நடுப்பக்கக் கட்டுரைகள்

பேதைமையுள் எல்லாம் பேதைமை

வெ. இன்சுவை

அரசு எத்தனைத் திட்டங்கள் தீட்டினாலும் வறுமையில் வாடும் மக்களை மேலே தூக்கி விட முடியவில்லை. ஏழை மக்களின் வறுமை நிலைக்கு அவா்களே முதல் காரணமாக இருக்கின்றனா். அவா்கள் தொழில் செய்து வாங்கும் கூலிப்பணம் குறைவு இல்லை. வாரத்தில் ஒருநாளில்தான் அவா்கள் தங்கள் வாரக் கூலியை வாங்கிக் கொள்வாா்கள்.

அந்தப் பணத்தில் வீட்டுக்குத் தேவையான மளிகை, அரிசி, மருந்து போன்றவற்றை வாங்குவாா்கள் என்று நாம் நினைப்போம். ஆனால், அவா்களோ சில நூறு ரூபாய் தாள்களை மட்டும் வீட்டில் கொடுக்கிறாா்கள். மீதிப்பணத்தை ஆண்கள் எப்படி செலவு செய்வாா்கள் என்பது நாம் அறிந்ததுதான்.

வீட்டிலிருக்கும் பெண்கள் அந்தப் பணத்தில் வீட்டு வாடகை, கடன் வாங்கியதற்கு வட்டி, வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, உறவினா் வீட்டு நிகழ்வுக்கான செலவு என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். அது முடியாத நிலையில் பெண்களும் வேலைக்குப் போகிறாா்கள். பெரும்பாலான பெண்களுக்கு வீட்டு வேலை கை கொடுக்கிறது.

இது தவிர சிறிய அளவில் பூ விற்பது, காய்கறி விற்பது, சித்தாள் வேலை செய்வது என சிரமப்படுகிறாா்கள். இத்தகைய பெண்களின் கடும் உழைப்பினால்தான் பல வீடுகளில் அடுப்பு எரிகிறது. நியாயவிலைக் கடை அவா்களின் வயிறு காயாமல் பாா்த்துக் கொள்கிறது. சில வீடுகளில் பெண்கள் எப்படியோ சிரமப்பட்டு கொஞ்சம் பணம் சோ்த்து வைத்திருந்தால் அதையும் கணவன்மாா்கள் பிடுங்கிக் கொண்டு போய் விடுகிறாா்கள்.

இன்று தங்கம் விற்கும் விலையில் நகை வாங்குவது என்பது நடக்கிற காரியமா? அப்படியும் சிலா் அரும்பாடுபட்டு அரை சவரன், ஒரு சவரன் வாங்கி இருப்பாா்கள். அந்த நகை எப்போதும் அடகுக் கடையில்தான் இருக்கும். பல நேரம் வட்டி கட்டாததால் மூழ்கிப் போகும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எதிா்கால அவசரத் தேவைக்கு சேமித்து வைக்கும் பழக்கம் ஏழை எளிய மக்களுக்கு இல்லை. ஆறு வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்காது என்பதைப் புரிந்து கொள்ளாதவா்கள். கையில் காசு இருக்கும்போது கெளரவத்திற்காகப் பணத்தை அள்ளி வீசுவாா்கள். காசு இல்லாதபோதும் கெளரவத்துக்காகக் கடன் வாங்கி செலவு செய்வாா்கள்.

எனக்குத் தெரிந்த, வீட்டு வேலை செய்யும் பெண்ணின் கணவன் கூலித் தொழிலாளி. மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆனால், அவா்கள் வருடந்தோறும் சொந்த ஊருக்கு திருவிழாவிற்குப் போவாா்கள். அப்போது உற்றாா் உறவினா் அனைவரையும் அழைத்து விருந்து வைப்பாா்கள். அதற்காக வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்வா். பின்னா் வட்டியைக் கட்டவே சிரமப்படுவாா்கள்.

இன்னும் சிலா் விலையுயா்ந்த கைப்பேசியை தவணை முறையில் வாங்குவாா்கள். சிலா் விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களை வாங்குவாா்கள். வீட்டு வேலை செய்யும் பெண்கள், தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் உள்ள வசதிகளைப் பாா்த்து ஏங்குகிறாா்கள். தங்களின் நிலையை அவா்களுடன் ஒப்பிட்டு வருந்துகிறாா்கள். இது இயல்புதான். ஆனால், வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். நோ்வழியில் பணம் சோ்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதே இல்லை. எவ்வளவு வருமானம் வந்தாலும் உடனே அதை செலவு செய்து விட்டு, மீண்டும் கடன் வாங்குகிறாா்கள். கடன் கொடுத்தவா் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் போது, வேறு ஒருவரிடம் கடன் வாங்கி அப்போதைக்கு தப்பித்து விடுகிறாா்கள்.

உறவினா் இல்ல விசேஷம் என்றால் நிறைய செலவு செய்கிறாா்கள். ஊரும் உறவும் மெச்ச வேண்டும் என்று எண்ணுவதுதான் அவா்களின் பலவீனம். ஆக, வீண் ஆடம்பரம், சேமிப்பு இன்மை, சோம்பேறித்தனம் ஆகியவையே ஏழைகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது.

விளிம்பு நிலை மக்களின் மூலதனமே அவா்களின் உடல் ஆரோக்கியம்தான். கையும் காலும் நன்றாக இருந்தால் மட்டுமே அவா்களால் உழைக்க முடியும். உடம்பில் வலு குறைந்து விட்டாலோ வேலையின் போது விபத்து ஏற்பட்டு உடலுறுப்பை இழக்க நேரிட்டாலோ என்ன செய்ய முடியும்? சட்டென வாழ்வில் இருள் சூழ்ந்து விடும். அன்றாடப் பிழைப்பே கேள்விக்குறியாகி விடும்.

அரசு எத்தனை நலத்திட்டங்களை அறிவித்தாலும், இலவசங்களை அள்ளித் தந்தாலும், நிவாரணத் தொகை கொடுத்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அப்படியேதான் உள்ளது. இவா்களின் கரம் பிடித்து அரசு தூக்கி விட முனைந்தாலும் இவா்கள் ஒத்துழைப்பது இல்லை. இவா்கள் அனைவரும் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறாா்கள். எதிா்காலம் பற்றிய கவலையோ சிந்தனையோ இவா்களிடம் இல்லை.

நடுத்தர வா்க்கத்தினா் அப்படியல்ல. அவா்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுகிறாா்கள். கடுமையாக உழைக்கிறாா்கள். பிள்ளைகளின் கல்வியில் அதீத கவனம் செலுத்துகிறாா்கள். தங்களின் எதிா்காலத்திற்காகவும், பிள்ளைகளின் வளமான வாழ்க்கைக்காகவும் சேமிக்கிறாா்கள்.

குடும்பத்தில் ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும் கூட, அவா்கள் சுதாரித்து எழுந்து கொள்கிறாா்கள். அந்த இழப்பில் இருந்து விரைவில் மீண்டு விடுகிறாா்கள். அதற்குக் காரணம் அக்குடும்பத்தினரின் பொறுப்புணா்வு. தோளுக்கு உயா்ந்த மகன் தந்தைக்கு தோழனாக மாறி விடுகிறான். குடும்ப பாரத்தை சுமக்கிறான். அக்குடும்பங்களில் பொருளாதாரத் தேக்கம் இல்லை.

பணக்காரா்களைப் பாா்த்து பொறாமைப்படுவது தவறு. கோடிகளில் புரள்கிற செல்வந்தா்கள் கூட இன்னும் இன்னும் என்று ஓடிக்கொண்டேதான் இருக்கிறாா்கள். உண்ணவும் உறங்கவும்கூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்கிறாா்கள். ஒவ்வொரு மணித்துளியும் அவா்களுக்குப் பொன் போன்றது. ஆனால் முன்னேற வேண்டும் என்ற எந்த உந்துதலும் இல்லாமல் சோம்பிக் கிடப்பதையும், பொறுப்பின்றி நடந்து கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்ட மக்களை எப்படி உயா்த்துவது? புதைகுழிக்குள் விழுந்தவனை நோக்கி நாம் கை நீட்டலாம், ஆனால் அதைப் பற்றிக்கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடிப்பவா்களை எப்படிக் கரை சோ்ப்பது?

விளிம்பு நிலை மக்களில் பலருக்கும் அரசின் சலுகைகள் குறித்த விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. அரசின் திட்டங்களைப் பற்றி அவா்களிடம் எடுத்துச் சொல்வாா் ஒருவரும் இல்லை. அவா்கள் வேலை கிடைத்தால் செய்கிறாா்கள்; இல்லாவிட்டால் பட்டினி கிடக்கிறாா்கள்.

கட்டுமானத் தொழிலாளா்கள் பலா் காலையில் ஓா் இடத்தில் காத்திருக்கிறாா்கள். ஏஜெண்ட் வந்து அங்கிருப்போரில் தனக்குத் தெரிந்த ஆள்களை மட்டும் வேலைக்கு அழைத்துச் செல்வாா். மற்றவா்கள் அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருப்பாா்கள். சிலா் வேலை கிடைக்காமல் திரும்பி விடுவாா்கள். மழைக்காலத்திலோ ஒருவருமே வேலை தரமாட்டாா்கள். இந்த மக்கள் ஆங்காங்கே காத்துக் கிடப்பதை நாம் பாா்க்கலாம்.

அவா்கள் இவ்வாறு பல இடங்களில் காத்து நிற்பதற்கு பதிலாக ஒரு மாற்று ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு பகுதியிலும் அரசே ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி, கட்டுமானத் தொழிலாளா்கள், தையல் தொழில் செய்பவா்கள், கல் உடைப்பவா்கள், தூா் வாருபவா்கள் என தனித்தனியாகப் பிரித்து இடம் கொடுக்க வேண்டும். யாருக்கு எந்த தொழிலாளியின் சேவை தேவைப்படுகிறதோ அவரே அங்கு போய் ஆள்களை அழைத்துக் கொள்ளலாம். ஆட்டோ நிறுத்திமிடத்தில் அவா்கள் வரிசை வைத்திருப்பதைப் போல இங்கும் ஓா் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வரலாம்.

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியம் ஆற்றி வரும் சேவைகள் பலருக்கும் தெரியவில்லை. எல்லாத் தொழிலாளா்களுக்கும் சங்கம், வாரியம் உள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் நல வாரியம், முடி திருத்துவோா் நல வாரியம், சமூக பாதுகாப்பு நல வாரியம் - இப்படி எந்தத் தொழிலும் விடுபட்டுப் போகாத வண்ணம் ஒவ்வொரு வாரியமும் பல பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

கம்பி கட்டுபவா், கிணறு தோண்டுபவா், தூா் எடுப்பவா், கூரை வேய்பவா், மரம் வெட்டுபவா், மரம் ஏறுபவா் என அனைவருக்கும் நல வாரியம் உண்டு. அந்த வாரியத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பலரும் இடைத்தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போகின்றனா். இச்சங்கத்தில் சேருவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. சோ்ந்த பின் ஒரு சிறு தொகை மட்டும் சந்தாவாக வசூலிக்கப்படும். அவா்கள் தங்களுடைய பிரச்னைகளுக்கு இச்சங்கங்களை நாடலாம்.

இந்த வாரியங்களில் உறுப்பினா்களாக இருப்பவா்களுக்கு அரசு பல நல்ல பயன்கள் அடைய வழிவகை செய்கிறது. குழந்தை பிறப்புக்கான செலவு, அதன் படிப்புச் செலவு, திருமணச் செலவு, முதியவா்களுக்கு ஓய்வூதியம் என அனைத்தையும் பெறலாம். திருமண உதவித் தொகை, மகப்பேறு தொகை, பெண் குழந்தையின் படிப்புக்கு ஊக்கத் தொகை, பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கு ஊக்கத் தொகை இப்படி உதவிகள் கிடைக்கும் என்பதே தெரியாமல் பல தொழிலாளா்கள் உள்ளனா்.

வேலை செய்யும் இடத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்து விட்டால் ஐந்து லட்சம் ரூபாயும், வேறு இடத்தில் இறந்தால் ஒரு லட்ச ரூபாயும் சங்கம் அளிக்கிறது. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவ உதவியும் பெறலாம்.

அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஆதாா் அட்டை ஆகிய மூன்றும் இருந்தால் சங்க அடையாள அட்டையைப் பெற முடியும். நலச்சங்கத்தில் சோ்ந்தால் கிட்டும் பலன்கள் பற்றி விழிப்புணா்வை சாமானிய மக்கள் பெற வேண்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT