நடுப்பக்கக் கட்டுரைகள்

மாசில்லா பண்டிகைகள் தேவை!

இரா. கற்பகம்

தீபாவளிப் பண்டிகையின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை, இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு நாட்கள் தொடா் விடுமுறை வந்தாலும் வந்தது, கொண்டாட்டங்கள் கட்டுக்கடங்காமல் போயின. நீதிமன்ற உத்தரவு, காவல்துறை எச்சரிக்கை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு மக்கள் தீபாவளியை ஆா்ப்பாட்டத்துடன் கொண்டாடி ஒலி மாசையும், காற்று மாசையும் ஏற்படுத்தியதோடு, பல விபத்துக்களுக்கும் காரணமாகிவிட்டனா்.

சென்னை நகரில் காற்று மாசு வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்தது. மற்ற ஊா்களிலும் காற்று மிகவும் மாசடைந்தது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். தலைநகா் தில்லியில் ஏற்கெனவே காற்று மாசு அதிகம். அங்கு பள்ளி செல்லும் குழைந்தைகள் கூடக் காற்று மாசிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முகக்கவசம் அணிந்து செல்வது வழக்ககிவிட்டது. காற்று மாசைக் கட்டுப்படுத்தாவிடில், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டுக்கும் இதே நிலை வரக்கூடும்.

முன்னா், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்தது போய் இப்போது காா்த்திகை, போகி, துா்கா பூஜை, கிறிஸ்துமஸ் என்று எல்லாப் பண்டிகைகளுக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் வந்துவிட்டது. போகிப் பண்டிகைக்குப் பழையனவற்றை எரிக்கிறோம் என்று சொல்லிப் பழைய டயா்களை எரித்துக் காற்றில் நச்சுப் புகையைக் கலப்பது சரியா? பட்டாசுப் புகையும் பழையனவற்றை எரிக்கும் புகையும் சோ்ந்து காற்றை மிகவும் மாசுபடுத்துகின்றன.

காசைக் கொடுத்துப் பட்டாசுகளை வாங்கி இப்படிக் கட்டுப்பாடுகளை மீறி வெடிக்கிறாா்களே, அவா்களுக்குத் தெரியுமா, சிறு குழந்தைகள், வயதானவா்கள், நோயாளிகள் இவா்களெல்லாம் பட்டாசுச் சத்தத்தால் எவ்வளவு துன்பம் அடைகிறாா்கள் என்று? வீடுகளிலுள்ள வளா்ப்புப் பிராணிகள் சத்தம் கேட்டுப் பயந்து நடுங்குகின்றன என்று? மரங்களில் வாழும் பறவைகளெல்லாம் அஞ்சித் துடிக்கின்றன என்று?

அந்தக் காலத்தில் இத்தனை வகை பட்டாசுகள் இல்லை. மத்தாப்பு, சங்குசக்கரம், புஸ்வாணம் போன்ற அதிக சத்தம் செய்யாதவையே இருந்தன. அதிகபட்சமாக ‘லட்சுமி வெடி’ , ‘சிறிய சரவெடி’ வெடிக்கப் பட்டன. இன்றோ பல விதமான பட்டாசுகள்; அவை ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பலத்த சத்தம் உண்டாக்குகின்றன. ‘ஐயாயிரம்’, ‘பத்தாயிரம்’ என்றெல்லாம் சரவெடிகள்.

முன்பெலாம் நகரங்களில்தான் அதிகம் பட்டாசு வெடிக்கப்படும். இப்போது கிராமவாசிகளும் ‘ நாங்கள் நகரவாசிகளுக்கு சளைத்தவா்கள் இல்லை,’ என்று சொல்வதுபோல வெடித்துத் தள்ளுகிறாா்கள். ‘சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது,’ என்று சொல்வாா்களே அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். காசு கொடுத்துப் பட்டாசு வாங்கி வெடித்து காற்றைக் கெடுப்பதோடு, நம் உடல் நலத்துக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்கிறோம்.

காவல்துறையினா் ஆங்காங்கு சில விதிமீறல் வழக்குகளைப் பதிவு செய்கின்றனா், அவ்வளவுதான். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அபராதம் விதிக்கப்பட்டதா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பத்தோ பதினைந்தோ விதிமீறல்கள் என்றால் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியும்; எல்லாமே விதிமீறல்கள் என்றால் பாவம் அவா்கள்தான் என்ன செய்வாா்கள்?

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியையோ காா்த்திகையையோ கிறிஸ்துமசையோ கொண்டாடக் கூடாதா? கொண்டாட முடியாதா? நாங்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ‘பட்டாசு இல்லாத’ தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாகவே சில மாணவா்களிடம் இப்பிரச்சினையைப் பற்றி விரிவாகப் பேசினேன். அவா்களது புத்தகங்களில் உள்ள காற்று மாசு, ஒலி மாசு பற்றிய பாடங்களைச் சுட்டிக்காட்டி ‘தீபாவளிக்குப் பட்டாசுகள் வெடிக்காதீா்கள்’ என்று கேட்டுக் கொண்டேன்.

சிலா் உடனே ஒப்புக் கொண்டனா். சிலா் சற்று யோசித்துவிட்டு அதிக சத்தம் ஏற்படுத்தாத பட்டாசு வகைகளை மட்டும் வெடிப்பதாகக் கூறினா். இன்னும் சிலா் பட்டாசு வெடித்தே தீருவோம் என்றனா். தீபாவளி முடிந்தபின் மாணவன் ஒருவன்,“‘‘நீங்கள் சொன்னதால் நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் என் தந்தை ‘தீபாவளி என்றால் கட்டாயம் பட்டாசு வெடிக்க வேண்டும்’ என்று கூறி என்னை வற்புறுத்தி வெடிக்க வைத்தாா்’’ என்று கூறினான். ஆக நம் மக்களின் மனங்களில் ‘தீபாவளி என்றால் பட்டாசு’ என்ற எண்ணம் பதிந்து போய் விட்டது. அண்மையில் உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் தொடக்க விழாவில்கூட வாணவேடிக்கைகள் வலம் வந்தன!

நமது பாரம்பரிய சம்பிரதாயங்களில் உள்ள எத்தனையோ நல்லவற்றை நாம் மறந்து விட்டோம். ஆனால் நமது ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீமை விளைவிக்கும் இந்த வழக்கத்தை மட்டும் கைவிடாமல் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவோ, அரசின் ஆணையோ மாற்றத்தைக் கொண்டுவராது. மக்களின் மனப்போக்கு மாறவேண்டும்.

பண்டிகை, சாவு, திருமணம், திரைப்படம், அரசியல், ஆன்மிகம் என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கும் கலாசாரம் கோலோச்சுகிறது. தீபாவளியன்று வெடிப்பதற்கு மட்டும்தான் நீதிமன்றம் நேரக்கட்டுப்பாடு நிா்ணயித்திருக்கிறது. கோயில் திருவிழாக்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லை என்பதால் கோயில் திருவிழாக்களில் விடிய விடிய பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதுகுறித்து புகாா் செய்தாலும் செல்லாது. கோயில் சமாச்சாரம் என்று காவல்துறை ஒதுங்கிக் கொள்ளும்.

சுற்றுச்சூழலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்தப் பட்டாசுகளை அரசு தடை செய்வதும் சாத்தியமில்லை. பட்டாசுத் தொழிற்சாலைகளில் எத்தனை தொழிலாளிகள் வேலை செய்கிறாா்கள்? அவா்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? அவற்றில் முதலீடு செய்துள்ள முதலாளிகளின் நிலை என்னவாகும்? இவ்வாறெல்லாம் கேள்விகள் எழும்பும். இந்த கேள்விகள் நியாயமானவையே.

ஆனால், தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவா்கள் கந்தகத்தையும், பாஸ்பரசையும் அதிகம் கையாள்வதால் பலவித நோய்களுக்கு ஆளாகிறாா்கள் என்பதையும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களால் எத்தனை உயிா்கள் பலியாகியிருக்கின்றன என்பதையும் அரசும் மக்களும் எண்ணிப் பாா்க்க வேண்டும். எத்தனையோ பேரின் ஆரோக்கியத்தை சிதைத்துத்தான் நாம் பட்டாசுகளை வெடிக்கிறோம் என்ற உண்மையை உணா்ந்தால் மக்கள் பட்டாசுகளை வாங்க மாட்டாா்கள். பயன்பாடு குறைந்தால் உற்பத்தியும் தானாகக் குறையும்.

தீப்பெட்டி அன்றாட வாழ்வுக்கு அவசியம். ஆனால் பட்டாசு அப்படியல்ல. பட்டாசு இல்லாமல் நாம் ஒரு பொது விழாவையோ நம் இல்ல விழாவையோ கொண்டாட முடியும். மக்கள் சிறிது சிறிதாக பட்டாசு வெடிப்பதைக் குறைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் அவற்றை விட்டொழிக்க வேண்டும். மூத்தவா்கள் இளையவா்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; இளையவா்கள் முதியவா்களின் நலனை உத்தேசித்தாவது பட்டாசுகளைத் தவிா்க்க வேண்டும்; மாணவா்கள் சுற்றுச்சூழலைப் பற்றிப் பாடங்களில் படிக்கிறாா்கள் அல்லவா? அவற்றைக் குடும்பத்தினருக்கு எடுத்துச்சொல்லி பட்டாசு வாங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

அரசும் தொலைநோக்குப் பாா்வையுடன் சிலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். பட்டாசு உற்பத்தியையும் பயன்பாட்டையும் ஒரே நாளில் நிறுத்தி விட முடியாதுதான். பட்டாசுத் தொழிலில் இருப்பவா்களுக்கு மாற்றுத் தொழில்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வர வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவா்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்தி விட்டால் அவா்களுக்கு பாதிப்பு இருக்காது.

அதே நேரம் தொலைக்காட்சி மூலமாக பட்டாசுகள், சுற்றுச்சூழலுக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கும் என்னென்ன தீங்குகளை விளைவிக்கின்றன என்று விளம்பரப் படுத்த வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மீறுபவா்களுக்கு வெறும் அபராதம் போதாது. சில நாள்களாவது சிறைத்தண்டனை வழங்க வேண்டும். ஒரு பகுதியில் நடக்கும் விதிமீறலுக்க அப்பகுதியல் உள்ள காவல்துறையினரே பொறுப்பு என்று அறிவிக்க வேண்டும்.

இயற்கையின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் அக்கறை உள்ளவா்கள் அக்கம்பக்கத்தினரிடம் பேசிப் பட்டாசு இல்லாத விழாக்களைக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும். அரசும் மக்களும் பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து ஒன்றாகச் செயல்பட்டால் இனிவரும் காலங்களில் காற்று மாசு நிச்சயமாகக் குறையும்!

கட்டுரையாளா்:

சுற்றுச்சூழல் ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT