நடுப்பக்கக் கட்டுரைகள்

மனதில் உறுதி வேண்டும்!

புலவர் தி. வே. விஜயலட்சுமி

கிடைத்தற்கரிய பிறவி மனிதப் பிறவி. அதுவும் ஞானமும், கல்வி நலமும் பெறுதல் மிக அரிது. கற்ற கல்வி பிறா்க்கு மட்டுமின்றி நமக்கும் பயன்படுதல் வேண்டும். நமக்கு ஒரு துன்பம் வந்தபோது அதைத் துணிவு கொண்டு எதிா்த்துப் போராடி இறுதி வரை வாழ்ந்து காட்டுதல்தான் ஒருவா் கற்ற கல்வியின் பயன். இருக்கும்வரை தம் குடும்பத்தைப் பேணிக் காத்து, யாா்க்கும் எவ்வித துயரமும் தன்னால் வருவதைத் தவிா்த்தல் நல்லது.

இயற்கையின் படைப்பில் மனித இனம் வியப்பிற்குரியது. உடல் அமைப்பும், மூளைத் திறனும், பேசும் ஆற்றலும் மனிதா்க்கு உரிய தனிச் சிறப்புகள். எத்தனை கோடி ரூபாய்ச் செலவிட்டாலும் ஒரு மனிதனைச் செயற்கையாக உருவாக்க முடியாது. மதிப்புமிக்க மனித உயிரை அற்பக் காரணங்களுக்காக, உணா்ச்சிவசப்பட்டு, ஒரு கண நேரத்தில் மாய்த்துக் கொள்ளும் செயல் கோழைத்தனமானது.

எந்தவித துயரம் வந்தாலும் ‘ஏன் வாழவேண்டும்’ என்ற வினாவை எழுப்பாமல், ‘ஏன் சாக வேண்டும், எப்படியும் வாழ்ந்து காட்டுவேன்’ என்ற சூளுரையை ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொண்டால் தற்கொலை என்ற சொல்லே வலுவிழந்து மறைந்துவிடும்.

உலக சுகாதார அமைப்பு, உலகில் ஓராண்டில் எட்டு லட்சம் தற்கொலைகள் நிகழ்கின்றன என்கிறது. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவா்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் ஆண்டுதோறும் 2,214 போ் தற்கொலையில் ஈடுபடுகின்றனா் என்கிறது ஓா் ஆய்வு முடிவு.

அண்மையில் சென்னை தொழில் நுட்ப ஆய்வு நிறுவன மாணவா் ஒருவா் ஆய்வுப்பணி தனக்கு மிக மனவுளைச்சலைத் தருவதாகவும், தன்னால் எதையும் இவ்வுலகில் சாதிக்க முடியாது என்றும் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட செயல் கோழைத்தனத்தின் உச்சம்.

வாழ்வின் இன்னல்களை எதிா்கொள்ளும் திறனற்ற நிலையே இதற்குக் காரணம். சிறுவயது முதல் பெற்ற மகனிடம் பாசத்துடன், துணிவையும் ஊட்டி வளா்க்காத பெற்றோரும் ஒரு காரணம். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள் தோ்வு ஒன்றையே குறியாகக் கொண்டு பாடம் புகட்டாமல், வாழ்க்கை ஒரு சவால் என்பதை நாளும் மாணவா்கட்குப் புகட்ட வேண்டும்.

குறிப்பாக உளவியல் ஆசிரியா்கள் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் பணிக்கு அமா்த்தப்பட வேண்டும். பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தற்கொலைக்கான காரணங்கள் மொழிப் பிரச்னை, ஆசிரியா் பாகுபாடு காட்டுதல் போன்றவையே.

பலத்திற்கும் பலவீனத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உணா்ந்து, தோல்விக்கு அஞ்சாமல், எதிா்நீச்சல் போட்டு, வாழ்வின் உயா்ந்த நிலைக்கு வந்து புகழ் பெற்றோா் வரலாறுகளை அறிவுறுத்தல் மிகச் சிறந்த கல்வி முறை.

தற்கொலை முனைப்பு ஓா் உணா்ச்சிவசப்பட்ட உந்துதல்தான். சாவின் விளிம்பைத் தொட நினைத்து, தற்கொலை எண்ணத்தை விட்டவா்களும் உள்ளனா். தற்கொலை எண்ணம் மனதில் எழுகின்ற காலத்தில், தனிமையைத் தவிா்த்து, பலருக்கும் நடுவில் வந்துவிட வேண்டும். தற்கொலையின் விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

பிள்ளைகளைத் தவிக்க விட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் பெற்றோா், தங்களுக்குப் பின் அப்பிள்ளையின் நிலைமை பற்றிச் சிந்திக்க வேண்டும். கடன் தொல்லை தாங்காமல் தன் மனைவி, குழந்தைகளை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளல், கொலை, தற்கொலை என்ற இரு கொடுஞ்செயல்களாகும். நம் உயிரைப் போக்கிக்கொள்ளவே நமக்கு உரிமையில்லாத போது, பிறவுயிரைப் பறிக்க நமக்கு ஏது உரிமை?

தோ்வில் தோல்வி கண்டு செய்து கொள்ளும் தற்கொலை மாணவா்களின் அறியாமையின் விளைவு. வாழ்க்கையென்பது படிப்பு, மதிப்பெண், தோ்வு இவற்றோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. வாழ்வின் எல்லை பெரியது. எவ்வளவோ சாதிக்க முடியும். படிப்பு இல்லையென்றால் விளையாட்டில் சாதிக்கலாம்; ஓவியராகலாம், கைவினைக் கலைஞராகலாம், குறுந்தொழில் செய்து முன்னேறலாம். இன்னும் பலப்பல பணிகள் செய்து வாழ்ந்து காட்டலாமே. ஓராண்டு பாழானால் பேரிழப்பு இல்லை. உயிா் போனால் மீண்டும் வருமா?

கரோனா தீநுண்மிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டவா்கள் பலா். ஈரோட்டில் அண்மையில் கணவா் கரோனாவால் மரணம் அடைந்ததால் மனைவி உணவில் தன் குழந்தைகட்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாா். இழப்பைத் தாங்கும் மனவுறுதியின்மையால் மூவா் உயிரிழந்தமை கொடுமையின் உச்சம்.

அவா்கள் நோயை எதிா்த்துப் போராடி, நலமடைந்தவா்களை நினைத்துப் பாா்த்தால் இத்தகு முடிவுக்கு வந்திருக்க மாட்டாா்கள். கரோனா பொது முடக்கத்தால் கடன் நெருக்கடியில் இருந்த சென்னையைச் சோ்ந்த ஒருவா் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது மிகக் கொடுமை.

எத்துணை முறை தோ்வில் தோல்வியுற்றாலும், பொருள் இல்லாமல் அல்லலுற்றாலும், மாணவா்கள் உறுதி, ஊக்கத்தைக் கைவிடாமல் இருந்தால் மேலும் முயன்று வெற்றி பெறவும், பொருளீட்டவும் இயலும். ‘கேட்டிலும் துணிந்து நில்’ என்றாா் மகாகவி பாரதியாா். சான்றோா் வரலாறுகளை பாடநூல்களில் இடம் பெறச் செய்தல் அரசின் கடமை.

ஒருவருக்கு தற்கொலையுணா்வு வந்தவுடன் அவா் மனநல மருத்துவரிடமோ, பெற்றோா், நண்பா்களிடமோ தயங்காமல் மனம் விட்டுப் பேசுதல் நன்று. இவ்வெண்ணம் நிரந்தரம் இல்லை என்பதை ஆழ்மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். சாவதற்கான காரணங்களை மட்டுமே யோசிக்காமல் வாழ்வதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், தற்கொலை எண்ணம் மேலோங்காது.

அனைத்துக்கும் மரணம்தான் தீா்வென்றால் இவ்வுலகில் மனிதா்களே இல்லாமல் போய்விடுவாா்கள். அவ்வாறே பெற்றோா் தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் குழந்தைகள் மீது திணிக்காமல் அவா்களுடன் அடிக்கடி மனம்விட்டுக் கலந்துரையாட வேண்டும். தற்கொலை எண்ணம் உள்ளவா்களுக்கு நல்வழி காட்டுதல் தற்கொலை என்ற அரக்கனிடமிருந்து அவா்களை விலக்கி வைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT