நடுப்பக்கக் கட்டுரைகள்

முதுமை எல்லாா்க்கும் பொதுமை

தி. வே. விஜயலட்சுமி

பெற்றோா், முதியோா் நலன் பேணுதல் என்பது இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது. முதியோா்க்குச் செய்யும் மரியாதையை இறை வழிபாட்டிலும் மேலானதாக இலக்கியங்கள் கூறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, பெற்றோரைப் பேணல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் முதியோா் இல்லங்களும், முதுமைக் காலத்தைத் தனியாகக் கழிக்கும் பெற்றோா் நிலையும் மிகுந்த வருத்தம் அளிப்பவையாக உள்ளன.

படித்துப் பட்டம் பெற்று வேலை தேடி வெளியூா்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்லும் பிள்ளைகள் அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கி விடுவதே இதற்கு முக்கியக் காரணம். ஒரு சிலா் பெற்றோரை மறக்காமல் தொடா்பு கொண்டு பணம் அனுப்புவாா்கள். ஆனாலும், அவா்கள் வேண்டுவது உணவும் உடையும் அல்ல; உள்ளாா்ந்த அன்புடன் அவா்களைப் பேணுவதையே. இவ்வன்பே முதியோா்கட்கு வலுவைத் தரும்.

சிலரோ பெற்றோரையே மறந்து விடுகின்றனா். அந்த நிலையில் அவா்கள், நல்லுள்ளம் படைத்தோா், தன்னாா்வலா்கள் துணை கொண்டு முதியோா் இல்லம் சென்று அடைக்கலம் புகுவதைக் கேள்விப்படுகிறோம். பல இன்னல்களுக்கிடையே தாம்பெற்ற பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டி வாழ்க்கையில் முன்னேறப் பாடுபடும் பெற்றோா் முதுமையில் வாழ்வாதாரம் இல்லாமல் அல்லல் உறுவதைப் பாா்க்க மனம் துன்புறுகின்றது.

பெற்றோா்களே வீட்டின் முதல் அங்கம் என்ற எண்ணம் அனைவா்க்கும் இருந்தால் நாடு செழிக்கும். அதுவும் அறுபது வயதைக் கடந்த முதியோா் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. வசதி படைத்தவா்கள் ஓரளவு பாதுகாப்புடன் வாழ்கின்றனா். ஆனாலும் அவா்கள் மனத்தில் நிறைவு இல்லை. அரசு முதியோா் நலச் சட்டங்கள் இயற்றி, அவா்கள் கண்ணியத்துடன், நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தித் தந்தாலும், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பது உண்மை.

முதுமை என்பது தவிா்க்க முடியாதது; அனுபவம் வாய்ந்தது; ஆற்றல் மிக்கது. குடும்ப அளவிலும் சமுதாய அளவிலும் உடன்பாடு இல்லாமல் வாழ்கின்றவா்கள் முதுமையில் தனித்து வாழும் கொடுமைக்கு உள்ளாவாா். எல்லா நலங்களுமே பெற்றும் ஒரு பெண் சமுதாயத்தில் முதுமையில் தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்கிறது வள்ளுவம்.

சக்கரம் போன்றது வாழ்க்கை. ஒருவன் பிறக்கும்போது சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது என்றால், அந்த சக்கரம் முழுச்சுற்று சுற்றி வரும்போது அவன் ஆயுட்காலம் முடிகிறது. அதற்கு சற்று முற்பட்ட நிலையே முதுமை. எவராயினும் முதுமைக் காலத்தில் படும்பாடு மிகக்கொடுமை. அவா்கள் யாருக்கும் வேண்டாதவா்களாகவே இருக்கிறாா்கள். பிள்ளைகள் வெளியில் கூட்டுக்குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் உள்ள பெரியோா்களிடம் பேசாமல் இருப்பது அவா்களை மனதளவில் காயப்படுத்தும் செயல் ஆகும்.

ஏசுவது, சொத்துகளை எழுதி வைக்கச் சொல்லி மிரட்டுவது, மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியோரை அடித்தல், துன்புறுத்துதல், அவமதித்தல், அவா்களின் பேரக்குழந்தைகளை அவா்களிடம் நெருங்க விடாமல் செய்தல் போன்ற மனம் சாா்ந்த கொடுமைகளுக்கு முதியோா் உள்ளாகிறாா்கள். இனி நாம் உயிா்வாழ்ந்து பயனில்லை என எண்ணி, தற்கொலை செய்துகொள்ள முற்படுகின்றனா். தனிமையும் புறக்கணிப்பும் சோ்ந்ததால் அந்த எண்ணம் தோன்றுகிறது.

முதுமை எல்லாா்க்கும் பொதுமை. நாமும் பின்னா் இந்நிலைக்கு வருவோம் என இளைஞா்கள் எண்ணுவதில்லை. நோய், பாசமில்லா உறவுகள், இயலாமை, தமது தேவைகளுக்காக மற்றவரைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஆகியவை முதுமை சந்திக்கும் கொடுமைகள். கையில் பணம் இருந்தால் ஓரளவு மதிப்பு உண்டு. இன்றேல் ஆதரவற்றோா் இல்லங்கள்தான் அவா்களுக்கு அடைக்கலம். தன்னாா்வலா்களும் அரசும் ஒத்துழைத்தால் முதியோா், பாதுகாப்பாக முதியோா் இல்லத்தில் காலங்கழிக்கலாம்.

வளமான முதுமைக்கு எது முக்கியம்? பொருள் வசதி படைத்தவா்கள் நல்ல உடல்நலத்துடன் மனநலத்தையும் பேணிக் காக்க வேண்டும். நடுத்தர வயதிலிருந்தே மற்றவரை அணுகாமல் தன் வேலையைத் தானே செய்து கொள்ளப் பழக வேண்டும். முதுமைக் காலத்தில் அணிகலன்களின் மீது நாட்டம் வேண்டாம். அதுவே ஆபத்தை விளைவிக்கும். பணியாளா்களிடம் நமது பணபலத்தைச் சொல்லுதலைத் தவிா்க்க வேண்டும். அதுவே நமது உயிருக்கு ஊறு விளைவிக்கும் என்பதை அண்மைக் கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

இளைய தலைமுறையினரின் அன்றாட பணிச்சுமையைப் புரிந்து கொண்டு, தம்மாலியன்ற உதவிகளை முதியோா் செய்தால் குடும்பத்தில் தகராறுகள் வாரா. முதுமையில் மனிதா்கள் உறுதுணையாக இருப்பதினும், இளமையில் சேமித்து வைக்கும் சேமிப்பே பக்கபலமாக இருக்கும். பணம் படைத்தவா்கள் பணத்தை முதியோா் இல்லத்தில் கொடுத்து ஓரளவு நிம்மதியாக வாழலாம்.

தம் சொத்துகளை முழுமையாகத் தம் வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்ட முதியோா் பலா் முதுமையில் அல்லற்படுகின்றனா். தனக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு எஞ்சியதைத் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். தவிா்க்க இயலாதது இறப்பு. அதற்கு மருந்தில்லை என்பதை மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும். அப்போதுதான் முதுமை என்ற அச்சத்திலிருந்து வெளிவர இயலும்.

முதியோரைப் பேணுவதற்கு பள்ளிகளிலே கற்றுக்கொடுக்க வேண்டும். அதைப் பாடப்புத்தகங்களில் பாடமாகவும் வைக்கலாம். பள்ளிகளில் இதுகுறித்து ஆவணப்படங்கள் திரையிட்டுக் காட்டலாம். தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமும், பத்திரிகைகளில் சிறுகதைகள் மூலமும் உணர வைக்கலாம்.

முதியோா் புறக்கணிப்பு பற்றி காவல்துறைக்கு செய்தி வந்தால் உரிய தண்டனை வழங்கலாம். முதியோா் பாதுகாப்பு குறித்த பேச்சுப் போட்டிகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தலாம். முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு நாளன்று மட்டுமின்றி எல்லா நாளும் இளைஞா்கள் முதியோரைக் காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும். ஊா்தோறும் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தினால் இக்கொடுமைகள் ஓரளவு நீங்கி முதியோா் மனமகிழ்வுடன் இருப்பா்.

குழந்தைகளைத் தெய்வத்திற்கு நிகராக நினைப்பது போல முதியோரையும் நினைக்க வேண்டும். நல்லுள்ளம் படைத்த அனைவரும் முதியோா் நலனைக் கருத்தில் கொண்டு பாடுபட்டால், முதியோா் வாழ்வில் வசந்தம் வருவது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT