நடுப்பக்கக் கட்டுரைகள்

விதிமீறல்களுக்கு அபராதம்

இரா. கதிரவன்

பல உயிர்களை பலிவாங்கும் விபத்துகளில் குடும்பத்தினருக்கு, அவசர நிவாரணமாக, உதவித் தொகையினை அரசு வழங்குகின்றது. சில விபத்துகள் குறித்த விசாரணை கமிஷன்களும் நியமிக்கப்படுகின்றன; ஆனால், பெரும்பாலும் சடங்குகள் இத்துடன் முடிவடைகின்றன என்பதும் வருத்தமான செய்திதான்.

விபத்துகளுக்கான அடிப்படையான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை முழுவதுமாக அகற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும். விபத்துகள் நிகழ்வனவல்ல - ஏற்படுத்தப்படுகின்றன என்று கூறப்படுவதுண்டு. ஊன்றிப் பார்க்கும்போது, தனி மனிதனின் அலட்சியம் மட்டுமே பிரதானக்  காரணமாக விளங்குவதனை உணரலாம்.

மேலும், விதிமீறல்கள் விபத்துகளுக்கு காரணமாக அமைவதனைப்போலவே, விதிகளை குறித்த விழிப்புணர்வின்மையும் காரணமாக அமைகின்றன. மேலை நாடுகளில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை இடையறாது தொழிற்கூடங்களில் - நிர்மாண கட்டட பணிகளில் செய்த வண்ணம் இருப்பர்.

தொழிற்கூடங்களில், அனைவரும் பங்குபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகள் - முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்து குறித்த உரையாடல் - விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை அக்குவேறு ஆணிவேராக அலசப்படும்.

பல மில்லியன் டாலர் செலவில் நடைபெறும் நிர்மாணப் பணியின் ஆய்வுக்கூட்டத்தில், அப்பணி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடியுமா, ,திட்டமிடப்பட்ட தொகைக்குள் நிறைவேற்றப்படுமா என்பன பற்றி பேசப்படுவதற்கு முன்,  விபத்துகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளனவா -அல்லது இனி அவை ஏற்பட வாய்ப்புள்ளனவா - அவற்றைத்  தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சரியானவைûயாக  உள்ளனவா என்பன குறித்தே விவாதிக்கப்படும். அவை குறித்த ,திருப்தியும் - முடிவும் எட்டப்பட்டாலன்றி அடுத்த விஷயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாட்டாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது.

இவை உணர்த்துவது என்னவென்றால், பாதுகாப்பு குறித்த புரிதலில் சமரசத்துக்கு இடமே இல்லை. உதாரணமாக, ஒரு விமான  ஓட்டியின் முன்னால் இருக்கும் (சுவிட்ச்களில்) - விசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறித்த அறிவு மட்டுமே அவனுக்கு உள்ளது என்றால், அவனிடம் விமானத்தை நம்பிக்கொடுப்போமா? அல்லது ஒன்றில் பாதியை மட்டுமே அறிந்த மருத்துவரை, வைத்தியத்துக்காக அணுகுவோமா?

இன்னும் ஒருசில தவறான கண்ணோட்டமும் நிலவுகிறது. பாதுகாப்பும் - காலதாமதமும் இணைபிரியாதவை என்பதும் அவற்றுள் ஒன்று. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உற்பத்திக்குறைவுக்கு வழி வகுக்கும் என்பனவுமாகும். இதனால், பல இடங்களில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுகின்றன. 

மாறாக, பாதுகாப்பு குறித்த புரிதல் - விழிப்புணர்வு ஆகியனவும் அதற்கான பொருள் செலவு, கால அவகாசம் ஆகியன,  உற்பத்தித்திறனை அதிகரிக்கவே செய்கிறது என்ற உண்மை மேலை நாடுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு, இவ்வுண்மை தொழிற்துறையின்  எல்லாத்தரப்பினராலும் ஏற்றும் கொள்ளப்பட்டு விட்டது என்பதும் கவனிக்க தக்கதாகும்.

இன்னொரு முக்கியமான அம்சம் : பாதுகாப்புடன் செய்யப்படும் வேலை  சிறப்பானதாக - உருவாக்கப்படும் பொருள் தரம் மிக்கதாக அமைகின்றது என்ற உண்மையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவற்றினைவிட இன்னொரு முக்கிய அம்சம், விபத்துகள் என்பன, தொழிற்கூடங்கள் - தொழிலாளிகள் சார்ந்த விஷயம்  மட்டுமே அல்ல; இது ஒவ்வொரு சராசரி மனிதன் சார்ந்த விஷயமும் ஆகும்.

ஒரு சங்கிலியின் பலம் என்பது,அதன் மிக பலவீனமான வளையத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஒரு குழுவின் திறமை என்பதும், அக்குழுவின் மிகக் குறைந்த திறன் கொண்டவனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோல, விபத்துக்களும், மிகக் குறைந்த விழிப்புணர்வு - புரிதல் கொண்டவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது - நிகழ்த்தப்படுகிறது எனலாம்.

அந்த அடிப்படையில் நோக்கும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும் - மீண்டும் வலியுறுத்துகிறேன் - ஒவ்வொரு மனிதனுக்கும் விபத்துகள் ஏற்படுவதற்கானக் காரணங்கள் குறித்த புரிதல் ஏற்படும் வரை விபத்துக்கள் தவிர்க்கப்பட இயலாது.

அது, பட்டாசுத்  தொழிற்சாலை - கட்டட நிர்மாணப் பணி - ஆழ்குழாய்கிணறு அமைத்தல் - கிணறுவெட்டுதல் - பாதாள சாக்கடை சுத்தம்செய்தல் - சாலையில் நடந்து செல்லுதல் - வாகனம் ஓட்டுதல் என எந்தவிதமான பணிக்கும் செயலுக்கும் பொருந்தும்.

இந்த புரிதல் - விழிப்புணர்வு என்பது, படித்தவர் - படிக்காதவர் - செல்வந்தர் - எளியோர் - ஆண் - பெண் என எல்லாத்தரப்பினருக்கும் ஏற்படுத்தப்படுதல் அவசியம். இப்பின்னணியில், விபத்துகளை அறவே ஒழிக்க, செய்யப்படவேண்டிய சில முக்கியமான நடவடிக்கைகள்.

பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கல்விக்கூடங்களில் இருந்தே முக்கியத்துவம் தரப்படவேண்டும். ஓட்டுநர் பயிற்சி, தொழிற்கூடங்களில் பாதுகாப்பு சார்ந்த தேர்வுகளில் கிஞ்சித்தும் சமரசம் கூடாது. தொழிற்துறை சாராத - சாமான்ய மனிதனின் பாதுகாப்பு விழிப்புணர்வு  இடையறாது அதிகரிக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தயும் விட, பாதுகாப்பு என்பது, நமது கலாச்சாரத்தின் அங்கமாக மாற்றப்பட வேண்டும் அதற்கான செலவினைச் செய்யத் தயக்கமும் கூடாது. எந்த ஓர் இடத்திலும் - எந்த ஒரு தனி மனிதனாலும், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதற்கல்ல என்ற உண்மை அனைவருக்கும் புரிய வேண்டும். 

உயிர்களும் உறுப்புகளும் விலை மதிப்பற்றவை என்ற ஆழமான புரிதல் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். விதிமீறல்களுக்கு பணமல்ல - உயிர்களே,உறுப்புகளே  - அபராதமாக செலுத்தப்படுகின்றன என்ற  உண்மை புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT