நடுப்பக்கக் கட்டுரைகள்

கல்வித்துறையில் கள்ளிச்செடிகள்!

தி. இராசகோபாலன்

 பெரும் மகசூலை எதிர்பார்த்துச் செழிப்பான நாற்றங்காலிலே, பயிரை நட்டுவிட்டு வரும் விவசாயியைப் போல, தரமான கல்வி நிலையங்கள் என நினைத்துப் பெற்றோர்கள் பயிர்கள் போன்ற உயிர்களை விட்டுவிட்டு வருகிறார்கள். விளைந்த கதிர்களை வெட்டுக்கிளிகள் வந்து கத்தரித்துப் போவது போல், ஆசிரியர் போர்வையில் இருக்கும் சில காமுகர்கள், அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகிறார்கள். தொடக்கப் பள்ளியின் தாழ்வாரத்திலிருந்து, பல்கலைக்கழகத்தின் படிக்கட்டு வரை எமனின் ஏஜெண்டுகள், ஆசிரியப் போர்வையில் அமர்ந்திருக்கிறார்கள்.
 சமூக விரோதிகளுக்காக குற்றவியல் சட்டங்கள் இயற்றப்படுவதுபோல், கல்வித்துறையில் புகுந்திருக்கும் சில காமுகர்களுக்காகவே போக்úஸா சட்டங்கள் பிறந்திருக்கின்றன. "மாதா பிதா குரு தெய்வம்' என்பது நம் நாட்டில் தொன்று தொட்டு பேசப்பட்டு வருகின்ற பொன்மொழி. மாதா பிதாவைக் காட்டுவார்; பிதா குருவைக் காட்டுவார்; குரு தெய்வத்தைக் காட்ட வேண்டும் என்பது அந்தப் பழமொழியின் எதிர்பார்ப்பு. சில நேரங்களில் குருவே தெய்வமாக அமைந்துவிடுவதும் உண்டு.
 சுவாமி விவேகானந்தர் கல்கத்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது "வில்லியம் ஹேஸ்டி' எனும் ஆங்கிலப் பேராசிரியரிடம் "உங்களால் கடவுளைக் காட்ட முடியுமா' எனக் கேட்டார். அதற்கு அவர், "என்னால் காட்ட முடியாது; ஆனால், அப்படிக் காட்டக்கூடிய ஒருவர் தட்சிணேஸ்வரத்தில், பரமஹம்சர் எனும் பெயரில் இருக்கிறார். அவரைப்போய் பார்' என வழி நடத்தினார்.
 சுவாமிஜி பரமஹம்சரை சந்தித்து, "நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா' எனக் கேட்டார். அதற்கு பரமஹம்சர், "பார்த்திருக்கிறேன். இதோ என் எதிரிலிருக்கும் உன்னைப் பார்ப்பதுபோல் இறைவனையும் பார்க்கிறேன். மேலும், அதிக தீவிரத்துடன் பார்க்கிறேன்' என்று சொல்லி, சுவாமிஜியினுடைய தோள்களைத் தொடுகிறார். அந்த நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும் விவேகானந்தர், "பிரபஞ்சத்தில் இறைவனைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை அவ்விடத்தில் உணர்ந்தேன்' என்று எழுதுகிறார்.
 பரமஹம்சர் நரேந்திரரின் தோளைத் தொட்டது, அவருக்கு வழங்கிய "ஸ்பரிச தீட்சை' ஆகும். அப்போது நரேந்திரருக்கு பரமஹம்சர் "தீட்சா குரு' ஆனார். நரேந்திரர் பரமஹம்சரைப் பார்த்தபொழுது மட்டும், "கடவுளைக் காட்ட முடியுமா' எனக் கேட்டாரே தவிர, அதற்குப் பின் தம் வாழ்நாளில் "ஏன் கடவுளைக் காட்டவில்லை' என்று தம் குருநாதரைக் கேட்டதே இல்லை. காரணம், பரமஹம்சரே நரேந்திரருக்குக் கடவுள் ஆனார். இன்றைய ஆசிரியர்களில் சிலர் கடவுளைக் காட்ட வேண்டாம்; காமுகர்களாக மாறாமல் இருந்தால் போதும்.
 "இராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார்; விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கியவர்களில் முதல் வகுப்பைச் சேர்ந்தவர்' என மகாகவி பாரதியார் எழுதியது, எத்தனைப் பொருத்தம் பாருங்கள்.
 தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரை அவருடைய தந்தையார் வேங்கடசுப்பையர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஒப்படைக்க மாயவரத்திற்கு அழைத்துப் போனார். முதல் சந்திப்பிலேயே, "ஒரு கடவுள் எப்படியிருக்கும் என மனத்திரையில் நான் எப்படி எழுதிக்கொண்டு போனேனோ, அப்படியே இருந்தார் என் குருநாதர்' என எழுதுகிறார், மகாமகோபாத்தியாய உ.வே.சா. இன்றைக்கு மாணவியரில் சிலர் ஆசிரியர்களை தெய்வமாக நினைத்துக் கொண்டு போனாலும், ஆசிரியர்களில் சிலர் மன்மதனாக மாறி, அவர்களை சுட்டெரித்து விடுகிறார்கள்.
 மன்னர் பாரி மாண்ட பிறகு, அவருக்கு ஆசானாக இருந்த கபிலர், பாரியின் மகள்களுக்குத் தாமே தந்தையாகி விடுகிறார். அவர்களுக்கு மணம் முடிப்பதற்காக பல மன்னர்களிடத்துச் சென்றும் தம் நோக்கம் நிறைவேறாததால், கடைசியில் வடக்கிருந்து திருக்கோவலூரில் உயிர் துறக்கிறார். அதனால், கபிலர் "புலன் அழுக்கற்ற அந்தணாளர்' என்று சங்கப் புலவர்களாலேயே போற்றப்படுகிறார். இன்றைக்கு புறநானூற்றை போதிக்கும் ஆசிரியர்களில் சிலர், கபிலர் ஆக வேண்டாம்; காமுகர்களாக ஆகாமல் இருக்கலாமே!
 அந்தக் காலத்தில் போதிக்கும் ஆசான்களை, நான்கு வகையாகப் பிரித்தனர். கல்வியைக் கற்றுக் கொடுப்பவர் "வித்யா குரு', தீட்சை அளிப்பவர் "தீட்சா குரு', ஞானத்தைத் தருபவர் "ஞானகுரு', உலகத்திற்கே போதிப்பவர் "ஜகத்குரு' என அழைக்கப்பட்டனர். இவற்றுள் ஞானாசிரியராகத் திகழும் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவினைக் கேட்ட ஓர் ஆங்கில மாது, அவருடைய ஞானத்திலும் அழகிலும் மயங்கி, நடு இரவு அவர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டினார்.
 கதவைத் திறந்து வெளியே வந்த சுவாமிஜியிடம், "உங்களுடைய பேச்சிலும் அழகிலும் நான் மயங்கிப் போனேன். நீங்களும் திருமணம் ஆகாதவர்; நானும் மணமாகாதவள். நீங்கள் என்னை மணந்து கொண்டால், உங்களுடைய ஞானத்திற்கும் என்னுடைய அழகிற்குமாக ஒரு குழந்தை பிறந்தால், அதைப் பார்த்து உலகமே அதிசயிக்குமே' எனச் சொல்லி, ஆசை வெட்கமறியாது என்பதை நிரூபித்தாள்.
 அதற்கு சுவாமிஜி, "உங்கள் ஆசைப்படி என்னுடைய ஞானத்திற்கும் உங்களுடைய அழகிற்குமாக ஒரு குழந்தை பிறக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் இப்போதே என்னை உங்களுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ளுங்களேன்' என்றார். அம்மையார் வெட்கித் தலைகுனிந்து சென்றார். இன்றைக்கு கவர்ச்சிகரமான ஊதியத்திற்காக ஆசிரியப் பணிக்கு வந்த சில காமுகர்கள், இதனைப் படித்தாவது பாடம் பெறலாமே!
 நல்லாசிரியர்களால் நல் மாணாக்கர்களை உருவாக்க முடியும் என்பதற்கு சிலரைச் சான்றாகச் சுட்டலாம். சுவாமி விவேகானந்தரை, அயர்லாந்தைச் சேர்ந்த சகோதரி நிவேதிதா ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவை ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.
 அதனை "அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய், ....... புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்' எனும் பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். சகோதரி நிவேதிதாவை ஞானகுருவாக ஏற்றுக் கொண்ட மகாகவி பாரதியாரை, அவருடைய சீடராகிய பாரதிதாசன் தமது குருவாக ஏற்றுக் கொள்கிறார்.
 "முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான்
 எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? ...........
 பாடலில் பழமுறை பழநடை என்பதோர்
 காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்,
 சுப்பிரமணிய பாரதி தோன்றி யென்
 பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்'
 என்பது பாவேந்தர் பாரதிதாசனார் தந்த வாக்குமூலம். பாரதியாரைப் பற்றி பேசுகின்ற போதும் எழுதுகின்றபோதும் பாவேந்தர், அவரை "ஐயர்' என்றுதான் குறிப்பிடுவார். நாம் ஜி.யூ. போப்பை போப்பையர் என்று அழைப்போமே, அதே பொருளில்தான், பாவேந்தர் குறிப்பிட்டதும்.
 இப்படியாக குரு - சீடர் பரம்பரை ஆரோக்கியமானதாகத் திகழ்ந்த காலம் ஒன்று நம் நாட்டில் உண்டு.
 என்றாலும், கல்வித்துறையில் காலங்காலமாய் சில கள்ளிச் செடிகள் தோன்றி, இளம்பயிர்களை சீரழித்ததுண்டு. ஆராய்ச்சித்துறையில் தம்மிடம் ஆராய்ச்சி செய்ய வருகின்ற மாணவியை சில நெறியாளர்கள், மகள் போல் பாவிக்காமல், மனைவிபோல் பார்த்துவிடுவதால், அரும்பு மலர்கள் வாடி வதங்கி உதிர்ந்து விழுகின்றன.
 நெறியாளர்களில் சிலர் வெறியாளர்கள் ஆவதை, தண்டியடிகள் எனும் வடமொழிக் கவிஞர், நேரடியாகக் கண்டு வன்மையாகக் கண்டிக்கிறார். "உன்னை விரும்பும் என்னை நீ விரும்பாதிருப்பது எங்ஙனம் என்று கேட்பது விரசம் அல்லவா' என்று கேட்கிறார், தண்டியடிகள்.
 நெறியாளர்கள் வெறியாளர்கள் ஆவதை, பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் எனும் மாபெரும் சித்தர், "ஒழிவில் ஒடுக்கம்' எனும் நூலில் ஓர் ஓவியம் ஆக்கிக் காட்டுகிறார். அடைமழை காலத்தில் குளம், குட்டைகளில் வாழ்கின்ற தவளைகள் இரவு முழுவதும் ஒருவகை வெறுக்கத்தக்க அலறலை எழுப்பி, எமனை வாவென அழைக்கும். அவ்வாறு ஒலியெழுப்பும் தவளைகளைப் பசியெடுத்த பாம்புகள் தேடிச் சென்று, தம் வாயில் பற்றிவிடும்.
 அப்படிப் பற்றிய பாம்புகள், ஒரே அடியாக அத்தவளையை விழுங்கி விடாமல், தம் வாயில் அடக்கியே, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்யும். ஆசிரியத்துறையில் நுழைந்த சில காமுகர்கள் அப்பாம்புகளைப் போன்று, தவளைகள் போல் மாட்டிக் கொண்ட மாணாக்கர்களை விழுங்கியும் விடாமல், துப்பியும் விடாமல் அணுஅணுவாகச் சித்திரவதை செய்கிறார்கள் என எழுதியுள்ளார்.
 ஷாஜஹான் - ஒளரங்கசீப் காலத்தில் (1666 - 1707) அரண்மனைஆசானாகத் திகழ்ந்தவர் சூபி ஞானி சையத் முகம்மத் குவானாஜி. ஷாஜஹான் அரசாங்க கஜானாவைக் காலி செய்ததற்குக் காரணம் சூபி ஞானி என்று கருதினான், ஒளரங்கசீப். மேலும் தமக்குக் கல்வி கற்பித்த காலத்தில் நாடுபிடிக்கும் ஆவலைத் தூண்டியவர் அந்த ஆசானே எனக் கருதிய ஒளரங்கசீப், அரியாசனத்தில் அமர்ந்தவுடன், அவரைப் பிடித்து சிறையில் அடைத்தான்.
 தொல்காப்பியரை அடுத்து, மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர். மொழிக்கு இலக்கணம் எழுதிய அந்தச் சமண முனிவர், அந்த மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இலக்கணம் வகுத்தார். நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் சொன்னார்; பொல்லாத ஆசிரியர்களின் குணங்களையும் சொன்னார். "குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை, கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை, நிலம் மலை நிறைகோள் மலர்நிகர் மாட்சியும், உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை ஆசிரியன்னே (நூற்பா : 26) என நல்லாசிரியர்களை இனம் காட்டியதோடு, பொல்லாத ஆசிரியர்களையும் அடையாளம் காட்டுகிறார்.
 "மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும், அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும், கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு ஒப்பன முரண்கொள் சிந்தையும் உடையோர் சிலர் ஆசிரியர் ஆகுதலே (நூற்பா 31) எனப் பொல்லாத ஆசிரியர்களின் குணங்களையும் இயம்பினார்.
 உயர்கல்வி எனும் சதுரங்கத்தில் ஓர் அரசனும், ஓர் அரசியும் இருந்தாலும், மைதானம் என்னவோ, கருப்பும் வெள்ளையுமாகத்தான் இருக்கின்றது.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT