நடுப்பக்கக் கட்டுரைகள்

வழிகாட்டுதல் தேவை

தி. ஜெயராஜசேகர்


கரோனா தீநுண்மி தொற்று வயதானவர்களின் வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற கவலை அவர்களின் உடல் நலனில் நம்மை கவனம் கொள்ளச் செய்தது. தற்போது இத்தொற்றின் உருமாற்றத்தின் தாக்கம் குழந்தைகள், இளைஞர்களின் உடல், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் 90% நாடுகள்  கொவைட் 19 பெருந்தொற்று தொடங்கிய நாளிலிருந்து அத்தியாவசிய சுகாதார சேவைப் பணிகளில் இடையூறினை சந்தித்து வருகிறது என்று சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. 
களப்பணி, மருத்துவமனை சேவையை உள்ளடக்கிய  குழந்தைகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பூசி பணிகளில் களப்பணியில் 70 சதவீதமும்,  மருத்துவமனை சேவையில் 61 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது.
குழந்தைகளுக்கு கரோனா தீநுண்மியின் பாதிப்பு  குறைவு என்ற அனுமானம் ஏற்புடையதல்ல. பல குழந்தை மருத்துவர்கள் அறிகுறியில்லா நிலையிலும் பரிசோதனையின்போது கரோனா தீநுண்மி  உறுதி செய்யப்பட்டு நோயாளிகளாக சிகிக்சை பெற்றனர். கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட ஐந்து மருத்துவர்களில் ஒருவர் குழந்தை மருத்துவராக இருந்தார் என்கிறது ஒரு தரவு.
இருப்பினும், குழந்தைகளிடையே ஏற்படும் தொற்றின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. இந்நோயிலிருந்து குழந்தைகளின் மீட்பு விகிதம் 99.99 சதவீதம் என்பது ஆறுதல். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 
இருப்பினும், கொவைட் 19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் குழந்தைகளிடையே பன்மண்டல அழற்சி நோய்க்குறி (மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்) ஏற்படுவது ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.
2020-ஆம்  ஆண்டு ஜூலை மாதம் முதல், நாடு முழுவதும் இந்த பன்மண்டல அழற்சி நோய்க்குறி அதிகரித்துள்ளது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதலை  பன்மண்டல அழற்சி நோய்க்குறி சிகிச்சை விதிகளுடன் சேர்த்து இந்திய குழந்தைகள் மருத்துவ மன்றம் வெளியிட்டது. 
பன்மண்டல அழற்சி நோய்க்குறி நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கு சிரை நரம்புவழி எதிர்ப்புப்புரதங்களும் (இன்டராவெனோஸ் இம்யூனோகுளோபுலின்) ஊக்கியமும் (ஸ்டெராய்டு) பயன்படுத்த நெறிமுறை வழிகாட்டுகிறது.
பன்மண்டல அழற்சி நோய்க்குறியின் சரியான காரணம் தெரியவில்லை எனினும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். உதாரணமாக, 2020-ஆம் ஆண்டில்  குஜராத் மாநிலம்  சூரத் நகரில் கொவைட் 19-க்கு பின்  இந்நோய்குறி கண்டறியப்பட்ட முதல் குழந்தை இருதய இடப்பகுதி தடுக்கிதழ் (மிட்ரல் வால்வு) சேதம் காரணமாக இன்னும் சிகிச்சையில் உள்ளது. 
இந்நோய்க்குறி பெரும்பாலும் குழந்தைகளிடையே மகுட உருதமனி (கரோனரித் தமனி) பிரச்னைகளை உருவாக்குகிறது. இந்த அழற்சி நோய்க்குறி ரத்த ஓட்டத்தில் ஏற்பட்டால் மூளை அல்லது நுரையீரலில் ரத்தப்போக்கை ஏற்படுத்தும். இது சில நேரம் இதயம், சிறுநீரகம், நுரையீரலை செயலிழக்கச் செய்து உயிரிழப்புக்கு காரணமாக  அமைகிறது.
இளமைப் பருவம் என்பது  சமூக, உடலியல், உளவியல் மாற்றங்களுடன் இணைந்த நரம்பியல் வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலம். இளமைக்காலமே பெரும்பாலான மனநல பிரச்னைகள் வெளிப்படும் காலம். மனநல பிரச்னையே இந்த வயதினரின் நோய்க்கும் இறப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. இளமைப் பருவத்தில் ஏற்பட்ட இரண்டாண்டு கால கரோனா தீநுண்மி, இளைஞர்களின் மனநலத்தை கடுமையாக பாதிக்கிறது.
கரோனா தீநுண்மி, உடல் ரீதியான பக்க விளைவுகளைத் தவிர குழந்தைகளின் நடத்தை மாற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டதால் குழந்தைகளிடத்தில் வலுச்சண்டைக்குப் போகும் உணர்வு, மனச்சோர்வு, பயம் ஆகியவை அதிக அளவில் தென்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 
கொவைட் 19 காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழக்க நேரிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஆகியவை குழந்தைகளிடத்தில் அதிக பதற்றத்தை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 
"லான்செட்' மருத்துவ இதழ், இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளில் நடத்திய ஆய்வின் அறிக்கை பெருந்தொற்றின் முதல் 14 மாதங்களில் 15 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துவிட்டதாகக் கூறுகிறது. இந்தியாவில் மட்டுமே  1,19,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளன. 
கல்வி நிறுவனங்களை திடீரென மூடுவது போன்ற சமூக விலகல் செயல்பாடுகள், குழந்தைகள், இளைஞர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கற்றல், ஊட்டச்சத்து வழங்குதல், விளையாட்டு, நண்பர்களின் தொடர்பு என  இவை அனைத்தும் நல்வாழ்வுக்கு முக்கியம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளை திடீரென மூடியபோது எந்த அரசாங்கமும் இம்மனநல தாக்கத்தின் விளைவை எதிர்கொள்ள போதுமான திட்டங்களை வகுக்கவில்லை என்பதே உண்மை.
உடற்பயிற்சியின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள் ஆகியவை குழந்தைகளின் எடை பிரச்னைக்கு வழிவகுத்தன. இவை அவர்களின் உளவியல் நல்வாழ்வை மேலும் பாதிக்கின்றன. பள்ளி நடவடிக்கைகளில் இருந்து நீண்ட காலமாக விலகியிருந்த குழந்தைகள் வழக்கமான நிலைக்கு உடனடியாக மாறுவது எளிதாக இருக்காது. கொவைட் 19-க்கு பிந்தைய உலகிற்கு அவர்கள் திரும்ப அவர்களுக்கு ஆசிரியர், பெற்றோர், மருத்துவர் ஆகியோரின் உதவியும் வழிகாட்டுதலும் கட்டாயம் தேவை.
சிறந்த எதிர்கால சந்ததி உருவாக, கல்வி, சுகாதாரம், சமூக கட்டமைப்பு ஆகியவற்றை மறுவடிவமைத்து, புதுப்பிப்பதற்கான நேரம் இது. நமது சொல்லாலும் செயலாலும் கடுமையான கொள்ளை நோய்த்தொற்றுகளையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இளம் மனங்களில் விதைப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT