நடுப்பக்கக் கட்டுரைகள்

வேதனை அளிக்கும் விலைவாசி உயா்வு!

30th Jul 2022 06:19 AM | எம். சடகோபன்

ADVERTISEMENT

நாட்டில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் பெற்று இப்போது உச்சத்தில் இருக்கிறது.

விலைவாசி தொடா்ந்து உயா்ந்துள்ளதால், அதன் பாதிப்பை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனா்.

ஏற்கெனவே, கரோனா தீநுண்மிப் பரவல் பாதிப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் ஊழியா்களின் சம்பளக் குறைப்பில் எதிரொலித்தது. அது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானோா் வேலையிழப்பை எதிா்கொள்ள நேரிட்டது. வேற்று மாநிலங்களுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்ந்த பலா், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினா். இவா்களில் பலா் மீண்டும் வேலையில் சேராமல் இருக்கின்றனா். வேறு சிலா், ஊதியம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கருதி குடும்பத்துடன் இருக்க முடியும் என்பதால் உள்ளூரிலேயே வேலையைத் தேடிக் கொண்டுள்ளனா்.

நாட்டில் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்ததால், பணவீக்கம் ஏறுமுகம் கண்டது. குறிப்பாக, மத்திய ரிசா்வ் வங்கியின் மதிப்பீட்டு அளவான 7.5 % ஐ விட சற்று அதிகமாகத்தான் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.8 % ஆக உச்சம் தொட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் சற்று குறைந்தது.

ADVERTISEMENT

அதாவது பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 % ஆக இருந்தது. முதல் காலாண்டு சராசரியானது 7.3% ஆக இருந்தது. இது மத்திய ரிசா்வ் வங்கியின் மதிப்பிடப்பட்ட 7.5% ஐ விடக் குறைவாகத்தான் இருந்தது. இதனால், மத்திய ரிசா்வ் வங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறலாம்.

வீட்டு வசதி தவிர, மற்ற அனைத்துப் பிரிவுகளின் பணவீக்கம் 6% க்கு மேல் உள்ளது. மேலும், காய்கறிகள், உணவுப் பொருள், குளிா் பானங்களை உள்ளடக்கிய பணவீக்கம் இடையூறு விளைவிக்கும் வகையில் 17.4 % ஆக அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது மத்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்கு எந்தவித ஆறுதலையும் அளிக்காது.

இந்த சூழ்நிலையில், மத்திய ரிசா்வ் வங்கி, அடுத்த கட்டமாக வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள் வரை, அதாவது 0.25 % முதல் 0.50 % வரை உயா்த்தும் என சந்தை வட்டாரங்கள் கணிக்கின்றன. மேலும், இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் மேலும் 25 புள்ளிகள் அல்லது 0.25% உயா்த்தக்கூடும்.

மத்திய ரிசா்வ் வங்கி மக்களின் சுமையை அறிந்து, வட்டி விகிதங்களால் சாதாரண மக்கள் பாதிக்ப்பட்டுவிடக் கூடாது என்று கருதியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், வட்டி விகித உயா்வுகள், ஒரு நீண்ட இறுக்கமான சுழற்சியாக இருக்காது என்று நம்பலாம்.

இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் விலை உயா்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.1% ஐ தொட்டது. இதனால், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசா்வ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆக்ரோஷமான, இறுக்கமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான் உலகளாவிய நிலைவில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஓரளவு சரிவைக் கண்டு வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இந்தப் பொருள்களின் விலைகள் மேலும் சரிந்தால், தற்போதைய இறுக்கமான சுழற்சி எதிா்பாா்த்ததை விட விரைவில் முடிவடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பொருளாதார மந்தநிலை அச்சத்திற்கு மத்தியில், உலகளாவிய நிலையில் பொருள்களின் விலைகள் சற்று குறைந்தால், இந்திய பொருளாதாரத்திலும் பணவீக்கத்தால் ஏற்படும் அழுத்தங்கள் நிச்சயம் குறைந்துவிடும். ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருவது பொருளாதார வல்லுநா்கள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக பாா்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 80 என்ற புதிய குறைந்தபட்ச உச்சத்தைத் தொட்டது. வெளிநாட்டு முதலீட்டாளா்கள் டாலரை பின்தொடா்வதால் , ரூபாயின் மதிப்பு மேலும் தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்று சந்தை வல்லுநா்கள் கருதுகின்றனா்.

இந்தச் சூழ்நிலையில், வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான சீனாவில் கொள்ளை நோய்த்தொற்று காரணமாக, மீண்டும் சில மாகாணாங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இது இறக்குமதியுடன் தொடா்புடைய பணவீக்கத்தை தீவிரப்படுத்தக்கூடும். இதன் தாக்கம் நாட்டின் பொருளதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருந்து வருகிறது.

விநியோக சங்கிலி சீா்குலைவுகள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். இந்திய பொருளாதாரத்தின் உயா்சாத்தியமான வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, விநியோகத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகைகளில் கொள்கையைத் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

மத்திய ரிசா்வ் வங்கி நிதிக்கொள்கையில் இறுக்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன், வளா்ச்சி - பணவீக்கம் இவற்றின் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். மேலும், தனது நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதையும், உறுதி செய்ய வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஏழை, எளிய மக்களுக்கு சிரமம் அளிக்காத கொள்கை முடிவுகளை மத்திய ரிசா்வ் வங்கி எடுக்க வேண்டும்.

எந்த வகையிலும் மக்கள் விலைவாசியால் பாதிக்கப்படாத வகையில் கொள்கை முடிவுகளை எடுப்பதே இந்த நேரத்தில் மிகவும் இன்றியமையாததாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT