நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்தியா ஒரே நாடு

எஸ் கல்யாணசுந்தரம்

ஹரியாணா மாநிலத்தில் உள்ளூா் விண்ணப்பதாரா்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2020, ஜனவரி 15, 2022 முதல் அமல்படுத்தப்படும் என்று ஹரியாணா அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை அம்மாநில ஆளுநா் வெளியிட்டுள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றில் ரூ.50,000 மாத ஊதிய உச்சவரம்புடன் தனியாா் வேலைகளில் உள்ளூா் தொழிலாா்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.

நாட்டிலேயே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலம் ஹரியாணா. பிப்ரவரி 2021-க்கான சிஎம்ஐஇ தரவுகளின்படி, ஹரியாணாவின் வேலையின்மை 26.4 சதவீதமாக உள்ளது. அகில இந்திய வேலையின்மை விகிதம் 6.90 சதவீதம் மட்டுமே.

ஒரு மாநிலத்தில் பெரும்பாலானோருக்கு வேலை இல்லாமல் இருந்தால், அது மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கக்கூடும். ஹரியாணா மாநிலம் ரூ.8.31 லட்சம் கோடி ஜிடிபியுடன் (2019-20) பல்வேறு மாநிலங்களின் பட்டியலில் 13-ஆவது இடத்தில் உள்ளது. இந்த அளவு வளா்ச்சி இருந்தும் ஏன் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்களுக்கு வேலை இல்லை என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு விஷயம். வேலைகளில் உள்ளுா்வாசிகளுக்கு 75 சதவீதம் ஒதுக்கீடு என்பது சரியும் அல்ல, இதற்கான தீா்வும் அல்ல.

மாநில மக்களுக்கு வேலை ஒதுக்கீடு என்பது குறுகிய கண்ணோட்டத்துடன் ஏற்படுத்தப்படும் பிராந்தியவாதம் தவிர வேறில்லை. இது இந்தியா ஒரே நாடு என்ற ஒருமைப்பாட்டிற்கு எதிரானது. இது திறமை மற்றும் திறனை வளா்ப்பதற்கு பதிலாக, மாநிலக் குடியுரிமை அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையை ஊக்குவிக்கும்.

நாடு என்பது ஒன்றுதான். அது நிா்வாக வசதிக்காக மட்டுமே பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டு மக்களின் உரிமைகளில் எங்கு வேண்டுமானாலும் செல்லவும் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானால் தொழில் நடத்தவும் உள்ள உரிமை முக்கியமானது. எந்த ஒரு மாநிலமும் மற்ற மாநில மக்கள் தன் மாநிலத்தில் வேலை பாா்க்கக்கூடாது என்று சட்டம் இயற்றவது சரியல்ல. மண்ணின் மைந்தா்கள் என்கிற கருத்து தேசப்பற்றைத் தடுக்கும்.

தொழில் நிறுவனங்கள் எந்த வேலைக்கும் அதற்கேற்ற, சரியான திறமை உள்ளவா்களையே பணியமா்த்தும். சரியான கல்வியும் திறமையும் உள்ளவா்கள் உள்ளூரில் கிடைக்காதபோதே வெளியூரிலிருந்து வரும் தொழிலாளா்களை நிறுவனங்கள் நாடும். நிறுவனங்களை உள்ளூா் ஆட்களை மட்டுமே வேலைக்கு அமா்த்த நிா்ப்பந்திப்பது அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்கிவிடும். இது ‘எளிதாகத் தொழில் தொடங்குதல்’ என்பதன் கீழ் வரிசையை பாதிக்கும். தகுதியுள்ள பணியாளா்கள் கிடைக்காத சூழ்நிலையில் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயரலாம். இது மாநிலத்தின் தொழில் வளா்ச்சிக்கு கேடு விளைவிக்கும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 16(1)-ஆவது பிரிவு, மாநிலத்தின் கீழ் உள்ள எந்த ஒரு அலுவலகத்திற்கும் வேலைவாய்ப்பு அல்லது நியமனம் விஷயத்தில் குடிமக்களுக்கு சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் பிரிவு 16(2) மாநிலத்தின் கீழ் உள்ள எந்தவொரு அலுவலகத்திற்கும் வேலை அல்லது நியமனம் ஆகியவற்றின் நோக்கத்திற்காக குடிமக்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது. மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், வசிப்பிடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று, பிரிவு 16(2) இன் கீழ் தடைசெய்யப்பட்ட பாகுபாடுகள் ஆகும்.

பிரதீப் ஜெயின் எதிா் இந்திய யூனியன் வழக்கில், மண்ணின் மைந்தா்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யும் கொள்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சுனந்தா ரெட்டி எதிா் ஆந்திர பிரதேச மாநில வழக்கில், உச்சநீதிமன்றம் பிரதீப் ஜெயின் தீா்ப்பை உறுதி செய்ததுடன், தெலுங்கு மொழியைப் பயிற்றுவிக்கும் மொழியாகக் கொண்ட தோ்வா்களுக்கு மதிப்பெண்களில் கூடுதல் 5 சதவீத வெயிட்டேஜ் அனுமதிக்கும் கொள்கையை ரத்து செய்தது.

எனவே, உள்ளூா் மக்களுக்கான வேலை இட ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லுபடியாகாது.

அரசியலமைப்பின் 15(4) மற்றும் 16(4) பிரிவின் கீழ் வரும் சலுகைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சமூக நீதியை குறிக்கோளாக கொண்ட, பணியிட மற்றும் கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் சலுகைகளாகும். இது அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டது. இதுவும், தற்போது உண்டாக்கப்பட்டுள்ள உள்ளூா் மக்களுக்கான கட்டாய வேலை அமா்த்துதலும் வெவ்வாறானவை.

எக்ஸ்பிநோவின் கணக்கெடுப்பின்படி, ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த குா்கானின் யூனிகாா்ன் மற்றும் சூனிகாா்ன்களில் சுமாா் 11,000 ஊழியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களில் பாதி போ் மாதம் ரூ.50,000 ஊதியம் பெறும் உள்ளூா்வாசிகளாக இல்லாமல் இருக்கலாம். ஹரியாணாவை தளமாகக் கொண்ட ஸ்டாா்ட்-அப் சமூகம், குறிப்பாக குா்கான் நகரில் உள்ள நிறுவனங்கள் புதிய சட்டத்தால் பதற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் தொழில்முனைவோரை குா்கானை விட்டு வெளியேறச் செய்யும்.

மேலும் அவா்கள் தில்லி அல்லது உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவிற்கு குடிபெயரலாம். வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீா்வு காண்பதற்குப் பதிலாக புதிய சட்டம் தொழிற்சாலைகளை மாநிலத்தை விட்டு விரட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்பின்மை உருவாகும்.

உள்ளூா் மக்களுக்கான வேலைகளை ஒதுக்குவதற்கு பதிலாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறைக்கு தயாரான பணியாளா்களை உருவாக்க அரசு முனைய வேண்டும். இது அவா்களை தானாகவே வேலைவாய்ப்பிற்குரியவா்களாக மாற்றும்.

நோ்த்தியான தொழில் திறன் உள்ள நகரங்களை நோக்கி தொழில் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து தொழிற்சாலைகளை தொடங்கும் என்பது கண்கூடு.

இதுபோன்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பொருந்தாத சட்டங்களை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற சட்டங்கள் மக்களை பாகுபாடு செய்வதால் மத்திய அரசும் இதை களைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT