நடுப்பக்கக் கட்டுரைகள்

கைத்தறிக்கு கைகொடுப்போம்

முனைவர் என். பத்ரி

சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கைத்தறி முத்திரையை அறிமுகம் செய்து வைத்தார். கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் அந்த நாள் கைத்தறி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறித்தொழில் விளங்கி வருகிறது. இந்திய பாரம்பரியத்தின் அங்கமான கைத்தறித்துறையில், நாடு முழுதும் சுமார் 43 லட்சம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.  

நம்நாடு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நெசவுத்தொழிலில் பல நுட்பங்களை புகுத்தி, உற்பத்தியில் தலைசிறந்து விளங்கி, உள்நாட்டு விற்பனை போக வெளிநாடுகளுக்கும் கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்து வந்தது. பருத்தி நெசவு, பட்டு நெசவு, கம்பளி நெசவு என எல்லா வகை நெசவுமுறைகளும் அன்றே நம் நாட்டில் நன்கு வளர்ந்து இருந்தன. 

இந்தியா பரந்த நிலப்பரப்பு என்பதால், நாட்டின்  ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப பல வகையான நெசவு முறைகள், ஆடை வடிவமைப்புகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தொடங்கி பல்வேறு வெளிநாட்டு வணிகர்களும் இங்கு வருகை தந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இங்கு நெசவு செய்யப்பட்ட கைத்தறி ஆடை வகைகளே. 

இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளில் இந்த கைத்தறி ஆடைகள் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக விளங்கின. பின்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சி இந்தியாவின் கைத்தறித் தொழிலை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. நெசவு இயந்திரங்கள் நவீனமயமானதால், லட்சக்கணக்கான கைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி, சின்னாளப்பட்டி, மதுரை, சத்தியமங்கலம், பவானி, கோயம்புத்தூர், சென்னிமலை போன்ற பல பகுதிகளில் கைத்தறி நெசவு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் கூட கோவை பகுதியில் கைத்தறி நெசவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

கோவை பருத்தி துணி வகைகள் வட இந்தியா வரை கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. விசைத்தறி வந்த பிறகு கைத்தறித் தொழிலை ஆதரிப்பவர் யாரும் இல்லாததால் அத்தொழில் தடுமாறத் தொடங்கியது. அரசாங்கத்தின் ஆதரவு இருந்தாலும், மக்களின் ஆதரவு குறைந்ததால் கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் சுமார் இரண்டரை லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் விலையில்லா வேட்டி} சேலை வழங்கும் திட்டம், அரசுப் பள்ளி, அரசு 
உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும், பண்டிகைக் காலங்களில் கைத்தறி துணிகள் விற்பனைக்கு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், நெசவாளர்களுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம், கைத்தறி ஆதரவு திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு - பாதுகாப்புத் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வட்டி மானியத் திட்டம், சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. 

கைத்தறி நெசவை லாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்தல், புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துதல், கைத்தறித் துணிகளை பரவலாக சந்தைப்படுத்துதல், கைத்தறி நெசவைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். 

தற்சார்போடு இயங்கிக் கொண்டிருந்த நெசவுத் தொழிலாளர்கள் பலர், இன்று தினக்கூலிகளாக மாறியது வேதனைக்குரியது. இன்றைக்கு நாம் வாங்கும் ஆடைகள் பெரும்பாலும் விசைத்தறியில் உற்பத்தியானவையே. 

விசைத்தறியில் உற்பத்தி செலவு குறைவு. அதில் உற்பத்தி செய்த ஆடையின் தரம் சிறந்தது என்ற உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளனர். ஒரு கைத்தறிப் போர்வை பத்து வருடங்களுக்கு உழைக்கும் என்றால், அதுவே விசைத்தறி போர்வையானால் இரண்டு வருடம் மட்டுமே உழைக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கைத்தறித் துணிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை. கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடையே பெருக வேண்டும். கைத்தறித் துணிகளை வாங்குவதன் மூலம் நெசவாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர நம்மால் உதவிட முடியும். கைத்தறி ஆடை அணியும்போது, நம் மனதில் தேசத்தின் மீது மதிப்பு பெருகும்.

ஒருவர் நெசவு செய்யும் போது அவர் குடும்பத்திலுள்ள அனைவருமே அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். நெசவு செய்த பின் அதனை விற்பனைக்குக் கொண்டு செல்லும் போது சீராட்டி வளர்த்த பெண்ணை அழைத்து செல்வது போன்ற உணர்வு அவர்களிடையே இருக்கும். 

வரும் காலங்களில் நெசவாளர்களின் குழந்தைகள்கூட கைத்தறியை கண்காட்சியில்தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உருவாகி விட்டது. நெசவுத் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், நாம் அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவதில் விருப்பம் காட்ட வேண்டும். அப்போதுதான் கைத்தறி நெசவுத் தொழில் புதுவாழ்வு பெறும். கைத்தறிக்கு கைகொடுப்பது நம் கடமை!

நாளை (ஆக. 7) கைத்தறி நாள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT