நடுப்பக்கக் கட்டுரைகள்

விவாதமின்றி மேம்பாடில்லை!

க. பழனித்துரை

உலகத்தில் ஏறத்தாழ 80% மக்கள் மக்களாட்சிக்குள் வந்துவிட்டனர். அதேபோல் உலகில் 40% முதல் 50% மக்கள் கூட்டாட்சிக்குள் வந்துவிட்டனர். இவை இரண்டும் ஒரு நிலையில் சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் இன்று மக்களாட்சி மங்குவதும், கூட்டாட்சி அரசுகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதும் மானுடம் சந்திக்கும் பெரும் சவால்கள். 

கூட்டாட்சியும், மக்களாட்சியும் ஒன்றுக்கொன்று பலம் கூட்டி மக்களின் மேம்பாட்டிற்குச் செயல்படுபவை. இருந்தபோதும் இன்று அந்த இரண்டும் சிக்கலுக்கு உள்ளாகியுன்றன. இந்த சிக்கலுக்குத் தீர்வினைக் காண ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஜெர்மானிய நிறுவனமான ஹான்ஸ்சீடல் முன்னெடுத்த கூட்டாட்சி பற்றிய ஆய்வு. இந்தியப் பல்கலைக் கழகம் ஒன்று இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளது. 

அந்தப் பல்கலைக்கழகம் ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுத்து கூட்டாட்சி நடைபெறும் நாடுகளில்  ஆய்வுகள் மேற்கொண்டது. அதேபோல் இந்தியாவிலும் இந்த ஆய்வினை இந்தியக் கூட்டாட்சியில் மேற்கொண்டது. இந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் ஒரு வட்டமேஜை மாநாட்டை அந்தப் பல்கலைக்கழகம் நவம்பர் 15-ஆம் தேதி பெங்களூரில் கூட்டி இந்திய ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்தது. 

வெளிநாட்டு அறிஞர்களை காணொலிக் காட்சி மூலம் அந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்க வைத்தது. அந்த ஆய்வில் என்னையும் கருத்துரையாற்ற அழைத்திருந்தது அந்தப் பல்கலைக்கழகம். அந்த ஆய்வுக் கருத்தரங்கம் வரலாற்று ரீதியாக பழைமையான கூட்டாட்சி நடைபெற்று வந்த நாடுகளில்கூட இந்த சிக்கல்கள் உருவாகி நீடித்து வருவதை படம்பிடித்துக் காட்டியது. உலகில் தொடரும் தொழில் புரட்சிகள் மக்களாட்சியையும், கூட்டாட்சியையும் தாக்கி வருகின்றன என்பதை தரவுகள் மூலம் எடுத்து வைத்தனர் ஆய்வாளர்கள். 

அரசியலுக்கு இலக்கணம் வகுத்த ஹெரால்டு லாஸ்கி  1939ஆம் ஆண்டு கூட்டாட்சி பற்றி ஒரு கருத்தை பதிவு செய்தார். அவர் கூட்டாட்சிக்கான காலம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறினார். அப்பொழுது உலகில் நான்கு நாடுகள் மட்டுமே கூட்டாட்சியில் இயங்கின. கூட்டாட்சி பற்றிய ஆய்வில் வல்லுநரான கே.சி. வியர் அதற்கான முதன்மைக் காரணத்தை முன் வைத்தார்.தொழில் புரட்சி உருவாக்குகின்ற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வல்லமையைக் கூட்டாட்சி அரசாங்கங்கள் இழந்துவிட்டன. 

இந்தக் கூட்டாட்சி என்பது கூட்டுப் பொறுப்பின்மேல் கட்டமைக்கப்பட்ட ஆளுகைக்கான அமைப்பு. அதுமட்டுமல்ல கூட்டாட்சியில் அரசாங்கங்கள் ஒன்றையொன்று பரஸ்பரம் பேணி ஒன்றின்மேல் ஒன்று நம்பிக்கை வைத்து செயலாற்றும் அமைப்புகள். ஆனால் பல நாடுகளில் அரசாங்க அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கும் தலைவர்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் ஒற்றுமையை நிலைநாட்டிடவும் அதிகாரத்தை மையப்படுத்த வேண்டியிருந்ததால் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்துச் செயல்பட்டனர்.

இதன் விளைவு மாநில அரசுகள் மத்திய அரசின்மேல் நம்பிக்கை இழந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையும் பாதுகாக்க மத்திய அரசின் தலைமை தன் தலைமைத்துவத்தை வளர்த்து, மாநில அரசுகளின் தலைவர்களையும் மக்களையும் வசீகரித்திருந்தால் அதிகாரக் குவியலுக்கு வாய்ப்பிருந்திருக்காது என்றார். உலகில் மக்களாட்சி விரிவடைந்த நிலையில், அது கூட்டாட்சியை வலுப்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக அது எதிர்மறையாக செயல்பட்டிருப்பது வியப்படைய வைக்கிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது மக்களாட்சி விரிவாக்கம் என்பது அமைப்புக்களில் நடைபெற்றதேயன்றி அது நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் சமூகத்திலும் உருவாகவில்லை. இதனை கே.சி. வியர் தன் ஆய்வின் மூலம் விளக்கியுள்ளார். 

இன்றைய தொழில் புரட்சி என்பது நான்காம் நிலையை எட்டி இருக்கிறது. இது சமூக பிரச்னைகளை அரசுக்கு கொண்டு வந்திருக்கிறது. அவற்றைத் தீர்க்கும் சக்தியற்றதாக உலகம் முழுவதும் இன்றைய கூட்டாட்சி அரசாங்கங்கள் செயல்படுவதை இந்த ஆய்வுகள் மூலம் உணர முடிந்தது. நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ந்தாலும், சமூக மேம்பாட்டில் வளர முடியவில்லை; சமூக நீதியில் மேம்பட முடியவில்லை; மானுட மேம்பாட்டில் உயர முடியவில்லை; காலநிலை மாற்றம் தரும் சவால்களை சமாளிக்க முடியவில்லை. 

அரசால் சந்தையை நெறிப்படுத்த இயலாத சூழல், சமூகத்தை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய புதிய கண்டுபிடிப்புகள்போல் மக்களாட்சி அரசியலிலும் கூட்டாட்சி ஆளுகையிலும் புதுமைகள் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏற்படாததன் விளைவுதான் அதிகாரங்களை குவித்து மத்திய அரசு மக்களை அரசு இயந்திரங்கள் கொண்டு அடக்க முயல்கிறது. 

கூட்டாட்சி என்று பெயரிட்டுச் செயல்பட்டாலும், உண்மையில் மாநிலங்களைப் புறக்கணித்து மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஆளுகையிலும், நிர்வாகத்திலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. சமீபகாலத்தில் கூட்டாட்சியில் ஒரு புதுமை உருவாக்கப்பட்டது. மத்திய - மாநில அரசுகள் போல் உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கியதுதான் அந்தப் புதுமை. உலகத்தில் 80 நாடுகளில் புதிய உள்ளாட்சியை உருவாக்கி செயல்பட வைத்துள்ளனர்.

இதன் ஆற்றலை உணர்ந்த மக்களாட்சியில் பக்குவப்பட்ட நாடுகளில் அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கும், மாநில அரசாங்கங்களிலிருந்து உள்ளாட்சிக்கும் பரவலாக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி என்பது மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் உள்ள உறவுமுறை மட்டுமல்ல, மாநிலத்திற்கும் உள்ளாட்சி அரசுகளுக்கும் உள்ள உறவுமுறையும் கூட என்பதை உணர்ந்து செயல்படுகின்றன. ஆனால் இந்த நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

இந்தியா போன்ற நாடுகளில் இதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு செய்தபோதும், இந்த அதிகாரப் பரவலை மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சிக்குமானதாக உருவாக்கி செயல்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முன்வரவில்லை.  மாநில அரசுகள் உள்ளாட்சிக்கு அதிகாரமளித்து அரசாங்கமாக உருவாக்க முனையவில்லை. அது மட்டுமல்ல மாநிலத்திலிருந்து உள்ளாட்சிக்கு அதிகாரப்பரவலை முன்னெடுக்கும்போது, மாநிலத்தின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதன் விளைவாக மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்குக் கொடுத்த அதிகாரங்களில் பலவற்றை கூச்சமின்றி எடுத்துக் கொண்டன. இவற்றை ஆய்வு அறிக்கைகளின் மூலம் விவரித்தனர். 

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க எனக் கூறி அதிகாரங்களை மையப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுத்து பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தம் எனக் கூறி அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து பறித்துக் கொண்டது. 

இந்த அதிகாரக் குவியலுக்கு மாநில கட்சிகளும் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இணங்கிவிட்டு இன்று மாநில அரசின் அதிகாரங்களைக் காப்பதற்குப் போராடுவதாக அறிவிக்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தை வரவேற்கும் மாநில அரசுகள், சந்தையால் மாநில அரசுகள் அதிகாரங்களை இழக்கப்போகின்றன என்பதைப் புரிந்து கொள்ளாமல் சந்தைப் பொருளாதாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.

மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இப்படிப்பட்ட சிக்கல்களை தீர்த்துக்கொள்ள தேவைப்படுவது அறிவார்ந்த மேம்பாட்டு சீர்திருத்த அரசியல். ஆனால் பெரும்பாலான நாடுகளில் அந்த மேம்பாட்டு சீர்திருத்த அரசியலை முன்னெடுக்க ஆற்றலின்றி அரசியல் கட்சிகள் கட்சி அரசியலுக்குள் சிக்குண்டு தேர்தலை மையப்படுத்தி செயல்படுகின்றன.  

சந்தையில் நடைபெறும் புதுமைகள் போல், அரசியலிலும், ஆட்சியிலும், ஆளுகையிலும், நிர்வாகத்திலும் புதுமைகள் நிகழ விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான சிந்தனைத் தலைமை அரசியல் கட்சிகளில் உருவாக்கப்படவில்லை. தேர்தலை சந்திப்பதற்கே விளம்பரக் கம்பெனிகளைத் தேடி நிற்கின்றன கட்சிகள்.

இந்தியாவில் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து பல்வேறு ஆய்வு அறிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. ராஜமன்னார் குழு அறிக்கை, சர்க்காரியா குழு அறிக்கை, முதல் நிர்வாக சீர்திருத்தக்குழு அறிக்கை, இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக்குழு அறிக்கை, அரசியலமைப்பு மறுசீராய்வு அறிக்கை, பூஞ்ச் குழு அறிக்கை என பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டும், அவற்றின் மேல் எந்த குறிப்பிடத்தக்க விவாதமும் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படவில்லை. மக்களிடம் வாக்குகளைப் பெற அதிகாரக்குவிப்பு பற்றி பேசப்படுகின்றதே தவிர தீர்வை நோக்கிய விவாதத்தை பொதுத்தளத்தில் நம் அரசியல் கட்சிகளால் கொண்டுவர முடியவில்லை. 

அது மட்டுமல்ல, சந்தைப் பொருளாதாரத்தில் தோய்ந்துபோய் ஊழலில் சிக்குண்டு இந்த புது அரசியலை முன்னெடுக்க இயலாமல் வெற்று அரசியல் முழக்கத்துடன் முடித்துக் கொள்கின்றன நம் மாநிலக் கட்சிகள் என்பதனையும் நிபுணர்கள் எடுத்துக்காட்டினர். பொதுக்கருத்தாளர்கள் அறிவுத் தளத்தில் வைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றினாலன்றி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதையும் விளக்கினார்கள். இந்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக விரைவில் வெளிவர இருக்கின்றது. அவை வெளிவந்த பின்னராவது ஆக்கபூர்வ விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.  பார்ப்போம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT