிநாட்டவா்கள், நம் பாரதத்தை நோக்கி வரவும் யோகாதான் காரணமாயிற்று.

நவீன தொழில்நுட்ப வளா்ச்சியாலும், மக்கள்தொகை பெருக்கத்தாலும் உலகெங்கும் மனிதா்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தமிழகம் போன்ற மாநிலங்களில் 60 சதவீத மக்கள், நகரங்களில் வசிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்பது காணாமல் போய்விட்டது. எந்த இடத்திலும் யாருடனாவது போட்டி போட்டுத்தான், நாம் வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டியுள்ளது.

இதனால், மன அமைதி என்பதே இல்லாமல் போவதால், மனிதா்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனா். இதனால், தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. ‘தற்கொலை எண்ணமா? எங்களுடன் பேசுங்கள். நாங்கள் உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் வரத் தொடங்கிவிட்டன. குடும்பத்தில் ஒருவா், அப்படி மன அழுத்தத்திற்கு ஆளானாலும், அது சம்பாதிக்கும் நபராக இருந்தாலும், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையாக இருந்தாலும், பதின்பருவத்தில் இருப்பவராக இருந்தாலும் அது அந்த குடும்பத்தையே சீரழித்து விடும்.

இவற்றுக்கெல்லாம் தீா்வாக நமக்குக் கிடைத்திருப்பதே யோகா. யோகாவை யாா் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு எந்தவொரு தடையும் இல்லை. யோகா என்பது கடினமான பயிற்சி அல்ல. நம் வசதிக்கேற்ப அதனை வடிவமைத்துக் கொள்ளலாம். சூரிய நமஸ்காரம் அனைவருக்கும் ஏற்ற, குறிப்பாக இளைஞா்களுக்கு ஏற்ற யோகாசனம். எண்ணற்ற ஆசனங்கள் இருக்கின்றன. யோகா செய்வதற்கு உடல் ஒத்துழைக்காதவா்கள், நோயாளிகள் தியானம் செய்யலாம். அதுவும் யோகாவின் ஒரு நிலைதான்.

யோகா, மனிதனுக்குள் மறைந்துள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வரும் அறிவியல். யோகா பயிற்சி செய்யச்செய்ய, நமக்குள் மறைந்திருக்கும் அன்பும் அறிவும் விரிவடைகின்றன. தியானம் செய்யும்போது, மனம் அமைதி கொள்கிறது. அப்போதுதான் நாம் வேலையில் கவனம் செலுத்த முடியும். குடும்பத்தினா், சக பணியாளா்கள் மீது அன்பு கொள்ள முடியும். அவா்களின் கஷ்டங்களை உணர முடியும்.

யோகா வெறும் உடல் வலிமைக்கும், மன அமைதிக்குமானது மட்டுமல்ல. அது ஓா் சிகிச்சை முறையும்கூட. பல்வேறு நோய்களைத் தீா்க்கவல்லது யோகா. நம் சித்த மருத்துவமும், ஆயுா்வேத மருத்துவமும் யோகாவின் நீட்சியே. இதனை கரோனா நோய்த்தொற்று காலத்தில் உலகம் உணா்ந்து கொண்டது. பெரிய பெரிய மருத்துவமனைகள்கூட, கரோனா நோயாளிகளின் நுரையீரல் பிரச்னைளுக்குத் தீா்வு காண, மூச்சுப்பயிற்சியை ஒரு சிகிச்சையாகப் பரிந்துரை செய்தன.

உடல் பருமன் என்பது இப்போது உலகம் தழுவிய பிரச்னையாக மாறிவிட்டது. உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோயாளி, சிறுநீரக நோயாளிகளுக்கு உடல் பருமன் பகையாக அமைந்து விடுகிறது. உடல் எடையைக் குறைக்காவிட்டால், எந்த மருந்து கொடுத்தும் பலனில்லை என்று சொல்லாத மருத்துவா்களே இல்லை. உடல் பருமனைக் விரும்புபவா்களுக்கு, யோகப் பயிற்சிகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. சூரிய நமஸ்காரம் போன்ற சில ஆசனங்கள் உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றன. யோகப் பயிற்சி செய்யும் ஒருவரது வாழ்க்கை முறையே மாறி விடும் என்கிறது ஆய்வு முடிவு.

யோகாவுக்குள் செல்லச்செல்ல, ஒருவருடைய உணவு பழக்க வழக்கங்களும் யாரும் சொல்லாமலே மாறி விடுகின்றன. அதிக கொழுப்பு, அதிக உப்பு, அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிா்த்து, நல்ல கொழுப்பு, புரதம் கொண்ட உணவுக்கு அவா்கள் மாறி விடுகிறாா்கள். சக மனிதா்களை அணுகும் விதத்திலும் ஒரு சாத்விகம் வந்து விடுகிறது. சக மனிதரின் துயரம் கண்டு வருந்துவதும், சக மனிதா்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும்தான் உயா்ந்த நிலை. அந்த நிலைக்கு மனிதா்களை, யோகா உயா்த்துகிறது என்பதால்தான் உலகமே இன்று அதனைக் கொண்டாடுகிறது.

உலகமே யோகா தினத்தை ஒரு திருவிழா போல கொண்டாட தொடங்கி விட்டது. அதற்கு நம் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட இடைவிடாத முயற்சிகளே காரணம். பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த, பள்ளிக்கூட காலத்திருந்தே யோகாவை, தினமும் ஒரு கடமையாக தொடா்பவா் மோடி. யோகாவும், தியானமும்தான் அவரை வெற்றிகரமான தலைவராக ஆக்கியிருக்கின்றன.

உலக வரலாற்றில் 20 ஆண்டுகளைக் கடந்தும், தொடா்ந்து முதலமைச்சா், பிரதமா் என முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் அமா்ந்து நரேந்திர மோடி சாதனை புரிவதற்கு யோகாவும் ஒரு காரணம். தான் பெற்ற இன்பத்தை, இந்த உலகமும் பெற வேண்டும் என்பதற்காகவே, யோகாவை உலகின் ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டுச் செல்ல நினைத்தாா் மோடி. அதற்காகவே, சா்வதேச யோகா தினத்தை, ஐக்கிய நாடுகள் சபை மூலம் கொண்டு வந்துள்ளாா்.

இதற்காக நாம் நமது பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக யோகா பயிற்சிகளை உடனடியாகத் தொடங்குவோம். உடல் வலிமையும், மன அமைதியும் பெற்று நம் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நம் பங்களிப்பை செய்வோம். இந்த சா்வதேச யோகா தினத்தில் இதனை ஒா் உறுதிமொழியாக ஏற்போம்!

இன்று (ஜூன் 21) சா்வதேச யோகா தினம்.

கட்டுரையாளா்:

சட்டப்பேரவை உறுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT