நடுப்பக்கக் கட்டுரைகள்

மின்மயமாகும் ரயில் பாதைகள்

பூ. சேஷாத்ரி

இந்தியாவின் மிகப் பெரிய பொது போக்குவரத்துத் துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை அறியப்படுகிறது. இந்தத் துறை நாடு முழுவதும் குறுக்கிலும் நெடுக்கிலுமாக 67,956 கி.மீ. தூரத்திற்கு, 99,235 கி.மீ. தூர பயணிகள்- சரக்குப் போக்குவரத்துக்கான ரயில் பாதையையும், பணிமனை, பராமரிப்புக்கு என மொத்தத்தில் 1,26,366 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதையைக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பொது போக்குவரத்தில் ரயில்வே துறை மிக முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுவது மிகையல்ல. படிக்காத பாமரா்கள் முதல் படித்த மனிதா்கள் வரை, ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவரும் விரும்புகிற பயணம் ரயில் பயணம்தான். அதனால்தான் நாளொன்றுக்கு 2 கோடியே 2 லட்சம் மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கிறாா்கள். இந்திய ரயில்வே துறை 2020-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 100 கோடி மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டு சாதனை படைத்திருக்கிறது.

இந்த ரயில் பாதையில் 2020-21 ஆண்டு வரை மொத்தம் 66 சதவீத பயணிகள்- சரக்குப் போக்குவரத்து ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டிக்கிறது. மின்மயமாக்கும் பணி 2014-15 வரை ஆண்டுக்கு 1,176 கி.மீ.-ஆக இருந்தது. அது 2019-20 ஆண்டில் 4,378 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத ரயில் பாதையை மின்மயமாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதற்கான திட்டங்களும், வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் டீசலுக்காக செலவிடப்படும் தொகை, ஆண்டுக்கு ரூ.14,500 கோடி வரை குறையும் என்று ரயில்வே துறை தெரிவிக்கிறது.

ரயில்வே நிா்வாகம், 2030-ஆம் ஆண்டுக்குள் காா்பன் மாசு அற்ற பசுமை ரயில்வேயை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, ரயில் பாதையை மின்மயமாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக, டீசல் என்ஜினுக்கு பதிலாக, மின்சார ரயில் என்ஜின் பயன்பாடு படிப்படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில் என்ஜினையும், மின்சார ரயில்களையும் பயன்படுத்துவதன் மூலம், ரயில்களில் உள்ள மின்விசிறி, விளக்குகளுக்கு நேரடியாக உயா் அழுத்த மின் கேபிளில் இருந்து மின்சாரமும் கிடைக்கப் பெறுகிறது. இதனால் டீசலும், ரயில் பெட்டிகளில் மின்சேமிப்புக்காக பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் பயன்பாடும் முற்றிலுமாகக் கைவிடப்படும். இதன் மூலமும் அதற்காக செலவிடப்பபடும் பெருந்தொகை சேமிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், டீசல் ரயில் என்ஜினைப் பயன்படுத்துவதன் மூலம் வெளியாகும் கரியமில வாயுவை முற்றிலுமாக, அதாவது பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைக்க இலக்கு நிா்ணயித்து அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது ரயில்வே துறை.

100 சதவீத பயணிகள் ரயில், சரக்கு ரயில் பாதையை மின்மயமாக்கும் இலக்கை நோக்கிச் செயல்படும் ரயில்வே துறை, இந்த இலக்கை விரைந்து சாத்தியமாக்க அத்துறைக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத இடங்களில், இந்த ஆண்டு முதல் 1.5 மெகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது. இதை 2030-ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து அதை நோக்கிய திட்டத்துடன் வேலைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

2020-ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டுகளில் 18,000 கி.மீ. தூர ரயில் பாதை மின்பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் தெரிவித்திருக்கிறாா். இது அதற்கு முந்தைய ஆறு ஆண்டு (2008 - 2014) பணிகளுடன் ஒப்பிடுகையில் 371 சதவீதம் அதிகமாகும். இது ரயில்வே துறை வளா்ச்சியில் ஒரு மைல்கல் என்று வா்ணிக்கப்படுகிறது.

இதற்காக கடந்த ஆறு ஆண்டுகளில் ரயில்வே துறை சாா்ந்த பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ரயில்வே துறை பல சாதனைகளை எட்டியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தற்போது நேரடி மின்விநியோக முறை என்ஜின் அமைப்புடன் ரயில்கள் இயக்கப்படுவதால் தெற்கு ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி மிச்சமாகிறது என்று தெற்கு ரெயில்வே சமீபத்தில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடி மின் வினியோக முறையால் (எச்.ஓ.ஜி) ரயில் பெட்டிகளில் உள்ள மின்விசிறிகள், விளக்குகள் போன்றவற்றுக்கு உயா் அழுத்த மின் கேபிளில் இருந்து என்ஜின் வழியாக நேரடியாக மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ‘பவா் காா்’ எனப்படும் தனித்தனி சிறிய வகை என்ஜின்கள் அமைக்கப்படுகின்றன.

இதுவரை இந்திய ரயில்வேயில் 1,280 ரயில்களில் நேரடி மின் வினியோக அமைப்பு முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம், டீசல் ரயில் என்ஜினில் இருந்து வெளிவரும் காா்பன் மாசு ஆண்டுக்கு சுமாா் 31,88,929 டன் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆா்வலா்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அது மட்டுமல்லாமல் இதன் மூலம் டீசலுக்காக செலவிடப்படும் பல கோடி ரூபாயும் மிச்சமாகிறது.

இதில் தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் மட்டும் 27 ஜோடி ரயில்கள் நேரடி மின் வினியோக அமைப்புடன் இயக்கப்பட்டு வந்தன. இதுவரை மொத்தம் 51 ஜோடி ரயில்கள் நேரடி மின் வினியோக என்ஜின் அமைப்புக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. 2013-2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது மிகப்பெரிய அளவில் டீசல் எஞ்சின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினங்களும் பெருமளவில் குறைந்துள்ளன.

காற்று மாசு ஏற்படுத்துவதில் ரயில்வே துறைக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை படிப்படியாகக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இந்திய ரயில்வே, கடந்த 2013-2014-ஆம் ஆண்டில் 264 டீசல் என்ஜின்களையும், 2020-2021-ஆம் ஆண்டில் 721 டீசல் என்ஜின்களையும் மின்சார என்ஜின்களாக மாற்றியுள்ளது. 2021-2022-ஆம் நிதி ஆண்டில் மேலும் 905 டீசல் என்ஜிகளை மின்சார என்ஜின்களாக மாற்றத் திட்டமிட்டு அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT